.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 28 December 2013

மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை; Superstition of the World




மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை....


 எல்லோருக்கும் வணக்கம், நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது.


மூட நம்பிக்கைகளுக்கு உதாரணம் சொல்வதென்றால், இன்னார் முகத்தில் ராசி என்று நினைத்துக்கொண்டிருப்பது, காரை முதலில் இயக்கும் போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சம் பலத்தை வைத்து நசுக்குவது, புதிய வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று கோழி அல்லது ஆடுகளை பலிகொடுப்பது, இப்படி வரிசையாக மூட நம்பிக்கைகளுக்கு இன்று முழுவதும் உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.


சரி., இந்த மாதிரியான மூட இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆம் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. அட அவ்வளவு ஏன் உழைப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டு மக்களிடையேயும் கூட சில மூட நம்பிக்கைகள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


ஜப்பான் நாட்டு மக்களிடையே ஒரு வினோதமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. பாம்புக்கறியை கன்னாபின்னாவென்று வெட்டும் ஜப்பானியர்களுக்கு பாம்பு தோல் என்பது மிகவும் புனிதமான பொருள் ஆகும். பாம்புத் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணி பர்ஸிலும், வீட்டில் பணம் வைக்கும் பீரோக்களிலும் வைத்துக்கொள்கிறார்கள். அப்படி வைத்துக்கொண்டால் பணம் பெருகி பலமடங்கு ஆகிக்கொண்டே இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதுவும் வெள்ளை பாம்பின் தோல் என்றால் இன்னுமும் ஸ்பெஷல். எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க ஜப்பானியர்கள் தயாராக இருப்பார்கள். உழைப்புக்கு பெயர்போன ஜப்பானிய மக்களிடையே இப்படி ஒரு மூடநம்பிக்கை இருப்பது விந்தையிலும் விந்தை.


நம்மவர்கள் முக்கியமான வேலைக்காக வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அவ்வளவுதான். மீண்டும் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தாமல் மீண்டும் வெளியே செல்ல மாட்டார்கள். இதைப்போல கொரிய நாட்டு மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. என்னவென்றால் முக்கியமான வேலை நிமித்தமாக வெளியே செல்லும் போது காகத்தை பார்த்து விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அப்செட் ஆகிவிடுவார்கள். மீண்டும் வீட்டுக்குள் வந்து அமர்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான் செல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


பிரேசில் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. அங்கே எந்த ஹோட்டலுக்கு சென்று காப்பி அல்லது டீ கேட்டீர்கள் என்றால் கப்பை எடுத்துக்கொண்டு முதலில் அதில் சர்க்கரையைத்தான் போடுவார்கள் பிறகுதான் தேயிலை தூள், டிகாஷன் மற்றும் பால் சேர்ப்பார்கள். மறந்தும் கூட கப்பில் முதலில் பாலையோ அல்லது டிகாஷனையோ ஊற்ற மாட்டார்கள்.


காபியோ அல்லது டீயோ தாயாரிக்கும் போது முதலில் சர்க்கரையை போட்டால் பணம் நம்மிடம் வந்து குவியும் என்றும் அவ்வாறில்லாமல் இறுதியில் சர்க்கரையை போட்டால் நம்மிடம் இருக்கும் எல்லா பணமும் நம்மை விட்டு போய் நாம் ஏழைகள் ஆகிவிடுவோம் என்பதும்  அங்கே காலம் காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒரு நம்பிக்கை ஆகும். தெரியாத்தனமாக அங்கே டீ அல்லது காப்பி தயார் செய்கையில் முதலில் சர்க்கரை அல்லாமல் வேறு எதையும் போட்டோமானால் அவ்வளவுதான் நம்மை அடிதுவைத் தெடுத்துவிடுவார்கள்.


நம்ம ஊரில் நரிகொம்பு விற்கும் நரிக்குறவர்களை போல மெக்ஸிகோ நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் முயலின் வால் மற்றும் தோல் விற்பவர்கள் ஆவர். காரணம், வீட்டில் முயல் தோலோ அல்லது வாலோ இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் எல்லாருடைய முயற்சிகளும் எந்த தடையும் இல்லாமல் வெற்றியடைந்து சிறப்பாக வாழ்வார்கள் என்பது மெச்சிக்கோ நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.


எந்த பாத்திரமாக இருந்தாலும் சரி, ஒரு வேலை அது புதிய பாத்திரங்களாகவே இருந்தாலும் சரி, அந்த பாத்திரத்தின் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய நசுங்கள்கள் இருந்தாலும் அந்த பாத்திரங்களை ரஷ்ய மக்கள் பயன்படுத்த மாட்டார்கள், அதே போல் உடைந்த கண்ணாடியிலும் ரஷ்ய நாட்டு மக்கள் முகம் பார்க்க மாட்டார்கள்.


இதைப்போல எண்ணற்ற மூடநம்பிக்கைகளும் மூட பழக்கங்களும் உலகெங்கும் எல்லா நாடுகளிலும் எல்ல இடங்களிலும் உண்டு, ஆகையால் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் இந்தியாவில் மட்டும் தான் காணப்படுகிறது என்று எண்ணி நம் மக்களை வசை பாடிக்கொண்டிருக்க வேண்டாம். அது எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா இடங்களிலும் புரையோடிக்கிடக்கும் ஒரு பழக்கம் தான்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top