நடிகர் : ஜீவா
நடிகை : திரிஷா
இயக்குனர் : மொய்னுதீன் அகமது
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஓளிப்பதிவு : மதி
ஜீவா சிறுவயதாக இருக்கும்போதே அவருடைய தாய், வேறு ஒருவருடன் ஓடிச் சென்றுவிடுகிறார். இதனால் தந்தை நாசரின் அரவணைப்பில் வாழும் ஜீவா, பெண்களைக் கண்டாலே வெறுத்து ஒதுக்குகிறார். இவர் சென்னையிலுள்ள பள்ளியில் சேரும் போது வினய்யும், சந்தானமும் நண்பர்களாகின்றனர். மூவரும் ஒன்றாக சுற்றித் திரிந்து வருகின்றனர்.
மூவரும் பெரியவர்களானதும் விளம்பர கம்பெனி ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். திருமணமே செய்துகொள்ளக்கூடாது என்று மூவரும் சபதம் போட்டுக்கொண்டு ஜாலியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விளம்பரக் கம்பெனிக்கு ஆர்டர் கொடுக்கும் கம்பெனியில் இருந்து இவர்களது விளம்பரத்தை கண்காணிக்கும் பொருட்டு இவர்களுடன் சேர்கிறார் திரிஷா.
இப்படி ஜாலியாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் ஒருநாள் திடீரென்று சந்தானமும், வினய்யும் காணாமல் போய்விடுகிறார்கள். பின்னர் சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து தாங்கள் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக ஜீவாவிடம் கூறுகின்றனர். ஆனால், இதை ஜீவா ஏற்க மறுத்து அவர்களை வெறுத்து ஒதுக்குகிறார்.
தன்னை கவனிப்பதாக கூறி மறுமணம் செய்துகொண்ட தனது தந்தையிடம் நெடுநாளாக பேசாத ஜீவா, தற்போது நண்பர்களும் பிரிந்த சோகத்தில் தனிமையில் தவிக்கிறார். இந்த நேரத்தில் திரிஷாவுடனான தொடர்ந்த இவரது நட்பு, மெல்ல மெல்ல காதலாக உருவெடுக்கிறது.
இறுதியில், தனது காதலை திரிஷாவிடம் சொல்லி அவரை கைபிடித்தாரா? பிரிந்த நண்பர்களுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
ஜீவா இந்த படத்தில் இளமை ததும்பலுடன் நடித்துள்ளார். பெண்களுடன் பேசும்போது கடுகடுவென்று முகத்தை வைத்திருப்பதில் பளிச்சிடுகிறார். கிளைமாக்சில் தனது காதலை சொல்லும்போது இவர் முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன் கைதட்டல் பெறுகிறது. குடித்துவிட்டு கும்மாளம் போடுவதில் கலக்கியிருக்கிறார். வினய் நடிப்பை ரசிக்க முடியவில்லை. அவருடைய நடிப்பும், பாடி லாங்குவேஜும் கடுப்பைத்தான் வரவழைக்கிறது.
சந்தானம் வழக்கம்போல் பேசிக்கொண்டே இருந்தாலும் ஒருசில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். இதுவரை இரட்டை அர்த்த வசனங்களை பேசி கடுப்படித்த சந்தானம் இப்படத்தில் தன் நாவை சிறிது அடக்கி பேசி கவர்ந்திருக்கிறார். திரிஷா நட்பாக பழகுவதாகட்டும், ஜீவாவுடன் காதல் செய்வதாகட்டும் இன்னமும் அதே இளமையுடன், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆண்ட்ரியா தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். ஜீவாவிடம் அடிவாங்கி விட்டு, அவரை தன்னிடம் மன்னிப்பு கேட்க இவர் செய்யும் வித்தைகள் அருமை. கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார்.
சிறுவயதிலிருந்தே நெருங்கிப் பழகி ஒன்றாகவே வாழும் நண்பர்களை மிகவும் இயல்பாக காட்டியுள்ளார் இயக்குனர். முதல்பாதி இயல்பான நகைச்சுவையுடன் கொஞ்சமும் போரடிக்காமல் சென்றிருக்கிறது. இரண்டாம் பாதிதான் சற்றே சொதப்பியிருக்கிறது. என்றாலும், மோசமான படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு படத்தை எடுத்திருக்கிறார். மனிதனின் எல்லா பிரச்சினைகளுக்கும் அவனது ஈகோதான் காரணம் என்று சொல்ல வந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.
படத்திற்கு இன்னொரு பிளஸ் பாய்ண்ட் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. இவருடைய பாடல்கள் அனைத்தும் கேட்கும்போதும், பார்க்கும் போதும் பரவசமூட்டுகின்றன. பின்னணி இசையிலும் அவருடைய உழைப்பு தெரிகிறது. மதியின் ஒளிப்பதிவு நிறைவை தருகிறது. பாடல் காட்சிகளிலும், வெளிநாட்டு படப்பிடிப்புகளிலும் தெளிவாக படமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘என்றென்றும் புன்னகை’ வாய்விட்டு சிரிக்கலாம்.
0 comments: