.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 28 December 2013

பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி...



பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு...


இல்லத்தரசிகளுக்கு தீராத தலைவலிகள் என்று பெரிய பட்டியலே இருக்கும்...

 அதில் பூச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டாயம் இடமுண்டு. ஆம்...

கரப்பான்பூச்சி, பல்லி, எலி, எறும்பு, மூட்டைப்பூச்சி என வீட்டில் வாழும் 'ஜீவன்'களின் தொல்லை... தாங்க முடியாத தொல்லையே.

 'அடச்சே...

என்ன செய்தாலும் இதையெல்லாம் ஒழிக்க முடியலையே' என்று புலம்பிக்கொண்டே இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, அவற்றை விரட்டி
அடிக்கும் வழிகள்...


கெட் அவுட் கரப்பான்பூச்சி!


''பொதுவாக ஈரம், இருட்டுள்ள இடங்களிலும், சமையலறையிலும் கரப்பான்பூச்சியின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பூச்சிக்கொல்லி ஸ்பிரே உள்ளிட்ட ரசாயன பொருட்களை உபயோகித்து விரட்ட முயற்சிக்கும்போது, அந்த ரசாயனங்கள் காற்றில் கலந்து... அரிசி, மாவு, மசாலா பொருட்கள் போன்றவை திறந்திருந்தால், அதில் கலந்துவிட அதிக வாய்ப்பு உண்டு. காற்றை கிரகிக்கும் தன்மையுள்ள மாவுப்பொருட்கள், இந்த ரசாயனங்களின் தன்மையை இழுத்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது. எனவே, கரப்பான்பூச்சிகளை அழிக்க... ரசாயன ஸ்பிரேக்கள் வேண்டாம்.


தற்போது புதிய வகை ஜெல், சந்தைக்கு வந்துள்ளது. கரப்பான்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும் இடங்களில் இதை பொட்டு போல ஆங்காங்கே வைக்க வேண்டும். நேரம் ஆக ஆக இது இறுகும். உணவு வேட்கையில் வரும் கரப்பான்பூச்சிகளை இந்த ஜெல்லின் நறுமணம் ஈர்க்க, இறுகி இருக்கும் இந்த ஜெல்லை தன் எச்சிலால் அவை இளக்கி சாப்பிட, அந்த நிமிடமே இறந்துபோகும்.


உடைந்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு போன்ற பொருட்களை அரைத்து, ஊசிப்போக வைத்து, அதனுடன் ரசாயனங்களைக் கலந்து உருவாக்கப்படும் இந்த ஜெல், நம் கிச்சன் பொருட்களைப் பாதிக்காது. மேலும், இதை சாப்பிட்ட உடனேயே கரப்பான்பூச்சி இறந்துபோவதால், மற்ற பொருட்களிலும் ரசாயனங்கள் கலந்துவிடுமோ என்கிற கவலையும் இல்லை.


பை பை பல்லி!


கடைகளில் விற்கும் கெமிக்கல் ஸ்பிரேக்களை பல்லியின் மீது அடித்து, அதை அழித்துவிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அதை உபயோகிக்கும் நுணுக்கம் அறிந்துகொள்வது அவசியம். பல்லியின் மேல் தோலானது, மெழுகு போன்ற தன்மை கொண்டது என்பதால், நாம் அடிக்கும் ஸ்பிரே அதனை பாதிக்காது. மாறாக, பல்லியின் முகத்துக்கு நேராக கெமிக்கல் ஸ்பிரேவை அடிக்கும்போது, பல்லியின் நாக்கில்பட்டு உட்செல்லும்போது, அது இறந்துபோகும்.


ஒழிக எலி!


