.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 14 August 2013

இந்தியா வல்லரசாவதில் மாணவர்களின் பங்கு..!! பேச்சுப் போட்டி!



 இந்தியா வல்லரசாவதில் மாணவர்களின் பங்கு..!!






ஆண்டவன் படைச்சதுலயே
ரெண்டு சிறந்த விஷயம்.

ஒண்ணு - இந்தியா
இன்னொன்னு - இந்தியன்ஸ்..

2020-ல இந்தியா வல்லரசு ஆகணும்.
அது நம்ம கனவு, இலட்சியம்.

சரி.. முதல்ல வல்லரசுன்னா என்ன..?

1. அணு ஆயுதம் வெச்சி இருக்கறதா.?
2. ஐ.நா.சபை சொல்றதை கேக்காம இருக்கறதா..?
3. மத்த நாடுகள அதிகாரம் பண்றதா.?
இல்ல..
4. ஏமாந்த நாடுங்க கூட சண்டைக்கு போறதா..?

இப்படி இருந்தா தான் வல்லரசா..?

No..!!

எந்த ஒரு நாடு
1. கல்வி.,  2. உணவு உற்பத்தி., 3. மருத்துவம்.,
4. தொழில் நுட்பம்., 5. பாதுகாப்பு

இந்த 5 துறைலயும் தன்னிறைவு
அடைஞ்சி இருக்கோ அதுதான்
வல்லரசுன்னு அப்துல் கலாம் சொல்றாரு..

இதுவரைக்கு இருந்த வல்லரசெல்லாம்
ஒரே மாதிரி - ஆனா இனிமே
இந்தியா தான் உலகத்துக்கே முன்மாதிரி

ஒரு நாட்டின் முழுமையான வளர்ச்சியை,
அந்த நாட்டில் இருக்குற குழந்தைகளோட
கல்விதான் நிர்ணயிக்குது..

கல்விதுறை வளர்ந்தாலே மத்த
எல்லா துறையும் தானா வளர்ந்துடும்..

இவரு பணக்காரரா இருந்தாரு..
இப்ப ஏழையாயிட்டாருன்னு சொல்லலாம்..
இவரு பலசாலியா இருந்தாரு..
இப்ப நோயாளி ஆயிட்டாருன்னு சொல்லலாம்..
ஆனா யாராவது இவரு 10வது படிச்சவரு.
இப்ப 8வது ஆயிட்டாருன்னு சொல்ல முடியுமா.?

கல்வி தான் அழியாத சொத்து..

அதனால நாம எல்லோரும்
நல்லா படிக்கணும்..

அது மட்டும் போதுமா நம்ம நாட்ல
இன்னும் 4 கோடி குழந்தைகளுக்கு
சரியான கல்வி கிடைக்கல..

அந்த நிலைமை மாறணும்..

"எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லனவே எண்ண வேண்டும்.
பாரதி சொல்றரு..

இந்த நிலைமை மாறணும்னு
நல்ல எண்ணம் இருந்தா மட்டும்
போதாது. நாமளும் எதாவது பண்ணனும்..

என்ன பண்ணலாம்..?

நாம எல்லோரும் லீவ் நாள்ல
பக்கத்தில இருக்கிற கிராமத்துக்கு
போயி அங்கே இருக்குற குழந்தைகளுக்கு
எழுத படிக்க Help பண்ணணும்..

அதுக்காக நம்ம டீச்சர்ஸ்
கம்மியா Home work குடுத்து
நமக்கு Help பண்ணனும்..

நம்ம வீட்டை சுத்தி, ஸ்கூலை சுத்தி
மரம் நட்டு வளர்க்கணும்..

நம்ம நாடு வளர இந்த மாதிரி
சின்ன சின்ன விஷயங்கள
நாம செஞ்சாலே போதும்..

