தீபாவளி!
குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்!
தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள்,
புது மகிழ்ச்சி,
பலவகைப் பலகாரங்கள்,
ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான்!.
ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிலும் கண் மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகம்.
அதனாலே
தீபாவளி ஹாப்பி அண்ட் சேஃப் தீபாவளியாக அமைய உங்களுக்கு சில முக்கியமான டிப்ஸ்கள் :
1. முதலில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமே பட்டாசுகளை வாங்கவும். தரமற்ற போலியான பட்டாசுகளை விற்பவர்களிடமிருந்து வாங்கிய பட்டாசுகள் நீங்கள் பற்ற வைத்தவுடன் வெடிக்காமல் உங்கள் பணத்திற்க்கு வேட்டு வைக்ககூடிய வாய்ப்பு அதிகம். அல்லது எதிர்பாராத நேரத்தில் வெடித்து ஆபத்தையும் ஏற்படுத்திவிடும்.
2. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பூவினை கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து அதன்படி பயன்படுத்த வேண்டும். ஏனெனில் , ஒவ்வொரு பட்டாசினையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்தினால் கண் உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப்படலாம்.
3. தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க்குகள், குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள அல்லது அவை தயாரிக்கப்படும் இடங்ளைத் தவிர்த்து குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளிகளில் பட்டாசுகளை பயன்படுத்துவதே நல்லது. ராக்கெட்டுகளை குடியிருப்பு பகுதிகளில் உபயோகிப்பதையும், மாணவர்கள், முதியோர்கள் தங்கியிருக்கும் பகுதிகளை நோக்கி செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும். ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக் கொளுத்துவதும் ஆபத்தானதே.
4. தண்ணீர். இது நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல ஒருவெளை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக்கூடிய முதல் உதவி மருந்தும்கூட. எனவே ஒரு பக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
5. ஒரு நேரத்தில் ஒரே ஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்த வேண்டும். த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்திற்க்கு காரணமாகலாம்.
6. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒரு போதும் அத்னை கையில் எடுப்பதற்க்கோ அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்க்கோ முயற்சி செய்யக்கூடாது.அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.
7. குழந்தைகள் தைரியசாலிகள்தான். ஆனாலும் குழந்தைகள் எந்த பட்டாசினையும் தனியே கொளுத்த அனுமதிக்ககூடாது.
8. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்காமல் போனால், பத்து நிமிடம் வரை பொறுமையாக காத்திருந்து ஒரு பக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசினை நீரினுள் நன்றாக மூழ்கவைத்து செயலிழக்க வைக்க வேண்டும். புஷ்வாணம் எரியவில்லை என்றால் கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. திடீரென்று வெடித்து விபத்தினை ஏற்ப்படுத்த வாய்ப்பு உள்ளது. திரி எரிந்தும் வெடிக்காத வெடிகளை கையில் எடுத்துப் பார்ப்பதோ, மீண்டும் பற்ற வைப்பதோ கூடாது.
9. பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி ஸ்டாக் பண்ணி வைப்பது ஆபத்தானது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில் குழந்தைகள் பயன்படுத்தாத இடத்தில் வேண்டுமானால் பத்திரப்படுத்தி வைக்கலாம்.
10. நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒரு பக்கெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். மேற்சொன்னவாறு செய்யாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
11. பட்டாசுகளை பற்றவைக்கும்போது மற்ற பட்டாசுகளை அவற்றிற்க்குறிய பைகளிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொண்டு, உபயோகிக்கும் பட்டாசினை மட்டுமே பற்றவைக்க் வேண்டும். இது மற்ற பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து விபத்து மற்றும் சேதம் ஏற்ப்படுத்துவதை தவிர்க்கும்.
12. ஒரு பட்டாசினை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல.
13. ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக் கண்ணாடி (Plain Spectacle) அணிந்து கொள்வது நல்லது.
14. மிக அதிகமான ஒளியையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது த்ரில்லிங்காக இருக்கலாம். ஆனால் அவை ஆபத்தானவை மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி விளையாடுவது சட்டப்படி குற்றம் ஆகும்.