சுண்டெலி, மளிகைக் கடைகளில் இருக்கும் எலிகள், பெருச்சாளி என்று எலிகளில் மூன்று வகைகள் உள்ளன. இதில் மளிகைக் கடைகளில் இருக்கும் வகையறா எலிகள், குட்டி போடும் சமயத்தில் மட்டும்தான் ஒரே இடத்திலோ... அல்லது வீட்டிலோ இருக்கும். மற்றபடி எந்த ஓர் இடத்திலும் நிரந்தரமாக இருக்காது. சுண்டெலி, எந்த வீட்டில் இருக்கிறதோ அங்கு மட்டும்தான் நிரந்தரமாகக் குடியிருக்கும். அந்த வீட்டின் ஓர் அறையில் இருந்து மற்றோர் அறைக்கு தாவிக்கொண்டே இருக்கும். பெருச்சாளி வீட்டுக்குள் வராது. வீட்டைச் சுற்றி ஓடும் அல்லது சாக்கடைப் பொந்துகளில் குடியிருக்கும்.


வீட்டில் குடியிருக்கும் சுண்டெலியை விரட்ட, 'கம் பேட்' (Gum pad) என்கிற புதுவித பொறி கடைகளில் கிடைக்கிறது. நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்ததுபோல இருக்கும் இந்த பேட். அதன் மேல் வெள்ளை நிறத்தில் கம் இருக்கும். எலி நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் இந்த பேடை வைத்துவிடுங்கள். ஓடி வருகிற எலி இதில் கால் வைக்கும்போது, நகர முடியாத அளவுக்கு ஒட்டிக் கொண்டுவிடும். காலையில் அப்படியே தூக்கி வெளியே போட்டுவிடலாம்.


 ஒருவேளை இந்த பேடில் உள்ள கம் கீழே கொட்டிவிட்டால்... கெரசின் கொண்டுதான் துடைத்தெடுக்க முடியும். தப்பித் தவறி இதில் கை, கால் என்று நம்முடைய உடல் பாகங்கள் பட்டாலும் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒட்டிக்கொண்டு விட்டால்... நெயில் பாலிஷ் ரிமூவரை பயன்படுத்தி நீக்கிவிடலாம். பிறகு, சோப்பு கொண்டு உடல்பாகத்தை சுத்தமாக கழுவிவிடுவது முக்கியம். இந்த கம் பேட், இரவு நேர உபயோகத்துக்குத்தான் நல்லது. ஆட்கள் அதிகம் நடமாட்டமிருக்காது என்கிற நிலையில், பகலிலும் பயன்படுத்தலாம். என்றாலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதைப்பற்றி அறிவித்துவிடுவது நலம்.


அடுத்ததாக, மளிகைக் கடையில் இருக்கும் எலிகள் வீட்டில் இருந்தால், ஸ்பிரிங் எலிப்பொறி (மர எலிப்பொறியைவிட இது சிறந்தது) வைத்துப் பிடிக்கலாம். ஆனால், எலிகளுக்கு ஞாபகசக்தி அதிகம். முதல் நாள் எலிப்பொறியை பார்த்து அதில் மாட்டாமல் தப்பிவிட்டால், மறுநாள் அந்தப் பக்கம் செல்லாது. எனவே, எலிகள் அதிகம் புழங்கும் இடத்தில் ஒன்றுக்கும் அதிகமான எலிப்பொறிகளை வைத்து, அது எந்தப் பக்கம் நகர்ந்தாலும் மாட்டுவது போல ஏற்பாடுகள் பலமாக இருக்க வேண்டும்.


பெருச்சாளிகள் வீட்டுக்குள் வருவது அபூர்வமே. அதேசமயம், கடைகளையட்டி சர்வசாதாரணமாக நடமாடும். பெருச்சாளிகளைப் பொறுத்தவரை எலி பாஷாணம் ஒன்றுதான் தீர்வு. விஷம் தோய்ந்த சின்ன கேக் வடிவத்தில் இது விற்கப்படுகிறது. பெருச்சாளி நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இதை வைத்துவிட்டால்... உணவுப் பொருள் என்று நினைத்து சாப்பிடும் பெருச்சாளிகள், இறந்துவிடும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top