.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 29 September 2013

‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் – பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!


சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும், ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ (‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


sep 28 - joy of giving

 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாணவர்களுக்கு இடையே ஈகைத்தன்மையை வளர்க்கவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்கி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்காகவும் ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் (Joy of Giving Week) கொண்டு வரப்பட்டுள்ளது.


ஒருவருக்கொருவர் தங்களிடம் உள்ள பொருள்களை தேவைப்படுபவர்களுக்கு அன்போடும், ஆர்வத்தோடும் கொடுப்பதற்கு முன் வர வேண்டும். இப்படி பிறருக்கு கொடுத்து உதவுபவர்களே மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கின்றனர். முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்த ஒளவையார் என்று பலரை உதாரணமாக சொல்லலாம்.



எனவே, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், ஈகைப்பணிகளை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களை பற்றி கட்டுரை எழுதலாம், பள்ளிக்கு அருகில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம்.



முதியவர்களுக்கு பத்திரிகைகள் வாசித்து காட்டலாம், எழுத படிக்க தெரியாத முதியவர்களுக்கு கல்வி கற்றுத்தரலாம், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யலாம். போக்குவரத்து போலீசாருக்கு சிறு பூ கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம். பஸ்சில் இடம் கிடைக்காமல் நிற்பவர்களுக்கு சீட் கொடுத்து உதவலாம். 10 பொன்மொழிகளை எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


மிஸ்.பிலிப்பைன்ஸ் மேகன் யங் உலக அழகியானார்!


இந்தோனேஷிய நாட்டில் நடந்த உலக அழகி 2013ம் ஆண்டுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 23 வயது நிரம்பிய மேகன் யங் இறுதி சுற்றில் வென்று கிரீடம் சூட்டப்பட்டார். இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் 63வது வருட உலக அழகிக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 127 அழகிகள் கலந்து கொண்டனர்.
இறுதி சுற்றுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேகன் யங் தேர்வு செய்யப்பட்டார்.அமெரிக்காவில் பிறந்த யங் தனது 10வது வயதில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு இடம் பெயர்ந்தார். அதன் பின்னர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராகவும் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.



Miss World 2013 Final

 



இநதோனேஷியாவில் நடந்த இந்த போட்டிக்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். எனவே, போட்டி அமைப்பாளர்கள் பாதுகாப்பினை அதிகரித்து இருந்தனர். இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி அமைப்பினர் கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரானது என்றும் உடலை காட்டி நடத்தப்படும் போட்டியினை தடை செய்ய அரசுக்கு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து போட்டி நடத்துபவர்கள், பிகினி உடையில் தோன்றும் நீச்சல் உடை போட்டியினை நடத்த மாட்டோம் என ஒப்புதல் அளித்தனர்.



எனினும் போட்டியை தடை செய்ய தொடர்ந்து எதிர்ப்பு வலு பெற்று வந்தது. இதனால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து இந்துக்கள் அதிகம் வசிக்கும் பாலி நகரில் இறுதி போட்டி நடைபெறும் என அறிவித்து இருந்தது. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் இறுதி போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க அங்கு குவிக்கப்பட்டனர். அழகிய கடற்கரைகள், பிரமிப்பூட்டும் கோவில்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் கொண்ட பாலி தீவில் களிப்பூட்டும் இந்தக் கோலாகலமான நிகழ்ச்சியின் முடிவில் 127 போட்டியாளர்களை சந்தித்து மேகன் யங் இந்த முதலிடத்தைப் பெற்றுள்ளார். சென்ற வருடத்தின் உலக அழகியான சீனாவின் யூ வென்சியா இவருக்கு உலக அழகியாக முடி சூட்டினார். மிஸ் பிரான்ஸ் அழகியான மரைன் லோர்பலின் முதல் ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார். கானா நாட்டு அழகியான கரன்சார் நா ஒகைலி ஷூட்டார் இரண்டாவது ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார்.


