.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 28 December 2013

நோபல் பரிசு – 2013




1901ல் துவக்கப்பட்ட நோபல் பரிசுகள், இடையில் 1940ல் மட்டும் உலகப்போர் காரணமாக வழங்கப்படாமை தவிர, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் ஐந்து துறைகளுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன.
ஆறாவதாக 1969 முதல், ஸ்வீடன் தேசிய வங்கி, அதே நோபல் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத் துறைக்கும் வழங்கிவருகிறது. பரிசுக்குரிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அல்லது அதுவரையில் துறைவாரியாக எவர் புதிய புதிய கண்டுபிடிப்பு அல்லது செல் மூலம் மனித குல மேம்பாட்டுக்கு அருந்தொண்டாற்றினார்களோ அவர்களுக்கு அத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படும்.


ஆண்டுக்கு ஒருவர் அல்லது மூவருக்கு மிகாமல் அச்சமயம் உயிருடன் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசு அறிவிக்கப்படும்.


நபர்கள் அல்லாமல் அமைப்புகளுக்கும் வழங்கப்படலாம் என்பது பொதுவிதி! ஒருவருக்கு மேல் வழங்கப்படும்போது, தேர்வுக் குழு நிர்ணயிக்கும் விகிதப்படிப் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.


மருத்துவம்: 


அமெரிக்காவின் "யேல்’ பல்கலைக்கழக "ஜேம்ஸ் ஈ ரோத்மன்’ (62 வயது), ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழக "தர்மஸ் சி சுடோஃப்’ ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகின்றன. மனித உடலினுள் நடைபெறும் ஹார்மோன்கள், என்சைம்கள் மற்றும் முக்கிய கெமிகல்களின் இடமாற்றம், அதாவது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வெசில்ஸ் எனப்படும் நுண்ணிய குமிழிகளின் தடை பற்றிய மூவரின் தனித்தனியான ஆய்வுகளுக்காகப் பரிசுத்தொகை 1.2 மில்லியன் டாலர் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.


அந்தப் போக்குவரத்து முறை, மூன்று பொருட்களையும் சரியான இடத்துக்கு, சரியான நேரத்துக்குக் கொண்டு சென்று ஒப்படைக்கிறது எனக் கண்ட அவர்கள், அது பாதிக்கப்படும் போது, நரம்பு தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், மற்றும் நோய் எதிர்ப்புச்சக்திக் குறைவு போன்றவை ஏற்படும் என்பது மூவரின் ஆராய்ச்சி முடிவாகும்.


"செல்களுக்கு உள்ளேயும் வெளியில் பிற செல்களுக்கு இடையேயுமான அந்தப் போக்குவரத்து இல்லாமல் அல்லது தடைப்பட்டுப் போனால் தாறுமாறாக பாதிப்புகளை அடையும் செல்களால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும்’ என்று குறிப்பிடும் பரிசுத் தேர்வுக்குழு, "அந்நிலை ஏற்படாவண்ணம் தடுக்க மூவரின் ஆராய்ச்சிகள் பெரிதும் பயன்படும் என்பதால் பரிசு அளிக்கப்படுவதாக’ குறிப்பிட்டுள்ளது.


இயற்பியல்: 


ஸ்காட்லாந்தின் 84 வயது "பீட்டர் ஹிக்ஸ்’ மற்றும் மெல்ஜியத்தின் 80 வயது ஃப்ரான்கோய்ஸ் எங்வெர்ட் ஆகிய இருவருக்கும் சமமாக வழங்கப்படுகின்றன. நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்ற திடப் பொருள்களின் உருவாக்கத்துக்கு அடிப்படைச் சக்தியாக விளங்குவது இப்பிரபஞ்சத்தின் பஞ்சபூதங்களில் அடங்கியுள்ள அணுவைவிடச் சிறிய நுண்ணிய பார்டிகிள் எனப்படும் துகள்களே ஆகும் என்ற கண்பிடிப்பிற்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.


 பரிசுத்தொகை சமமாகப் பங்கிட்டு அளிக்கப்படும். அத்துகள்கள் "ஹிக்ஸ்’ என்ற அந்த இருவரில் ஒருவர் பெயரால் "ஹிக்ஸ் போசோம்’ எனப்படுகிறது. இப்பிரபஞ்சத்தின் சகலத்துக்கும் மூலசக்தியாக அத்துகள் விளங்குவதால் அதைக் கடவுள் துகள் என்கின்றனர் சமீபத்தில் நடத்தப்பட்ட லார்ஜ் ஹேட்ரன் கொல்லைடர் எனப்பட்ட செயற்கை பிக்பங்க் மோதலுக்குப் பிறகு 2012 ஜூலை 4ல் தான் இக்கொள்கை வெளியிடப்பட்டது. எனினும் அவ்விருவரும் 1964 முதலே இது பற்றி ஆய்வு செய்து வந்துள்ளனர்.
என்றாலும் "போசோம்’ அணுக்கள் கண்டுபிடிப்பின் பெருமை ஒரு இந்தியரையே சாரும்.


