தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படிக்கும் 120 மாணவ-மாணவிகளுக்கும் படிப்பை முடிக்கும்போது கண்டிப்பாக அரசு வேலை உறுதியாக காத்திருக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உறுதியாக அரசு வேலை காத்திருக்கிறது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடுதான் இந்த அதிர்ஷ்டத்திற்கு காரணம். 


தமிழ்வழியில் கல்வி 

 
தமிழில் படித்தால் வேலையே கிடைக்காது என்ற ஏளனப்பேச்சை சர்வ சாதாரணமாக எங்கும் கேட்கலாம். மழலை கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள போதும், மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் தமிழ்வழியிலா அம்மாடியோவ் என்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் வந்ததுதான் அந்த அதிரடி அரசாணை. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணைதான் அது. 


20 சதவீத சிறப்பு ஒதுக்கீடு 

 
கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்புத்தூர் நகரில் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிப்பை அந்த மாநாட்டில் அப்போதைய முதல்வர் கரு ணாநிதி வெளியிட்டார்.அதற்கான அரசாணையும் (எண் 145: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, தேதி: 30.9.2010 ) வெளியிடப்பட்டது. 


இதையடுத்து 2011-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் படிப்புகளில் தமிழ்வழி பி.இ. படிப்பு தொடங்கப்பட்டது. தலா 60 இடங்கள் கொண்ட இந்த படிப்புகளில் கலந்தாய்வின்போது மாணவ-மாணவிகள் கொஞ்சம் யோசித்துத்தான் சேர்ந்தனர். தமிழ்வழியில் பி.இ. படிக்கப் போகிறோமே, அதற்கு மதிப்பு இருக்குமா, வேலை கிடைக்குமா என்று அவர்கள் யோசித்து இருக்கலாம். எனினும் துணிந்து தமிழ்வழிப் படிப்பில் சேர்ந்தனர்.


தமிழ் பாடப்புத்தகங்கள் 

 
பாடப்புத்தகங்கள் தமிழில் உரு வாக்கப்பட்டன. முடிந்தவரைக்கும் அந்த பாடங்களின் தொழில்நுட்ப வார்த்தைகள் தமிழாக்கப்பட்டன. பேராசிரியர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடம் நடத்துவார்கள். 2011-ம் ஆண்டு சேர்ந்த மாணவ-மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் (2013-14) அதாவது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள். தற்போதும் தமிழக அரசுப் பணிகளில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டுத்தான் வருகிறது. 


நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளிலும், தமிழ்நாடு மின்சார வாரியம், போக்குவரத்துக்கழகங்களிலும் உதவி பொறியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படுகின்றன. ஆனால் தற்போது தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்கள் யாரும் இல்லாததால் அந்த பணியிடங்கள் ஆங்கில வழி படித்த பொதுப்பிரினரால் நிரப்பப்பட்டுவிடுகின்றன. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படிக்கும் 120 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்று படிப்பை முடிக்கும்போது அரசு வேலை உறுதியாக காத்திருக்கும். 



ஆனால் அவர்களுக்குள் போட்டி போட வேண்டியதிருக்கும். 21 வயதில் அரசுப் பணியில் சேரும் இந்த நாளைய தமிழ் பொறியாளர்களுக்கு பணிக்காலம் 36 ஆண்டு, 37 ஆண்டுக்கும் இருப்பதால் அனைவரும் துறை யின் தலைமை பதவியை நீண்ட காலம் அலங்கரிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.