இவர்கள் தவிர பியூட்டி வித் பர்பஸ், மல்டிமீடியா, பீப்பிள்ஸ் சாம்பியன், பீச் பேஷன், ஸ்போர்ட்ஸ் அன்ட் பிட்நெஸ்,டேலன்ட் காம்படிஷன் மற்றும் டாப் மாடல் போன்ற பல பிரிவிலும் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான நீதிபதிகள் குழுவில் உலக அழகிப் போட்டி அமைப்பின் தலைவி ஜூலியா மோர்லே, இந்தோனேசிய அழகிப் போட்டி அமைப்பின் தலைவி லிலியானா தனோசோடிப்ஜோ, டைம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் வினீத் ஜெயின் போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

Miss Philippines Megan Young crowned Miss World 2013


********************************


 Miss Philippines was crowned Miss World 2013 today in a glittering finale on the Indonesian resort island of Bali amid tight security following weeks of hardline Muslim protests.Megan Young beat five other finalists, including France and Brazil, to win the coveted title in a contest broadcast to more than 180 countries worldwide.

.

சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை.- அமைச்சர் விளக்கம்!


“இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த விழாவிற்கான அழைப்பிதழ்களை அச்சிடுவது, திரைப்படக் கலைஞர்களை அழைப்பது, முக்கிய விருந்தினர்களை அழைப்பது என அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தான் மேற்கொண்டது என்பதை கருணாநிதிக்கு முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”என்று தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.



sep 29 - 100 years cine vizha

 



இதுதொடர்பாக தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கையில் ‘‘ஈழத் தமிழர் பிரச்சினையில் அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துபோகவிட்டதோடு தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் சிறிதும் பரிசீலனை செய்யாத நிலையில் மத்திய அமைச்சர் அவையில் இனியும் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் தி.மு.க. உடனடியாக விலகுகிறது’’ என்று அறிவித்துவிட்டு, தன் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழர் நலத்தை மறந்து தன்னலத்தை முன்னிறுத்தி மூன்றே மாதங்களில் காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்த கருணாநிதி, ‘அழைக்காமல் பலரையும், அழைத்துப் பலரையும்’ என்ற தலைப்பில் தன்மானத்தைப் பற்றி பேசியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.



இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதையும், இறுதி நாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கியதையும் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, ஒரு விழா எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக சினிமா நூற்றாண்டு விழா விளங்கியதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். 


இதிலிருந்தே கருணாநிதியின் இந்த அறிக்கை வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
கருணாநிதி தன்னுடைய அறிக்கையிலே, இது போன்ற விழாக்களிலே ஒருவர் தலைமை தாங்குவது தான் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை என்றும், ஆனால் இந்த மரபு இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கடைபிடிக்கப்படவில்லை; மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையிலே இடம் ஒதுக்கப்படவில்லை; சில கலைஞர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.


இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த விழாவிற்கான அழைப்பிதழ்களை அச்சிடுவது, திரைப்படக் கலைஞர்களை அழைப்பது, முக்கிய விருந்தினர்களை அழைப்பது என அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தான் மேற்கொண்டது என்பதை கருணாநிதிக்கு முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


மரபுகளைப் பற்றி கருணாநிதி பேசியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. பொதுவாக, குடியரசுத் தலைவரை யாராவது பார்க்க வேண்டும் என்றால், அவர் இருக்கும் இடம் போய் தான் பார்க்க வேண்டும். இது தான் நடைமுறை, மரபு. ஆனால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழாவில் கலந்து கொள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் சென்னைக்கு வருகை புரிந்த போது, தன்னை வந்து பார்க்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் மூலம் வற்புறுத்தி, அதன் பேரில், இந்தியக் குடியரசுத் தலைவரும் வேறு வழியின்றி, கருணாநிதியை அவரது துணைவியார் இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.


ஒரு வேளை இது போன்ற மரபு இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் போது கடைபிடிக்கப்படவில்லை என்று கருணாநிதி கூறுகிறார் போலும்! இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு நாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டதால், அந்த விழாவிற்கான வரைவு அழைப்பிதழ் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ஒப்புதல் பெறப்பட்ட பின்பே அச்சிடப்பட்டிருக்கும் என்ற விவரம் ஐந்து முறை முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா? இதைத் தெரிந்து வைத்திருந்தும், வேண்டுமென்றே மரபு கடைபிடிக்கப்படவில்லை என்று கருணாநிதி கூறுவது குடியரசுத் தலைவரையே கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.