1920லேயே அதுப்பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் இணைந்து ஆய்வு செய்யும் வாய்ப்புப் பெற்றிருந்த சந்யேந்திரநாத் போஸ்தான் அதனைக் கண்டுபிடித்தவர். அதனாலேயே பால்டிரக் என்ற இயற்பியலாளர் அதற்க அவர் பெயரையே அதாவது போசோன் என்று பெயரிட்டார். அதையொட்டிய ஆய்வுக்கே இவ்வாண்டின் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. என்றபோதிலும் அப்போது சத்தியேந்திர நாத் போஸ் நோபல் பரிசினைப் பெறவில்லை. அதன்பிறகு ஹிக்ஸ் போசேன் போன்று நிறையவகை துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.


வேதியியல்: 


வேதியியல் பரிசினை மூவர் பெறுகின்றனர். அவர்கள் ஆஸ்திரிய-அமெரிக்கர் மார்டின் கர்ப்பளஸ், அமெரிக்க இஸ்ரேல் மற்றும் பிரிட்டனின் குடியுரிமை பெற்ற மிகெய்ல் லீவிட் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கர் அரீஹ் வார்ஷல் ஆகியோராவர். இவர்களின் கண்டுபிடிப்பு வேதியியல் சோதனைகளை சைபர் ஸ்பேசுக்கு இட்டுச் செல்லும் என்கிறார் அகாதமிச் செயலாளர் ஸ்டாஃபன் நார்மார்க். சிக்கலான மூலப்பொருளைத் தூண்டக்கூடிய கணினி மென்பொருள் மாதிரியை உருவாக்கியதற்காக இப்பரிசு! இனி விஞ்ஞானிகள் சோதனைக் குழாய்க்குப் பதிலாகக் கணினியைப் பயன்படுத்தலாம். ரசாயன மாற்றங்கள் நிகழும் விதத்தைக் கணினி மூலம் அறியலாம்.


இனி வேதியியலாளர்கள் பிளாஸ்டிக் உருண்டைகள் மற்றும் குச்சிகளுக்குப் பதிலாக கணினியில் அதைச் செய்துவிட முடியும். புதிய மருந்துகள் தயாரிக்கவும். சூரிய செல்கள் உருவாக்கவும் இவர்கள் கண்டுபிடித்த ஆய்வறிவு பெரிதும் பயன்படும். புரொட்டின் எப்படி வேலை செய்கிறது என்பதை அவர்கள் உருவாக்கிய வழிமுறை புரிய வைக்கிறது என்கிறார் வார்ஷல். மனித உடலின் சரியான அமைப்பைக் காணவும், அது செயல்பட வேண்டியதை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதை அறியவும் இக்கணினி முறை உதவும்.


பொருளாதாரம்: 


பொருளாதாரப் பரிசு மூன்று பேர் பெறுகின்றனர். அவர்கள் ஏல், பல்கலையின் ராபர்ட் ஷில்லர், சிகாகோ பல்கலையின் யூகின் ஃபாமா, மற்றும் லார்ஸ் பீட்டர் ஹேன்சன் ஆகியோர் ஆவர். சொத்தின் மதிப்பை நீண்டகால அடிப்படையில் கணிப்பதுதான் சரியாக இருக்கும் என்ற அவர்களது ஆய்வுக்குத்தான் இந்தப் பரிசு. அதைத் தினம் அல்லது வாரங்களுக்குள் கணிக்க முடியாது. மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் என்ற நீண்டகால அளவில் ஆராய்வது அதிகப் பலனைத் தரும் என்கின்றனர். மேலும், திரும்பக் கிடைப்பதில், சிக்கலில்லாத நிலையில் முதலீடு செய்வது சிறந்தது என்ற அவர்களின் ஆய்வு, விரும்பும்போது திரும்பக் கிடைப்பதை வலியுறுத்துகிறது.


தவறான விலை நிர்ணயம் மற்றும் முதலீடு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விடலாம் எனும் அவர்கள், அமெரிக்காவில் ஏற்பட்ட வீட்டுச் சந்தை மதிப்பின் வீழ்ச்சி எவ்வாறு அந்த நாட்டுப் பொருளாதார மந்தநிலையை உருவாக்கியது என்பதை உதாரணமாகக் காட்டுகின்றனர். எனவே, கடந்துவிட்ட பல தவறுகளையும், சரியற்ற நிதி நிலையையும், சமீபத்திய பொருளாதார நெருக்கடி வெளிப்படத்துகிறதல்லவா? அதை எப்படி சரிசெய்வது என்பது ஷில்லரின் ஆய்வு!


குறுகிய கால முன் கணிப்பு கடினமானது என்பதை ஆய்வு செய்த ஃபாமா புதிய தகவல் மற்றும் வழிமுறைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்கிறார். மூன்றாமவரான ஹேன்சன் புள்ளிவிவர முறை ஒன்றை வகுத்தார். அது சொத்தின் மதிப்பைக் கணக்கிடப் பெரிதும் பயன் படக்கூடியதாகும் என்பது அவரது கணிப்பாகும்.


