.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 20 December 2013

பிரியாணி - சினிமா விமர்சனம்..!



நடிகர் : கார்த்தி

நடிகை : ஹன்சிகா மொத்வானி

இயக்குனர் : வெங்கட் பிரபு

இசை : யுவன் சங்கர் ராஜா

ஓளிப்பதிவு : ஷக்தி சரவணன்



சிறு வயது முதல் நண்பர்களான கார்த்தியும், பிரேம்ஜியும் கார் ஷோரூம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அக்கம்பெனி பெங்களூரில் புதிதாக துவங்கவிருக்கும் கிளை திறப்பு விழாவுக்காக இருவரும் பெங்களூருக்கு பயணமாகிறார்கள்.

அங்கு பெரிய தொழிலதிபரான நாசரை கிரானைட் மோசடி வழக்கில் கைது செய்ய சி.பி.ஐ தீவிரமாக இருக்கிறது. இச் சூழ்நிலையில், கார் ஷோரூமின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நாசருக்கு அங்கு அறிமுகமாகும் கார்த்தியை பிடித்துப் போகவே, அவருக்கு தனது இளைய மகளை திருமணம் செய்து கொடுத்துவிட முடிவு செய்து, தனது மூத்த மகளின் கணவரான ராம்கியிடம் தனது எண்ணத்தை கூறுகிறார். ஆனால், ராம்கிக்கு இது பிடிக்கவில்லை.

நாசர் கொடுக்கும் மிகப்பெரிய விருந்தில் கார்த்தியும், பிரேம்ஜியும் கலந்துகொண்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என முடிவெடுக்கின்றனர்.

அப்போது, மாண்டித் தாக்கரை சந்திக்கும் இருவரும் அவளது அழகில் மயங்கி, அவளுடன் ஓட்டலுக்கு சென்று அவளோடு சேர்ந்து குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கின்றனர். அப்போது அங்கு வரும் நாசரைப் பார்த்தவுடன், இருவரும் அவருக்குத் தெரியாமல் ஓட்டல் அறையிலேயே பதுங்கிக் கொள்கின்றனர்.

செமத்தியான போதையில் இருக்கும் இருவரும் அங்கேயே தூங்கிவிடுகின்றனர். பாதி போதை தெளிந்த நிலையில் கார்த்தி மட்டும் ஓட்டல் அறையைவிட்டு வெளியேறி காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு செல்கிறார். பாதி தொலைவில் போதை முழுவதும் தெளியவே, தன்னுடன் வந்த பிரேம்ஜியை காணாமல் திடுக்கிடுகிறார்.

ஓட்டல் அறையிலேயே அவரை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று எண்ணி, ஓட்டலுக்கு திரும்புகிறார். ஆனால், அங்கு அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைக்கிறது. அறை முழுவதும் ரத்தக்கறையுடன் நாசர் படுகொலை செய்யப்பட்டு கிடக்க, அவருக்கருகே பிரேம்ஜி படுத்திருப்பதை கண்டு மேலும் திடுக்கிடுகிறார். அந்த அறையில் இருந்த தாக்கரையும் காணவில்லை.

உடனடியாக பிரேம்ஜியை எழுப்பி, இருவரும் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறுகின்றனர். நாசர் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் ஓட்டலுக்கு விரையும் போலீசார் அங்கிருக்கும் சி.சி.டிவியை பார்த்தபோது, நாசர் கொலை செய்யப்பட்ட அறையில் கார்த்தியும், பிரேம்ஜியும் இருப்பதை பார்த்து அவர்கள் தான் நாசரை கொலை செய்திருப்பார்கள் என்று முடிவெடுத்து கார்த்தியையும், பிரேம்ஜியையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.

இறுதியில், நாசரைக் கொன்றது யார்? அவரை கொலை செய்தவர்களை போலீசார் கண்டுபிடித்தார்காளா? அவர்கள் எதற்காக நாசரைக் கொன்றார்கள்? என்பதை காமெடி, சஸ்பென்ஸ் கலந்த பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

கார்த்தி இந்த படத்தில் பிளே பாய் கேரக்டரில் வருகிறார். தனது முந்தைய படங்களைப் போல் இளிச்சவாய், தலைசாய்ந்து நடக்கும் கோண நடை என இல்லாமல் இந்த படத்தில் கொஞ்சம் சீரியஸாக நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் எப்போதும் போல் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஹன்சிகாவிடம் பிரியாணி கடையில் நடந்த சம்பவங்களை விவரிக்கும்போது வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். பிரேம்ஜியை கலாய்ப்பதிலும் கலக்கியிருக்கிறார்.