திரைப்பட விழாக்களில் தலையிடுவது, திரைப்படத் தொழிலில் தன் குடும்ப உறுப்பினர்களை நுழைப்பது, திரைப்பட கலைஞர்களை வைத்து பாராட்டு விழாக்களை நடத்துவது, துதிபாடிகள் முன் உலா வருவது, திரைப்படத் துறையிலுள்ள முன்னணி நடிகர்கள், நடிகையர்களை தன்னுடைய பாராட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறும், இலவசமாக கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுமாறும் வற்புறுத்துவது ஆகியவை கருணாநிதிக்கு தான் கை வந்த கலை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.


சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா, தமிழ்நாடு திரைப்படத் துறை சார்பில் பாராட்டு விழா, நன்றி அறிவிப்பு விழா என பல்வேறு பாராட்டு விழாக்கள் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டன. அனைத்து திரைப்பட விழாக்களையும், திரைத் துறையைச் சார்ந்த மாநாடுகளையும் தன்னுடைய பாராட்டு விழாக்களாக மாற்றிக் காட்டிய பெருமை கருணாநிதியையே சாரும். இது போன்ற விழாக்களை நடத்துவதற்காக படப்பிடிப்பு பல நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதையும், திரைப்படத் துறையினரின் வருமானம் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டதையும் திரைப்படத் துறையினர் இன்னமும் மறக்கவில்லை என்பதை கருணாநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.


முதல்–அமைச்சர் ஜெயலலிதா திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும், நேசமும் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும், அவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள் என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்வதோடு, திரைப்படக் கலைஞர்களை ‘‘காக்கா கூட்டம்’’ என்று கருணாநிதி கூறியதை அவர்கள் இன்னும் மறந்துவிடவில்லை என்பதை இந்தத் தருணத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.



தன் குடும்ப உறுப்பினர்களை எல்லாம் முன் வரிசையில் அமரச் செய்து தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி, தமிழறிஞர்களை இழிவுபடுத்திய கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் அவருடைய குடும்பத்தினருக்கே மேடையில் இடம் அளிக்காத கருணாநிதி, பல முன்னணி திரைப்படக் கலைஞர்களை கீழே அமரச் செய்த கருணாநிதி, திரைப்படத் துறையையே கபளீகரம் செய்த கருணாநிதி, இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் குறித்து விமர்சிப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.



‘‘தோளில் கிடக்கும் துண்டு என்பது பதவிக்கு சமம். இடுப்பில் உள்ள வேஷ்டி தான் மானம். கொள்கைக்காக துண்டை உதறிப் போட்டுவிட்டு போக தயங்க மாட்டோம். சுயமரியாதைக் கொள்கைகளுக்காக வேஷ்டியை இழக்க மாட்டோம்’’ என்ற கொள்கையுடன் இருந்த தி.மு.க.வை, ‘‘வேஷ்டி போனாலும் பரவாயில்லை, துண்டு பறிபோய்விடக் கூடாது’’ என்ற நிலைக்கு மாற்றிக் காட்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, ‘‘துரோகம்’’ என்ற வார்த்தையைத் தவிர, சுயமரியாதைக் கொள்கை பற்றியோ, பகுத்தறிவு சிந்தனைகள் பற்றியோ, தன்மானம் குறித்தோ பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

கிரெடிட் கார்ட மோசடியா?வங்கிகளே பொறுப்பு!: ரிசர்வ் வங்கி உத்தரவு!


வங்கி கிரடிட் கார்டுகளில் ஏதும் மோசடி நடந்தால் முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கியே மோசடி நடந்த ஏழு நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.அத்துடன் இதிலிருந்து தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் கணக்கிட்டு அதிகப்படியான தொகை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


sep 29 - bank ceredit card

 


கிரெடிட் கார்ட் திட்டத்தில் தொடர்ந்து மோசடிகள் நடைபெற்று வருவதால் அவற்றின் பாதுகாப்பு முறைகளை ஜூலை மாதத்திற்குள் அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
பணம் எடுக்கும் இயந்திரங்களில் மின்னணு சிப் மற்றும் கிரெடிட் கார்ட் உடையவர் பணம் எடுக்கும்போது அவரை அங்கீகரிக்கும்விதமாக அவர் பதிவு செய்யவேண்டிய ரகசியக் குறீயீட்டு எண் போன்றவற்றை செயல்படுத்துமாறு கேட்டிருந்தது. 