இதெல்லாம் நீங்க பண்ண
போறீங்களான்னு சந்தேகமா பாக்காதீங்க..
கண்டீப்பா பண்ணுவோம்

நாங்கல்லாம் ஒரு தடவை முடிவு
பண்ணிட்டா.. எங்க பேச்சை நாங்களே
கேக்க மாட்டோம்..

சரி.. இப்ப கஷ்டப்பட்டு நல்லா
படிச்சிட்டோம்.. அது மட்டும் போதுமா.?

இனிமே தான் இருக்கு முக்கியமான
மேட்டர்..

இன்னிக்கு இந்தியா தான் உலகிலயே
மிக இளமையான நாடு..

117 கோடி மக்கள்ல 54 கோடி பேர்
இளைஞர்கள்..

திறமையும், உழைப்பும் இருக்குற
பெரிய இளைஞர் சக்தி நம்ம பலம்..

ஆனா இந்த மாபெரும் இளைஞர் சக்தி
" டாலர் " கனவுல தன் அறிவையும்
உழைப்பையும் வேற நாட்டு
வளர்ச்சிக்காக பயன்படுத்திட்டு இருக்கு..

அமெரிக்கா டாக்டர்கள்ல - 38% இந்தியர்கள்..

நாசா விஞ்ஞானிகள்ல - 36 % இந்தியர்கள்..

பில்கேட்ஸ் கம்பியூட்டர் கம்பெனியில
- 34 % இந்தியர்கள்..

நம்ம ஆளுங்களால தான் அமெரிக்கா
இன்னிக்கு வல்லரசா இருக்கு..

இப்ப புரியுதா..
இந்தியா தான் டாப்பு..
அமெரிக்கால்லாம் வெறும் டூப்பு..!!

உலகத்தையே கட்டி ஆளுற திறமை
இருக்கிற இந்திய இளைஞர்கள்
நம்ம நாட்டு வளர்ச்சியில அக்கறை
காட்டினா நாம தானே அடுத்த வல்லரசு..

நேற்றைய உலகம் அமெரிக்கா கையில்......!
இன்றைய உலகம் சைனா கையில்......!
நாளைய உலகம் நம் கையில்......!!

ஜெய் ஹிந்த்..!!

சுதந்திர தினம்!



                             Independence-Day

 
           ‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம். நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் நமது இந்திய நாட்டின் பிரஜைகள் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.



ஆரம்பகால இந்தியா:-


‘தீப கற்பம்’ என்றும் ‘பாரத தேசம்’ என்றழைக்கப்படும் நமது நாடானது, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காளதேசம், எனப் பெருவாரியானப் பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது. மன்னர்கள் ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நமது நாடு, செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தது. தென்னிந்தியாவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து, அவர்களது புகழை மேன்மேலும் ஓங்கச் செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, இசுலாமியர்கள் (1206–1707), தில்லி சுல்தானகம் (1206–1526), தக்காணத்து சுல்தானகங்கள் (1490–1596), விஜயநகரப் பேரரசு (1336–1646), முகலாயப் பேரரசு (1526–1803), மராட்டியப் பேரரசு (1674–1818), துர்ரானி பேரரசு (1747–1823), சீக்கியப் பேரரசு (1799–1849) எனப் பலரும் நமது நாட்டின் எல்லைகளையும், செல்வங்களையும் விரிவுபடுத்துவதிலே மிகவும் கவனமாக இருந்தனர்.


