.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 28 December 2013

அன்பு எங்கே வாழ்ந்தது?!



அன்பினால் உலகையே வளைத்து விடலாம் என்று நினைத்தேன். கடைசியில் வளைந்தது. என்னவோ நான்தான். அன்பு செலுத்தியதால் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறேன் என்ற புலம்பலைக் கிட்டத்தட்ட எல்லோரிட மும் கேட்க முடிகிறது. நமது துன்பத்துக்கு காரணம் அன்பல்ல.... பற்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 
அன்புக்கும் பற்றுக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. நந்தவனத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றில் சில மலர்களே இறை வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீதமுள்ளவை பதில் புன்னகையைக் கூட எதிர்பாராமல் சிரிக்கின்றன. அன்பு எதிர்பார்ப்புகள் அற்றது பற்று, எதிர்பார்ப்புகள் நிறைந்தது. நாம். அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் மூட்டை மூட்டையாக எதிர்பார்ப்புகளையும் சேர்த்துச் செலுத்துகிறோம்.


 அதனால் ஏமாற்றங்களை சந்தித்துத் துவண்டு போகிறோம். அன்பு ஏமாற்றம் அடைவதில்லை. ஏனெனில் அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆங்காங்கு பயிர்களுக்கும் உயிர்களுக்கும் உயிரூட்டியபடி நகர்ந்து கொண்டிருக்கும் நதியைப் போல அன்பு உடையவனின் வாழ்க்கையும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. இடையறாது அன்பு செலுத்துதலே தனது இயல்பாகக் கொண்டவனின் எண்ணங்கள் மேன்மையானவையாக இருக்கும். அவனது சொற்களில் தூய்மையும் இனிமையும் ததும்பும் செயல்கள் சமுதாயத்துக்கு நன்மை பயப்பனவாக இருக்கும்.


சிறு வயதில் ஆசையாக மணல் வீடு கட்டி பிறகு காலால் அதை எட்டி உதைத்துவிட்டு வந்தவர்கள்தான், இப்போது பொருட்கள் மீதும் மனிதர்கள் மீதும் பற்று வைத்து கவலைக் கடலில் ஆழ்ந்து கிடக்கின்றனர். தனது காரின் மீது சின்ன கீறல் விழுந்தாலும், தன் உடலிலேயே கீறல் விழுந்தது போல் துடிப்பவர்கள் உண்டு பற்று கொண்டவன் தன்னையும் அறியாமல் பிறரது சுதந்திரத்தில் குறுக்கிட்டு தனது சுதந்திரத்தையும் நிம்மதியையும் சேர்த்து இழக்கிறான். பற்றற்றவனோ, பிறருக்கும் சுதந்திரம் அளித்து தானும் சுதந்திரமாக இருக்கிறான்.


 பறவையின் மீது பற்று கொண்டவன். அதை கூண்டில் அடைக்கிறான். பறவையைப் பாதுகாக்கும் பொறுப்பில் தானும் சிக்கிக் கொள்கிறான். அதே பறவையின் மீது அன்பு செலுத்துபவன் அது ஆகாயத்தில் பறப்பதை ஆனந்தமாக வேடிக்கை பார்க்கிறான். பற்று பந்தப்படுத்துகிறது. அன்பு, விடுதலை அளிக்கிறது பற்று கொண்டவன், தன்னைச் சுற்றி வட்டங்கள் போட்டுக் கொண்டு தானும் அதில் சிக்கிக்கொள்கின்றான்.


அன்பு கொண்டவன். எல்லைகளைக் கடந்தவனாக நிம்மதியை சுவாசிக்கிறான். பற்று குறுகிக் கொள்கிறது அன்பு பரந்து விரிகிறது. வாழ்க்கை என்பது அன்பால் விரியும் வட்டம்! சுவாமி விவேகானந்தரது சிறு வயதில், அவரைப் பெற்றெடுத்த அன்னையும், சில சகோதர, சகோதரிகளும் இருந்தனர். அவரது வட்டம் விரிந்தது. அவர் ராமகிருஷ்ணரின் சீடரானதும் அன்னை சாரதாதேவி அவருக்கு அன்னையானார். ராமகிருஷ்ணரின் பிற சீடர்கள், சகோதரர்கள் ஆனார்கள். வட்டம் விரிந்தது பாரதம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு குமரி முனையில் தவம் செய்தார்.


பாரதத் தாய் அன்னையானாள் பாரத தேசத்தவர் அனைவரும் அவரது சகோதர சகோதரிகள் ஆனார்கள். வட்டம் இன்னும் விரிவடைந்தது. சிகாகோவில் உலக மதங்களின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார் இப்போது உலக அன்னை அவரின் அன்னையானாள். உலக மக்கள் அனைவரும் அவரின் சகோதர சகோதரிகள் ஆனார்கள்.