ஹன்சிகா மோத்வானி முதல்பாதியில் நாயகனுடன் டூயட் பாடுவதும், சண்டை போடுவதுமாக வருகிறார். இரண்டாவது பாதியில்தான் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

பிரேம்ஜி வழக்கமான பேச்சு, நடை, உடை என கலாட்டா செய்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் ராம்கி இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். முகத்தில் முதிர்ச்சி தெரியவில்லை. இவருக்கு ஒரு ஆக்சன் சீன் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வழக்கமாக வெங்கட் பிரபு படங்களில் சம்பத்துக்கு வெயிட்டான ரோல் கொடுக்கப்பபடும். ஆனால் இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை வீணடித்திருககிறார்கள். அதேபோல் ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரமும் வேண்டுமென்றே திணிக்கப்பட்டதுபோல் இருக்கிறது.

மாயா கேரக்டரில் வரும் மாண்டி தாக்கர் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களை ரொம்பவுமே சூடேற்றியிருக்கிறார். தொழிலதிபராக வரும் நாசர் மிடுக்கான தோற்றத்தில் அழகாக நடித்திருக்கிறார். உமா ரியாஸ்கான் கேரக்டர் ரொம்ப அற்புதம். அவரும் தன் கேரக்டரின் தன்மை அறிந்து அற்புதமாக நடித்திருக்கிறார். ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ரோல் அவருக்கு கிடைத்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு தனது முந்தைய படங்கள் போல் விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்தியிருக்கிறார். பிரியாணி என்ற தலைப்புக்கு ஏற்றாற்போல் நல்ல சுவையுள்ள, அருமையான விருந்தை வைத்திருக்கிறார். கார்த்தி-க்கு காமெடி சென்டிமென்ட் ஒத்துவராது என ரசிகர்களின் ஏளன பேச்சுக்கு இந்த படம் நல்ல பதிலடி கொடுத்துள்ளது. அவரை நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் வெங்கட் பிரபு.

கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்து சஸ்பென்ஸாக நகர்த்தி, படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு இடத்தில்கூட போரடித்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு காட்சிகளையும் அற்புதமாக செதுக்கியிருக்கிறார். படத்தில் கொஞ்சம் மசாலாவை தூக்கலாக போட்டிருந்தாலும், நாவில் முழுமையான சுவை தெரியவில்லை.

சக்தி சரவணனின் ஒளிப்பதிவு முற்பாதியை விட பிற்பாதியில் பளிச்சிடுகிறது. சேசிங் காட்சிகளில் கேமராவை அழகாக கையாண்டிருக்கிறார். வெங்கட் பிரபு படங்களில் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ? அதுபோல் பாடல்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் இருக்கும். ஆனால், யுவன் இந்த படத்தில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார். 100-வது படம் என்பதால் கொஞ்சம் பதட்டப்பட்டு விட்டார் என்று தோன்றுகிறது. பாடல்கள் எதுவும் கேட்கும் ரகம் இல்லை. பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மற்றபடி ‘பிரியாணி’ செம டேஸ்ட்.

என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்..!




நடிகர் : ஜீவா

நடிகை : திரிஷா

இயக்குனர் : மொய்னுதீன் அகமது

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

ஓளிப்பதிவு : மதி



ஜீவா சிறுவயதாக இருக்கும்போதே அவருடைய தாய், வேறு ஒருவருடன் ஓடிச் சென்றுவிடுகிறார். இதனால் தந்தை நாசரின் அரவணைப்பில் வாழும் ஜீவா, பெண்களைக் கண்டாலே வெறுத்து ஒதுக்குகிறார். இவர் சென்னையிலுள்ள பள்ளியில் சேரும் போது வினய்யும், சந்தானமும் நண்பர்களாகின்றனர். மூவரும் ஒன்றாக சுற்றித் திரிந்து வருகின்றனர்.

மூவரும் பெரியவர்களானதும் விளம்பர கம்பெனி ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். திருமணமே செய்துகொள்ளக்கூடாது என்று மூவரும் சபதம் போட்டுக்கொண்டு ஜாலியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விளம்பரக் கம்பெனிக்கு ஆர்டர் கொடுக்கும் கம்பெனியில் இருந்து இவர்களது விளம்பரத்தை கண்காணிக்கும் பொருட்டு இவர்களுடன் சேர்கிறார் திரிஷா.

