.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 28 December 2013

பிரசண்டேஷன் தேவையா?



Stress எனப்படுவது என்ன நாம் யோசிக்கும் முன், ஸ்ட்ரஸ் பற்றி ஒரு நாளில் எத்தனை முறை கதைக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கலாம். ஆபீஸின் வாட்டர் கூலர் பேச்சுகளில், காபி குடித்துக் கொண்டே, லிப்டில் பயணிக்கும் போது, இஸ்திரி போடுகையில், மனைவியிடம், மானேஜரிடம், பங்குச் சந்தையில், பட்ஜெட் வேடிக்கையில் எனப் பலப்பல முறை ஸ்ட்ரஸ் ஆகிறோம் மற்றும் அதைப் பற்றி பேசுகிறோம். மனச் சோர்வு என்பது Stressன் சுமாரான தமிழாக்கம் மட்டுமே. மனத்தை தாண்டி பாதிக்கப்படுவதை விவரிக்காமல் விட்டுவிட்டது தான் மிகப்பெரிய தப்பு எனத் தோன்றுகிறது.


ஒரு மானோ வரிக்குதிரையோ மேய்ந்து கொண்டிருக்கிறது அல்லது வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவைகள் ஒரு நாளில் மூன்று மணிநேரம் மட்டுமே தனக்கு தேவையான உணவு காலரிகளை தேடி அலைகிறது. மற்ற நேரம் வானத்தைப் பார்த்தபடியோ தன் மற்ற உறவினர்களை கொஞ்சியபடியோ செலவழிக்கிறது.  இந்த மானை இரை தேடி வரும் ஒரு சிறுத்தை துரத்தும் போது, விட்டதை போட்டு விட்டு உயிருக்கு ஓடும் அந்த ஓட்டம் தான் ஸ்ட்ரஸ். அது தான் அந்த மானுக்கு ஏற்படும் மிகப்பெரிய stressful situation.


அந்த நொடியில் அம்மானின் ஏற்படும் உடல் இயக்கத்தை சற்றே வேகம் குறைத்துப் பார்க்கலாம். சிறுத்தையை ஓரக்கண்ணில் பார்க்கும் வினாடியில் மானின் மூளை ஓடு எனக் கட்டளையிட, மற்ற அத்தனை உடல் இயக்கங்களும் சட்டென நின்று விடுகின்றன.  பசியோ உறக்கமோ மற்ற உடல் இச்சைகளோ தடைப்பட்டு அத்தனை ரசாயனங்களும் ஒன்று சேர்ந்து வேலை செய்வது நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை அனுப்புவதற்க்காகத்தான்.


  அதன் மூலம் உடலெங்கும் ரத்தம் அனுப்பப்பட்டு தசை நார்கள் வேகமாக நகர மான் ஓட்டமாய் ஓடுகிறது. ஆக இந்த மிகக் கடினமான ஓட்டத்திற்காக மற்ற இயக்கங்கள் வழிவிடுகின்றன. ஓட்டத்திற்கு பிறகு…பிறகு என்பது அந்த மானுக்கு இருந்தால் சிறுத்தையிடம் இருந்து தப்பித்த இரண்டு அல்லது மூன்றாம் நிமிடத்தில் உடல் இயக்கங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. ஸ்ட்ரஸ் போய் விடுகிறது.


நம்போல் எப்போதும் ஸ்ட்ரஸில் இருக்கும் ஒரு மனிதனின் உடல் எந்த மாதிரி கடும் உழைப்பிற்கு உள்ளாகும் என யூகித்தால் கூட ஸ்ட்ரஸ் வந்து விடும்.  மானின் அந்த பத்து நிமிட ஸ்ட்ரஸ் மனிதனுக்கு ஆறு மாதம் இருந்தால் கூட அவன் உடம்பிற்கு மேலும் இரண்டு வருடங்கள் வயதாகிவிடுவதாக சொல்லுகிறார்கள். 


அமெரிக்காவில் ஸ்ட்ரஸ் என்பதால் அல்சர் வருவாதாய்த் தான் அறுபதுகளில் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.  இருபது வருடங்கள் கழித்து தான் அதன் காரணம் புரிந்தது.  ஸ்ட்ரஸ் இருக்கும் போது மேலே சொன்ன உடல் இயக்கங்கள் தடைபடும் போது உடல் தடுப்பாற்றல் இழந்து எல்லாவிதமான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உள்ளே நுழைய அல்சர் உட்பட எல்லா நோய்களும் வந்து விடுகின்றன.


கம்ப்யூட்டரும் கையுமாய் எதற்காகவோ எப்போதும் வேகமாய் நகர்ந்து கொண்டே பதட்டமாய் நடமாடுகிற இக்காலத்தில் ஸ்ட்ரஸ் என்பது இல்லையென்றால் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து கொண்டே, சதா இரண்டு கைகளால் சாப்பிடுபவனை நாமோ,” எப்படி சார் உங்களுக்கு இவ்ளோ டைம் இருக்கு” எனக் கேட்டு அவனை பெருமைப்படுத்தி சீக்கிரமே மேலே அனுப்ப தயாராக்குகிறோம். 


இதைத் தான் மனச்சோர்வு என்று சொல்வதை விடுத்து மகா-சோர்வு என உண்மை உரைக்கச் சொல்லாம். மகாசோர்வை ஒழித்துக் கட்ட முதல் கட்டம் அதைப்பற்றி அறிந்து கொள்ளுதல் தான். தனக்கு மகாசோர்வு ஏற்படும் தருணங்களை புரிந்து கொள்ளுதலும் அதை கழட்டி விடுவது எப்படி என முடிவெடுப்பதற்கு முக்கியம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top