ஆனால் வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்த இயலாததால் செப்டம்பர் வரை இதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆயினும், தற்போதும் இந்த ஏற்பாடு முழுமையடையவில்லை என்பதால் மீண்டும் இந்தக் கெடுவை நீட்டிக்குமாறு வங்கிகள் கோரியிருந்தன.
தொடர்ந்து இந்த காலக்கெடுவை நீட்டிப்பதற்கு ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. மேலும், இந்தப் பாதுகாப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்படாத இயந்திரங்களில் புதிதாக ஏதும் மோசடி நடந்தால் முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கியே மோசடி நடந்த ஏழு நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதிலிருந்து தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் கணக்கிட்டு அதிகப்படியான தொகை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


தற்போது இந்த சர்ச்சை குறித்த தீர்மானம் மிகவும் சிக்கலான நடைமுறை என்பதால் முதலீட்டாளர்கள் தாங்கள் இழந்த பணத்தைப் பெறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகின்றது. பொதுவாக இத்தகைய திட்டங்களில் இரண்டு வங்கிகள் செயல்படுகின்றன. 


முதலாவது வங்கி முதலீட்டாளர்களுக்கு கடன் அட்டைகளை (கிரெடிட் கார்ட்) வழங்குகின்றது. மற்றொரு வங்கி பணம் அளிக்கும் இயந்திரங்களை செயல்படுத்துவதாக அமைகின்றது. எனவே, மோசடிப் புகார் அளிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் முதலாவது வங்கி இதனை உறுதி செய்துகொண்டு பாதிப்படைந்தவர்களுக்கு மேலே குறிப்பிட்டபடி பணத்தை வழங்கவேண்டும். 


அதன்பின்னர் அந்த வங்கி பணம் அளிக்கும் இயந்திரத்தைச் செயல்படுத்தும் வங்கியிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்தப் புதிய உத்தரவு கடன் அட்டைகளின் பாதுகாப்பு குறித்த ரிசர்வ் வங்கியின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று கருதப்படுகின்றது.


Banks to pay for credit card frauds, RBI says

**********************************
The Reserve Bank of India has refused to extend the deadline for upgrading security on credit card swipe machines and has ordered banks to compensate cardholders in seven days if any fraud occurs on non-compliant terminals.


உலக இதய நாள் – செப்டம்பர் 29!


இந்த உலகில், முதலிடம் வகிக்கும் உயிர்கொல்லி நோயான “மாரடைப்பு” எனும் கொடிய நோயினால் வருடத்திற்கு 17மில்லியன் மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29% ஆகின்றது. அதிலும் 82% வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளிலும்தான் காணப் படுகிறது.இந்நிலையில்தான் செப்டம்பர் 29-ம தேதியான இன்று உலகம் முழுவதும், ‘இதய நாள்’ இன்று கொண்டாடப்படுகிறது. 



உலக இதய நாளின் முக்கிய குறிக்கோளே, ‘மாரடைப்பை’ வரும் முன் காப்பதும், வந்தபின் பூரண குணம் அடையச் செய்வதும்தான். உலகளவில் சிந்தித்து, வீட்டளவில் செயல்பட்டு, ஒவ்வொரு தனி மனிதனும் அவர்தம் இதயத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டால், உலகளவில் மாரடைப்பு அற்ற சமுதாயத்தையே உருவாக்கமுடியும்.



Heart

 


“மாரடைப்பு (heart attack)” எனும் நோயே, தவறான வாழ்கை முறையினால் ஏற்படுவது. எனவே, சீரான வாழ்க்கை முறையினால் மட்டுமே அந்நோயைத் தடுக்க முடியும். வாழ்க்கை முறை என்பதை வரையறுப்பது அவர்தம் மனநிலையேதான். 