கொள்கை மற்றும் செயலளவில் சொத்து மதிப்பு நிர்ணயத்துக்கு மூவரின் ஆய்வுகளும் பயன் அளிக்கக்கூடியவை என்பதால் அவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


இலக்கியம்:


இலக்கிய பரிசை கனடாவின் 82 வயது ஆலிஸ் மன்றோ அந்நாட்டின் முதல் இலக்கியப் பரிசாளர் மற்றும் பெண் பரிசாளராகிறார். இவர் ஆரம்பம் முதல் 13வது நோபல் பெண்மணி. வாசகர்களுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். அவரத தலை சிறந்த சிறுகதைகளுக்காக இப்பரிசு! அவர் ஒரு நாவலாசிரியரும் ஆவார். நியூ யார்கர்ஸ் இதழில் எழுதத் தொடங்கிய இவரது சிறுகதைகள் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன.


 ஒரு குடியானவத் தந்தைக்கும் ஆசிரியத்தாய்க்கும் மகளாகப் பிறந்த ஆலிஸ், சிறந்த மாணவிக்கான படிப்புதவித்தொகை பெற்று, ஒன்டாரியோ பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத் தொழிலுக்கான முக்கியப் பாடத்துடன் பட்டம் பெற்றார். தனது எழுத்துத் திறனை வளர்த்துக் கொண்டார். ஜேம்ஸ் மன்றோ என்ற சக மாணவனைத் திருமணம் செய்து கொண்டார்.


நல்ல தாயாகி, எழுத்துப் பணியையும் தொடர்ந்தார். நாளடைவில் அவரது புகழ் பரவியது. புத்தகவிற்பனை சூடுபிடித்தது. அதே நேரத்தில் அவருக்கு இரண்டாவது கணவனை ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாயிற்று. அச்சமயத்தில் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு "டான்ஸ் ஆஃப் தஹேப்பி ஷேட்ஸ்’ வெளிவந்து, பிற்பாடு 1969ல் கவர்னர்ஸ் பரிசைப் பெற்றது. இப்போது இவரது சிறுகதைகளின் எழுத்துத்திறனைப் பாராட்டி, இந்த நோபல் அவரைத் தேடி வந்துள்ளது.


உலக அமைதிக்கான பரிசு:

 அமைதிக்கான நோபல் பரிசு ரசாயன ஆயுதங்களை முற்றிலுமாக இந்த உலகிலிருந்து அழித்து, உலக அமைத்திக்காகப் பாடுபடவேண்டும் என்ற உயர் நோக்கத்தோடு ஐக்கிய நாடுகள் அவையின் தீவிர முயற்சியால் 1997ல் அமைக்கப்பட்டு அரும்பணியாற்றிவரும் ஆர்கனிசேஷன் ஃபார் த ப்ரிவென்ஷன் ஆஃப் கெமிகல் வென்ஸ் என்ற பொதுநலத் தொண்டமைப்புக்கு வழங்கப்படுகிறது.


தலைமையகம் "தி ஹேக்’ நகரில் உள்ளது. தற்போது 189 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டது.


சிரியாவில் குவிந்து கிடக்கும் ரசாயன ஆயுதங்களை ஆபத்தான போர்க்களம் என்ற அச்சம் சிறிதுமின்றி கண்டு அழிக்க முயலும் அந்த அமைப்பின் தொழில்நுட்ப வல்லுனர்களின் மன உறுதியைப் பாராட்டியும், அவர்கள் முயன்றுவரும் ரசாயன ஆயுத ஒழிப்புப் பணி மற்றும் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளை ஊக்கப்படுத்துவதற்காகவும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


இதுபற்றிக் கூறும் தேர்வுக் குழு குறிப்பிட்ட கால எல்லையாகிய 2012 ஏப்ரல் கடந்துவிட்ட போதிலும் அமெரிக்கா, ருஷ்யா உள்ளிட்ட நாடுகள் இன்னும் கூட அதன்படி நடந்துகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.


மேலும் ஆயுதமற்ற உலகம் என்ற ஆல்ஃரெட் நோபலின் குறிக்கோளை எட்ட இந்த ஆர்கனிசேஷன் ஃபார் த ப்ரிவென்ஷன் ஆஃப் கெமிகல் வென்ஸ்வுக்கு வழங்கப்படும் அமைதிபரிசு முதல் முயற்சியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


அதன் பொது இயக்குனர் இது ஆர்கனிசேஷன் ஃபார் த ப்ரிவென்ஷன் ஆஃப் கெமிகல் வென்ஸ்வுக்குக் கிடைத்துள்ள மாபெரும் கௌரவம் மற்றும் பணிக்கான அங்கீகாரம் ஆகும் என்கிறார்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top