15. செய்தித்தாள்கள் மூலமாகவும், கடைக்காரரிடம் விசாரிப்பதன் மூலமாகவும் நீங்கள் வாங்கும் பட்டாசு உங்கள் ஊரில் தடை செய்யப்பட்டாதா? அதனை நீங்கள் பயன்படுத்தலாமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
16. எரிந்து முடிந்த மத்தாப்பூக்கள் மற்றும் பட்டாசுகளை மற்றவர்கள் மீதும் மிருகங்கள் மீதும் எரிந்து விளையாடுவது மனிதத் தன்மையற்ற மற்றும் குரூரமான செயலாகும்.
17. குழந்தைகளும் சிறுவர்களும் எந்த சிறிய வகை பட்டாசுகளைக்கூட தன்னிச்சையாகக் கொளுத்துவதற்க்கு தாராளமாக அனுமதிப்பது தவறு. பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் மேற்ப்பார்வையில் பட்டாசுகளை கொளுத்த அனுமதிப்பதே சிறந்தது.
18. பட்டாசினை கொளுத்தி விளையாடும் இடத்தில் ஒரே நேரத்தில் ஒரே ஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்துவது அறிவுடைமை.
19. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பினைக் கொளுத்துவதற்க்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது.
20. மதுபானம் அருந்திவிட்டு உங்களோடு பட்டாசு கொளுத்தி விளையாட, அல்லது உதவி செய்ய யாராவது வந்தால் அவர்க்ளை தவிர்ப்பது உங்களுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது.
21. வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும்போது வெடிகளை கொளுத்திப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். அதனால் பெரிய விபத்துகளை தவிர்க்கலாம்.
22. தரைச் சக்கரம் போன்றவற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துகளையும் வீட்டின் தரை பாழாவதையும் தவிர்க்கலாம்.
23. நீளமான மத்தாப்புக்களை வைத்துக் கொண்டே வெடிகளை வெடிக்க வேண்டும்.வெடிகளைப் பற்ற வைக்கும்போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.ஏனெனில் விபத்து ஏற்ப்பட்டால் விபத்துடன் வெடிப்பொருட்கள் முகத்தின் தோல் வழியே உள்ளே சென்று முகத்தில் நிரந்தர கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடலாம்.
24. பட்டாசு வெடிக்கும் குழந்தைகளும் அவர்களுக்கு உதவியாகச் செல்படும் பெரியவர்களும் கண்டிப்பாக கால்களில் ஷுக்களோ அல்லது செருப்புகளோ அணிந்து கொண்டே பட்டாசுகளைக்கொளுத்தி விளையாட வேண்டும்.
25. வெடிக்காத வெடிகளைத் தேடி எடுத்து மொத்தமாக போகி கொளுத்துவது மிகவும் ஆபத்தானது..
முதல் உதவிக் குறிப்புகள் :
1. எதிர்பாராதவிதமாக பட்டாசினால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும். தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள திசுக்களுக்கு ஏற்ப்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. பின்னர் ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
2. வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது.சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
3. தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியாவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவிற்க்குக் காயம் ஏற்ப்பட்டுள்ளது என்பதை சரியாகத்ச் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்ப்படும்.
4. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது காற்றில் பறக்கக்கூடிய ஆடைகளை அணிவது கூடாது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாவாடை போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு கொளுத்தும்போது எரியும் விளக்கின் நெருப்பு பாவாடையில் பட்டு விபத்து ஏற்படுவதற்க்கான வாய்ப்பு அதிகம். பட்டாசு கொளுத்தும்போது நைலான், பட்டு போன்ற துணிகளை அணியவே கூடாது.
5. ஒருவேளை உங்கள்மீது தீப்பிடித்தால் ஓடாமல் தரையில் உருண்டு தீயை அணைக்க முற்பட வேண்டும்.