எதிர்மறை எண்ணங்களான, கோபம், போட்டி, பொறாமை, ஆவேசம், ஆத்திரம் போன்றவற்றால் மூளையில் வெளிப்படும் எண்ண அலைகளை அதிகப்படுத்தி, அதன்விளைவாக வேண்டாத அட்ரினலின், கார்டிசால் போன்ற ஆர்மோன்களை உடலில் அதிகமாகச் சுரக்க வைத்து அவை, இரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் : 


ஆவேசத்தையும் , ஆத்திரத்தையும் அதிகமான கொழுப்பு உணவைச் சாப்பிடுவதில் காட்டுவது. உடல் எடை கூடுவது. உடற் பயிற்சியைத் தவிர்ப்பது. 


இந்நிலையில் மகிழ்ச்சி என்னும் மாய உணர்வினால் புகை பிடிப்பது , மது அருந்துவது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாவது. பதற்றம், உடல் நடுக்கம், அதிக வியர்வை. இதயத் துடிப்பு அதிகரித்தல். இரத்த அழுத்தம் கூடுதல். கல்லீரலில் உற்பத்தியாகும் கெட்ட கொலசுட்ரால் கூடியும் , நல்ல கொலசுட்ரால் குறைந்தும் இரத்தத்தில் கலக்கின்றது. இரத்தச் சர்க்கரை அளவு கூடுதல். 



இவை அனைத்தும், இதய இரத்தக் குழாய்களில் அடைப்பு வருவதற்கும், சுருங்குவதற்கும் காரணமாகி மாரடைப்பை ஏற்படுத்துகிறது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை டாக்டரை அணுகி ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகா, தியா னம் செய்ய வேண்டும். சத்துள்ள காய்கறிகள், பழங் களை சாப்பிட வேண்டும். அரிசி கோதுமை உணவையும் மற்றும் எண்ணெய், நெய், வறுத்த உணவு பொருட்கள், ஊறுகாய் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை பிடித்தலை அறவே தவிர்க்க வேண்டும். இதனை நாம் கடைப்பிடித்தால், இதய நோய் வராமல் தடுக்க முடியும்.


அத்துடன் தினமும் அரை மணி நேரமாவது காலார நடை போடுங்கள். சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுதுவதை பெருமளவு குறைத்து விடலாம். பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (walking), மெல்லோட்டம்(jogging), சைக்கிள் பயிற்சி(cycling), நீச்சல் பயிற்சி(swimming) என நான்கு வகைகளாக பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உடல் அமைப்பு, ஓய்வு நேரம்,உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.


குறிப்பாக வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கேற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. 


அதிலும் எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள் இருதயம் கடைசி வரை ஆரோக்கியமாய் இயங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

பிரவுசருக்கு ஒரு குளிர் கண்ணாடி.!


பார்த்துக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சிகளின் போது நடுவே ஒரு சின்ன பிரேக் என்று சொல்வது போல தொடர்ந்து கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது அடிக்கடி சின்ன பிரேக் எடுத்து கொள்வது அவசியம் என்கின்றனர்.இரண்டு வகைகளில் இந்த பிரேக் வலியுறுத்தப்படுகிறது.ஒன்று அமர்தல் தொடர்பாக!.இன்னொன்று பார்த்த‌லுக்காக!


அதாவது கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது ஒரே இடத்தில் ஒரே மாதிரி அமர்ந்திருக்க நேர்கிறது அல்லவா! உடலுக்கு இது கேடு என்று சொல்கின்றனர்.இல்லை எச்சரிக்கின்றனர்.இடுப்பு வலியில் துவங்கி பலவித பாதிப்புகள் இதனால் ஏற்படலாம்.இப்படி கம்ப்யூட்டர் முன் பழியாக கிடப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவர்த்து அளிக்க எர்கோனாமிக்ஸ் என்னும் தனிப்பிரிவே இருக்கிறது.எர்கோனாமிக்ஸ் என்றால் அமர்தல் கலை!

sep 28 - tec glass MINI

 


இதே போல கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மானிட்டரையே பார்த்து கொண்டிருப்பதால் கண்களுக்கு களைப்பு ஏற்படுகிறது.இதை தவிர்க்க இடையிடையே கண்களுக்கு ஓய்வு தேவை என வலியுறுத்துகின்றனர். இதை நாமாக செய்ய மாட்டோம் என்று சரியான இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ள உதவுவதற்கு என்றே இணையதளங்களும் செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.


அதோடு 20;20 என ஒரு விதியும் உருவாக்கியுள்ளனர்.
இவை தவிர கண்களை பாதுகாப்பதற்கான குளிர்கண்ணாடியும் கூட உருவாக்கப்பட்டுள்ளது.இந்த குளிர் கண்ணாடியை நாம் மாட்டிக்கொள்ள வேண்டியதில்லை .பிரவுசருக்கு மாட்டி விடலாம்.


நீண்ட நேரமாக கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்து கொண்டிருக்கும் போது அதன் பிரகாசத்தன்மை கண்களுக்கு அயர்ச்சியை உண்டாக்கும்.குறிப்பாக மீக நீளமான கட்டுரையை படிக்கும் நிலை ஏற்பட்டால் கண்களில் பூச்சி பற‌ப்பது போல உணர்வு ஏற்படலாம்.


இதை தவிர்க்க கம்ப்யூட்டர் திரையின் பிரகாசத்தை கொஞ்சம் கொஞ்சம் குறைத்து கொண்டால் படிக்கும் போது கணகளுக்கு இதமாக இருக்கும் அல்லவா? கூகுல் கூரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக உருவாக்கப்பட்டுள்ள சன் கிளாசஸ் இதை தான் செய்கிறது.


இந்த பிரவுசர் நீட்டிப்பை டவுண்லோடு செய்து கொண்டால் ,கம்ப்யூட்டரில் படிக்கும் போது அயர்ச்சியாக உணர்ந்தால் உடனே இதை கிளிக் செய்து பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தின் பிரகாசத்தை குறைத்து கொள்ளலாம்.
குளிர்கண்ணாடி வழியே பார்க்கும் போது கண்கள் கூசாமல் காட்சிகள் இதமாக தெரிவது போல இப்போது இணையதளமும் பிரகாசம் குறைந்து மங்களாக ஆனால் தெளிவாக தெரியும்.எந்த அளவுக்கு பிரகாசம் குறைய வேண்டும் என்று கூட தீர்மானித்து கொள்ளலாம்.இதற்காக நீட்டிப்பில் உள்ள கட்டத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். கட்டத்தின் நடுவே உள்ள கர்சரை அப்படியும் இப்படியும் நகர்த்தினால் பிரகாசம் கூடும் குறையும்.


கம்ப்யூட்டரிலேயே பிரகாசத்தை மாற்றி கொள்ளும் வசதி இருக்கிறது.ஆனால் இந்த பிரவுசர் சேவை கம்ப்யூட்டரில் எந்த மாற்றமும் செய்யாமல் பிரவுசரில் மாற்றம் செய்து பார்க்கும் இணையதளத்தின் பிரகாசத்தை மங்களாக்கி தருகிறது.


அதாவது பிரவுசருக்கு குளுர்கண்ணாடியை அணிவித்து நம் கணகளுக்கு இதம் தருகிறது.


குளிர்கண்னாடி டவுண்லோடு செய்ய:




அன்பே சிறந்தது (நீதிக்கதை)!



 
 
அந்த வீட்டில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான்.
அப்போது வீடட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ' உள்ளேவரலாமா ' என்று கேட்டனர்.

தந்தை 'வாருங்கள்' என்றார்.

'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது...யாராவது ஒருவர் தான் வரமுடியும்...என் பெயர் பணம்...இவர் பெயர் வெற்றி...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்...எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ' வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்' என்றார்.

ஆனால் குமரனோ ...'அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்...நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்...எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட ...அனைத்தையும் வாங்கலாம்' என்றான்.

ஆனால் குமரனின் தாயோ 'வேண்டாம்...அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும், 'அன்பு உள்ளே வரட்டும்' என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.உடன் குமரனின் அம்மா'அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்' என்றார்.

அன்பு சொன்னார்,' நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே சிவம்...அன்பே முக்கியம்.

இதையே வள்ளுவர்..

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு


என்கிறார்..

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்.இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும்.

சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top