.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 28 December 2013

ரக்க்ஷா பந்தன் எனும் சகோதர திருநாள் !




ரக்ஷாபந்தன் எனும் சகோதர திருநாள் நம் இந்திய திருநாட்டில் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் அடிப்படையான வரலாற்று செய்தியை நாம் இங்கு காண்போம். நம்  வீடுகளில் சகோதர, சகோதரிகள் இணைந்து பிறக்கிறார்கள். ஆனால், சிலருக்கோ சகோதரரோ, சகோதரியோ இருப்பதில்லை. இது அவர்கள் மனதில் ஒரு ஆதங்கமாகவே இருக்கும். இப்படி ஒரு நிலைமை, விநாயகரின் மகன்களுக்கே இருந்ததாம்.


தமிழகத்தில் நாம் விநாயகரை பிரம்மச்சாரியாகவே காண்கிறோம். வட மாநிலங்களில் சித்தி, புத்தி என்ற தேவியர் அவருக்கு உண்டு. இவர்களுக்கு சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை, இவர்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ரக்ஷா என்னும் கயிறு கட்டும் சகோதரிகளைக் கண்டனர்.


தங்களுக்கும் சகோதரி வேண்டுமென தந்தையிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையும் நிறைவேறியது. சந்தோஷப்பட்ட சுபமும் லாபமும், தங்கள் தங்கைக்கு "சந்தோஷி' என்று பெயர் சூட்டினர். சந்தோஷிமாதா வழிபாடு வடமாநிலங்களில் பிரசித்தம். இவர்களைக் குடும்பமாக தரிசிக்க வேண்டுமானால், அகமதாபாத்திலுள்ள அம்பாஜி மாதா கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே தனி சந்நிதியே இருக்கிறது.


இந்த நிகழ்வின் அடிப்படையில், பெண்கள் யாரை சகோதரர்களாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கு "ராக்கி' என்னும் கயிறு கட்டுவார்கள். "ரக்ஷ' என்றால் "பாதுகாப்பு தரும் கயிறு'. இதை அணிவிக்கும் தினமே ரக்ஷாபந்தன். ஆவணி பவுர்ணமியன்று இது கொண்டாடப்படுவது வழக்கம். இன்றும், நாளையும் பவுர்ணமி திதி இருப்பதால், இரண்டு நாட்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டலாம். சொந்த சகோதரர்கள் உள்ளவர்களும், அவர்களின் நலன் கருதி இந்தக் கயிறை அணிவிக்கலாம்.


ரக்ஷா கயிறு கட்டுவதன் மூலம், ஒரு ஆண், குறிப்பிட்ட பெண்ணின் பாதுகாப்பு, எதிர்கால வாழ்வுக்கு துணையாக இருப்பதாக உறுதியளிக்கிறார்.மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வந்த விஷ்ணு, பூலோகம் வந்த போது, அவரைப் பிரிய விரும்பாத லட்சுமியும் பூலோகம் வந்தாள். சாதாரண பெண்ணாக வேடம் தரித்த அவள், ஆவணி பவுர்ணமியன்று மகாபலியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். மகாபலியைத் தன் சகோதரனாக எண்ணி ரக்ஷா கயிறு கட்டினாள். இதனாலும், இந்த விழா நடப்பதாகச் சொல்வதுண்டு.


கி.பி.1303ல் ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கரை அந்நியப்படைகள் தாக்கும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னர்களும் சகோதர உணர்வுடன் ராணியைக் காக்க தங்களின் படையை அனுப்பி உதவி செய்தனர். சகோதரத்துவத்தை பேணும் இந்த திருவிழாவை நாமும் கொண்டாடி மகிழ்வோம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top