மேலைநாட்டவர்களின் வருகை:-


           விஜயநகரப் பேரரசு காலத்தில், நமது இந்தியாவிற்குக் கடல்வழியாக முதன்முதலில் வந்தவர் தான், வாஸ்கோடகாமா. ‘வந்தோரை வாழவைக்கும் நாடெங்கள் நாடு’ என்ற பெருமை நமது இந்தியாவிற்குத் தொடக்கத்திலிருந்தே உள்ளது. ஒரு போர்ச்சுகீசியரான அவர், கடல் வழியே இந்தியாவிற்கு வழியைக் கண்டு பிடித்து, நமது நாட்டில் கால்பதித்தார். இவரது வருகையைத் தொடர்ந்து, இந்தியாவில் உணவுக்கு சுவை சேர்க்கும் கறிமசாலா பொருட்கள் இருப்பதை அறிந்த ஐரோப்பியர்கள், அதைத் தங்களது நாடுகளுக்கு விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட எண்ணி, கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர். இதுவே, பண்டமாற்று முறைக்கு வித்திட்டது. போர்ச்சுகீசியர்கள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச், ஆங்கிலேயர்கள் போன்ற அந்நிய நாட்டவர்கள் நமது நாட்டிற்கு வருகைத் தந்ததால், அவர்களும் போர்ச்சுகீசியர்கள் போலவே வாணிக முகாம்களை அமைக்க எண்ணி, சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர். 1619 ஆம் ஆண்டில், பிரெஞ்சுகாரர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். வாணிகம் என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழையும் ஐரோப்பியர்கள், நாட்கள் செல்ல செல்ல அந்நாட்டின் சிம்மாசனப் பொறுப்பைக் கைப்பற்றுவர். அதற்கேற்றவாறு, பல நாட்டவரும் இந்தியாவுக்குள் நுழைந்ததால், பல போர்களும், குழப்பங்களும் நிலவியதால், ஐரோப்பியர்கள் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். ஆனால், தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளையும், ஒரே நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர்.


ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி:-


     ஐரோப்பியர்களை மிகவும் சூழ்ச்சியால் வென்ற ஆங்கிலேயர்கள், இந்தியாவில் இருந்து வாணிகம் செய்து வந்ததோடு மட்டுமல்லாமல், அப்போதைய முகலாயப் பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பின்னர், இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு அவர்களது கிழக்கிந்திய கம்பெனியையும் நிறுவினர். நாளடைவில் அவர்கள் வரி செலுத்தாமலேயே வாணிகம் செய்ததால், அவர்களை வங்காளத்தின் நவாப் ‘சிராஜ் உட துலாத்’ என்பவர் எதிர்த்ததால், 1757 ஆம் ஆண்டில், ‘பிளாசி யுத்தம்’ தொடங்கியது. இதில், நவாப் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றதால், அவர்கள் இந்தியாவில் உள்ள நிலங்களை ஆக்கிரமிக்கத் துவங்கினர். இதையடுத்து, 1764 ஆம் ஆண்டில் பக்சார் போரிலும் வெற்றிப் பெற்று, வங்காளத்தை ஆட்சி செய்ய அப்போதைய முகலாயப் பேரரசரிடம் அனுமதிப்பெற்றதால், இந்தியா முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர அதுவே, முதன்முதல் காரணமாக இருந்தது. இதன் பின்னர், வரிகள், நிலங்கள் கையகப்படுத்துதல், போன்றவற்றால் இந்தியா பஞ்சம் வரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது. 20 மில்லியன் மக்கள் ‘கிரேட் பாமின் ஆஃப் 1876–78’ மற்றும் ‘இந்தியன் பாமின் ஆப் 1899–1900ல்’ மடிந்ததொடு மட்டுமல்லாமல், ‘மூன்றாம் பிளக் பாண்டமிக்’ என்ற கொடிய நோயால் மேலும் 10 மில்லியன் மக்கள் செத்து மடிந்தனர். கிழக்கிந்திய நிறுவனத்தால், ஏற்பட்ட இத்தகைய மாபெரும் இழப்பைக் கண்டு வெகுண்டத் துடிப்பான இளைஞர்கள் பலரும் இணைந்து, ‘1857 இந்திய கலகம்’ என்ற இயக்கத்தை முகாலாயப் பேரரசர் பகதூர் ஷா சபர் அவர்களை மானசீக தளபதியாகக் கொண்டு உருவாக்கினர். இதுவே, ‘முதல் இந்தியப் போர்’ என்று அழைக்கப்பட்டது. ஒரு வருடமாகப் போராடிய பின்னர், இவ்வியக்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் தளபதியையும் நாடு கடத்தி, முகலாய வம்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர், ஆங்கிலேயர்கள்.