தவிர்க்க வேண்டிய தவறுகள்:
பல நேரங்களில் பட்டாசு மற்றும் தீ விபத்துகளின்போது முதல் உதவி என்ற பெயரில் எதையாவது செய்து கண் உட்பட உடலின் பல உறுப்புகளையும் கெடுத்துக் கொள்வதும், யார் என்ன சொன்னாலும் உடனே அத்தனையையும் செய்துவிடுவதும்,மேலும் இது குறித்து பல ஊகங்களும் உள்ளன. உண்மை நிலையை முறையாகத் தெரிந்து கொள்வதே சிறந்தது.
1. பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ஒரு ராக்கெட் வெடித்து ஒரு குழந்தையின் அல்லது ஒருவரது கண்ணை கண்ணாடித் துகளோ அல்லது இரும்புத் துகளோ தாக்கிவிட்டது. ஆனால் கண்களிலிருந்து ரத்தம் ஏதும் வரவில்லை. வலியும் இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உடனடியாக ஒரு மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்டவரை அழைத்துச்செல்வதே சிற்ந்த காரியம். ஏனெனில் பல நேரங்களில் கண் சார்ந்த விபத்துக்களின் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை.உடனடியாகக் கண் மருத்துவரின் கவனிப்பு வழங்காவிட்டால் முழுமையான பார்வையிழப்பு உட்பட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.
2. கண் விபத்துக்குள்ளான குழந்தை அதிக வலியின் காரணமாக கண்ணை அழுத்திப் பிடித்துக் கொள்ளவோ அல்லது கசக்கவோ விரும்புகிறது. இருப்பினும் நாம் செய்யவேண்டியது என்ன தெரியுமா? குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு உடனடியாக கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.கண்களைக் கசக்குவதனால் இரத்தம் அதிகமாக வெளியேறலாம் அல்லது காயத்தின் வீரியம் அதிகரிக்கலாம்.
3. ஒரு குழந்தையின் கண்களை பாட்டில் ராக்கெட், அல்லது வேறு மத்தப்பு தீவிரமாகத் தாக்கிவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கண்ணைச் சுற்றிப் பாதுகாப்பாக ஒரு பேப்பர் கப் ஒன்றினை முகத்தினில் வைத்து கண்ணை அழுத்தாதவாறு டேப்பினால் ஒட்டி அல்லது பாதுக்காப்புக்கான பேட்ச் அணிவித்து உடனடியாக கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல் வேண்டும்.
4. நெருப்புக்காயத்தினால் காயம் பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்த்துச் செல்வதற்க்கு முன்னால் வலி நிவாரணியாக எந்த மருந்தினையும் கொடுக்கக்கூடாது. ஆஸ்ப்பிரின் அல்லது இபுப்ரோஃபேன் போன்ற மருந்துகளை வலியைத் தாங்கிக் கொள்வதற்க்காகக் கொடுப்பது தவறு. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் ஆஸ்ப்பிரின் கண்டிப்பாகக் கொடுக்ககூடாது. இபுப்ரோஃபேன் இரத்தக்குழாய்களை மென்மையானதாக்கி விடும், எனவே இரத்தம் மிக அதிகமாக வெளியேற வாய்ப்பு உள்ளது. எனவே ஒருகணம் கூட தாமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே நல்லது.
5. தீ அல்லது பட்டாசு விபத்தினல் காயம் பட்ட குழந்தையின் முதல் தேவை என்ன தெரியுமா? முதலில் காயம்பட்ட குழந்தையை சமாதானம் செய்து அமைதிப்படுத்த வேண்டும். சில பெற்றோர்கள் குழந்தைகளை கோபித்து அதிகமாகத் திட்டி மன அளவில் மேலும் பாதிப்பை ஏற்ப்படுத்துவார்கள்.இது தவறு. ஒரு சுத்தமான துணியை தீக்காயம் பட்ட இடத்தில் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விபத்து ஏற்ப்படுவது உடல் நலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பாதித்து விடும்..
ஆம், பாதுகாப்பான தீபாவளியே அனைவரும் விரும்புவது!
பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம்!
அனைவருக்கும் ஒளி மயமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.