இப்படி ஜாலியாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் ஒருநாள் திடீரென்று சந்தானமும், வினய்யும் காணாமல் போய்விடுகிறார்கள். பின்னர் சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து தாங்கள் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக ஜீவாவிடம் கூறுகின்றனர். ஆனால், இதை ஜீவா ஏற்க மறுத்து அவர்களை வெறுத்து ஒதுக்குகிறார்.

தன்னை கவனிப்பதாக கூறி மறுமணம் செய்துகொண்ட தனது தந்தையிடம் நெடுநாளாக பேசாத ஜீவா, தற்போது நண்பர்களும் பிரிந்த சோகத்தில் தனிமையில் தவிக்கிறார். இந்த நேரத்தில் திரிஷாவுடனான தொடர்ந்த இவரது நட்பு, மெல்ல மெல்ல காதலாக உருவெடுக்கிறது.

இறுதியில், தனது காதலை திரிஷாவிடம் சொல்லி அவரை கைபிடித்தாரா? பிரிந்த நண்பர்களுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

ஜீவா இந்த படத்தில் இளமை ததும்பலுடன் நடித்துள்ளார். பெண்களுடன் பேசும்போது கடுகடுவென்று முகத்தை வைத்திருப்பதில் பளிச்சிடுகிறார். கிளைமாக்சில் தனது காதலை சொல்லும்போது இவர் முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன் கைதட்டல் பெறுகிறது. குடித்துவிட்டு கும்மாளம் போடுவதில் கலக்கியிருக்கிறார். வினய் நடிப்பை ரசிக்க முடியவில்லை. அவருடைய நடிப்பும், பாடி லாங்குவேஜும் கடுப்பைத்தான் வரவழைக்கிறது.

சந்தானம் வழக்கம்போல் பேசிக்கொண்டே இருந்தாலும் ஒருசில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். இதுவரை இரட்டை அர்த்த வசனங்களை பேசி கடுப்படித்த சந்தானம் இப்படத்தில் தன் நாவை சிறிது அடக்கி பேசி கவர்ந்திருக்கிறார். திரிஷா நட்பாக பழகுவதாகட்டும், ஜீவாவுடன் காதல் செய்வதாகட்டும் இன்னமும் அதே இளமையுடன், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆண்ட்ரியா தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். ஜீவாவிடம் அடிவாங்கி விட்டு, அவரை தன்னிடம் மன்னிப்பு கேட்க இவர் செய்யும் வித்தைகள் அருமை. கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார்.

சிறுவயதிலிருந்தே நெருங்கிப் பழகி ஒன்றாகவே வாழும் நண்பர்களை மிகவும் இயல்பாக காட்டியுள்ளார் இயக்குனர். முதல்பாதி இயல்பான நகைச்சுவையுடன் கொஞ்சமும் போரடிக்காமல் சென்றிருக்கிறது. இரண்டாம் பாதிதான் சற்றே சொதப்பியிருக்கிறது. என்றாலும், மோசமான படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு படத்தை எடுத்திருக்கிறார். மனிதனின் எல்லா பிரச்சினைகளுக்கும் அவனது ஈகோதான் காரணம் என்று சொல்ல வந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

படத்திற்கு இன்னொரு பிளஸ் பாய்ண்ட் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. இவருடைய பாடல்கள் அனைத்தும் கேட்கும்போதும், பார்க்கும் போதும் பரவசமூட்டுகின்றன. பின்னணி இசையிலும் அவருடைய உழைப்பு தெரிகிறது. மதியின் ஒளிப்பதிவு நிறைவை தருகிறது. பாடல் காட்சிகளிலும், வெளிநாட்டு படப்பிடிப்புகளிலும் தெளிவாக படமாக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘என்றென்றும் புன்னகை’ வாய்விட்டு சிரிக்கலாம்.

ஜலதோஷம் - பாட்டி வைத்தியம்!



தொண்டை எரிச்சல்

எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும்
துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.

பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளி நீங்கும்.
இருமல்

1 கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் வெள்ளபூடு இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து பின்பு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், பசி, ஜீரணம் மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும்
சளித் தொல்லை

ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.

ஜலதோஷம்

திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு மற்றும் மிளகு இவற்றில் சிறிதளவு எடுத்து அதனுடன் வேப்பங் கொழுந்தையும் சேர்த்து அரைத்து நிழலில் காயவைத்து பி்ன்பு அதை மாத்திரையாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
ஜலதோஷம்

சீரகத்தை நன்றாக வருத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

மார்புச் சளி

ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிடவும்.
தலை குளிர்ச்சி

காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

மூக்கடைப்பு தீர‌


சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top