 
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்:-


         முதல் இந்தியப் போரைத் தொடர்ந்து, தனது அதிகாரத்தை நேரடியாக செயல்படுத்த முடிவெடுத்தனர், ஆங்கிலேயர்கள். என்னதான் ஆங்கிலேயர்கள் ஒருபுறம் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்து கொண்டே இருந்தாலும், நமது இந்தியர்கள் ‘முதல் இந்தியப் போரைத்’ தொடர்ந்து, பல போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். 1867ல் ‘கிழக்கிந்திய கூட்டமைப்பை’ தாதாபாய் நவ்ரோஜியும், 1876ல் ‘இந்திய தேசிய கூட்டமைப்பை’ சுரேந்திரநாத் பானர்ஜியும் உருவாக்கினர். 1877 ஆம் ஆண்டில், விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டப்பட்டதால், ஓய்வுபெற்ற பிரித்தானிய பொதுப்பணி சேவகர் ஏ.ஓ.ஹ்யூமினால் இந்தியர்கள் பலரும் தூண்டப்பட்டு, 1885ல் மும்பையில் எழுபத்து மூன்று இந்தியப் பிரதிநிதிகள் இணைந்து ‘இந்திய தேசிய காங்கிரஸை’ நிறுவினர். சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய், விபின் சந்திர பாலர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஸ்ரீ அரபிந்தோ, சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, பக்கிம் சந்திர சட்டர்ஜி, சர் சயீது அஹ்மது கான், ரபீந்திரநாத் தாகூர் மற்றும் தாதாபாய் நவ்ரோஜி போன்றோரின் உழைப்பு விடுதலை உணர்வுக்கான புத்தெழுச்சியை பரவச்செய்தது.


    1905ல், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டார், அப்போதைய வங்காளத்தின் வைஸ்ராயும், கவர்னர் ஜெனரலுமான கர்சன் அவர்கள். வங்காளப் பிரிவினையைக் கண்டு கொதித்த இந்தியர்கள் பலரும், சுதேசி மற்றும் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். முதல் இந்திய தேசியவாதியாக இருந்து, சுயராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டார், பால கங்காதர திலகர். இதனால், தேசியவாதம் அடிப்படைவாதம் என இரண்டு தலைமைகளில் காங்கிரஸ் இரண்டாக 1907ல் பிரிந்தது. தொடர்ச்சியான வன்முறைகளும், கொந்தளிப்புகளும் நாட்டில் நிலவியதால், அதைத் தடுக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், தலைவர்களான பால கங்காதர திலகர் மற்றும் வ.உ.சியை 1908 ஆம் ஆண்டில் கைது செய்தனர். வங்காளப் பிரிவினையால் தொடர் போராட்டங்கள் ஏற்பட்டதால், அந்தச் சூழ்நிலையைத் தணிக்க முயற்சித்த ஆங்கிலேயர்கள், 1911 ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் டர்பாரில் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தனர். அவர், வங்கப் பிரிவினையை மீண்டும் பெறப்போவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், டெல்லியின் வடக்குப்பகுதியில் கட்டப்படவிருந்த நகரத்திற்கு தலைநகரத்தை கல்கத்தாவிலிருந்து மாற்றுவதாகவும் அறிவித்தார்.


முதல் உலகப் போரும், இந்தியர்களின் துணிவும்:-


         உலகிலுள்ள நாடுகளுக்கிடையே நிலவிய மோதல்கள் மற்றும் விரோத போக்குகளால் 1914ல் ‘முதல் உலகப் போர்’ ஆரம்பமானது. ஆங்கிலேயர்கள் நமது இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்ததால், அவர்களது போர் முயற்சிகளுக்கு நமது இந்தியா பெருமளவில் பங்களித்தது. முதல் உலகப்போரின் பின்விளைவுகளாக உயர் உயிரிழப்பு விகிதம், உயர்ந்த பணவீக்கம், பரவிய இன்புளூயன்ஸா கொள்ளைநோய் மற்றும் போரின்போது ஏற்பட்ட வர்த்தகத்தின் பாதிப்பு போன்றவை, இந்திய மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பிரித்தானிய ஆட்சியைத் தூக்கியெறிய இந்திய வீரர்கள் முற்பட்டனர். அச்சமயம், அதாவது, 1915 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். இந்திய மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், 1916ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918ல் ‘கறுப்புச் சட்டம்’ என்ற ‘ரௌலட் சட்டம்’ ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். இதன் மூலம் ‘பத்திரிக்கைகளை மூடுதல், விசாரணையின்றி அரசியல் செயல்பாடுகளை நசுக்குதல், மற்றும் கைதாணை இல்லாமல் கலகம் அல்லது ராஜ துரோகத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் எந்த ஒரு தனிநபர்களையும் கைது செய்தல்’ போன்ற அக்கிரமங்களை, அதிகாரம் என்ற பெயரில் துஷ்ப்ரயோகம் செய்தனர், வைஸ்ராய்கள். மேலும், 1919ல், அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற சந்தேகித்திற்கு இடமற்ற கூட்டத்தை நோக்கி சுடமாறு பிரித்தானிய ராணுவத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் ஆணையிட்டார். இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, இரண்டாக பிளவுற்ற காங்கிரஸ் கட்சி, போராட்டங்கள், கிளர்ச்சிகள் எனப் பிரிந்திருந்த இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது. 1920 ஆம் ஆண்டில், ‘கிலாபாத்’, ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி’, ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்’ போன்றவைகள் உதயமானது. தனது நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி அவர்கள், முதல் சத்தியாக்ரஹ இயக்கத்தைத் தொடங்கி, ஆங்கிலேயர்களை எதிர்த்தார். இதனால், காந்திக்கு 1922ல் ஆறுவருட சிறைதண்டனை விதிக்கப்பட்டு, இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டார். 1929ல், டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசினார். இதை மிகவும் கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், ‘அமைதியால் மட்டும் தான் சுத்தந்திரம் அடைய முடியுமென்று’ எண்ணி, 1930 ஆம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ நடத்தினார். அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அடுத்த ஆண்டில், ‘காந்தி-இர்வின்’ ஒப்பந்தம் கையெழுத்தானதோடு மட்டுமல்லாமல், அவர் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்த மாநாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தியா திரும்பினார். அதே ஆண்டில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டார்.


         இரண்டாம் உலகப் போரில் இந்தியா கலந்துகொண்டது. மேலும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரித்தனர். 1940ல் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ மற்றும் 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. 1943 ஆம் ஆண்டில், நேதாஜி இந்திய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடுகடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜாப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1946ல் ‘ஆர்ஐஎன் கழகம்’ எனப்படும் ‘கப்பற்படை எழுச்சி’ எழுப்பப்பட்டது.


இந்தியா சுதந்திரம் அடைதல்:-


       சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட களைப்படையவில்லை. ஆனால், பிரித்தானிய மக்களும், பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்றிருந்தது. 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள், ஜூன் 3 ஆம் தேதியன்று ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்துசென்றது. மேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948 ஆம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.


சுதந்திர தின கொண்டாட்டங்கள்:-


            ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி நலத் திட்ட உதவிகளை வழங்குவார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர், விடுமுறை அளிக்கப்படும். டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்தினத்தில், நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, உரையாற்றுவார். இவ்விழாவில், முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ஒவ்வொரு பிரஜைக்கும் முக்கியமான தினம் என்பதால், அனைவரும் தங்களது வாழ்த்துகளை, இந்நாளில் தங்களது பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.


தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top