 ‘அமெரிக்க நாட்டு சகோதர - சகோதரிகளே!’ என்று அவரின் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்த அந்த தூய சொற்கள் பொருளியலில் மூழ்கி, குறுகிய மனம் படைத்தவர்களாக துயரத்தில் ஆழ்ந்திருந்த எண்ணிலடங்கா மக்களுக்கு ஆறுதல் அளித்தது. அன்பில் இருந்து உதித்த அவரது சொற்கள், வாழ்க்கையை பற்றிய விசாலமான பார்வையையும் பாரத நாட்டின் அருளியல் சிந்தனையையும் இன்றும் உணர்த்திக்கொண்டிருக்கிறது. பற்று சுயநலம் மிக்கது அன்பு, சுயநலமற்றது!


ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு திட்டத்துடன் உலகில் பிறந்திருக்கிறான். நமக்குக் குழந்தைகளாகப் பிறந்துவிட்ட காரணத்தாலேயே அவர்கள் மீது நமது கருத்துகளைத் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் பார்த்து நீ வைத்தியராகவா பொறியியலாளராகவா என்னவாக விரும்புகிறாய்?’ என்று கேட்கிறோம். அந்தப்பிஞ்சு மனதுக்குள் ஓர் உயர்ந்த கவிஞனோ, ஓவியனோ உறங்கிக்கொண்டிருக்கலாம்.


அவனைத் தட்டி எழுப்ப நமக்குத் தெரிவதே இல்லை. ‘உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வரவில்லை. உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள். கலீல் ஜிப்ரானின் வசீகர வரிகள் இவை! தவறு செய்யும் குழந்தைகளை அல்லது குடும்பத்தினரைக் கண்டிப்பதோ அறிவுறுத்துவதோ தவறு இல்லை. நம் எண்ணப்படி அவர்கள் நடக்கவில்லையே என்று கவலைக்கடலில் ஆழ்வதுதான் தவறு.


மாற்றங்கள் இயல்பாக நிகழும் வரை பொறுமை அவசியம் தானே மலர்ந்த மலருக்கும் நாம் தட்டியதால் வலிக்க வலிக்க இதழ்களை விரித்த மலருக்கும் வித்தியாசம் உண்டு. பற்று, பதட்டத்தில் ஆழ்ந்து புலம்புகிறது. அன்பு, பொறுமையாகச் சிந்தித்துப் புரிந்துகொள்கிறது. அன்பு கொண்டவன், எவரையும் உடைமைப் பொருளாகக் கருதுவது இல்லை. அவன் தனது உடைமைகளின் மீது கூட உரிமை கொண்டாடுவது இல்லை. புகையிரதத்தில் பயணிக்கிறோம்.


ஆறு மணி நேர பயணத்தில் இது எனது இடம்; அது உனது இடம் என்று சண்டை ஓய்வதற்குள் சேருமிடம் வந்துவிடுகிறது. வாழ்க்கையிலும் இப்படித்தான்! வாழும் சிறிது காலத்துக்குள், இது எனது நிலம், அது உனது நிலம் என்று சண்டையிட்டு என்னுடையவர் உன்னுடையவர் என்று பிரிவினை பேசி, துன்பத்தை வளர்த்துக் கொள்கிறோம்.


பற்று கலவாத உண்மையான அன்பு தெய்வீகம் ஆனது. ஆற்றல் மிக்கது அது. உலகையே அரவணைத்துக் கொள்ளும். உலகப் பற்றில் திழைத்திருப்பவனுக்கு கடவுளைப் பற்றிக்கொள்ள நேரமில்லை. கடவுளுக்கென ஒதுக்க அவன் உள்ளத்தில் இடமும் இல்லை! பற்றற்றவன், கடவுளை பற்றிக் கொண்டு கடவுளை எங்கும் காணும் அறிவை அடைந்து அந்தப் பற்றையும் நீக்கி விடுகிறான்.


ஆனந்தத்தில் நிலைத்திருந்து. எங்கும் அன்பை பாய்ச்சுகிறான். அனைத்திலும் பரம்பொருளைக் காண்பதே ஆன்மீகத்தின் அறுதித் தத்துவம். பற்றை நாம் நீக்கத்தான் வேண்டும். இல்லையெனில் பற்றுக்கு உரிய பொருளையோ மனிதரையோ காலம் நம்மிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்துச் சென்றுவிடும். பற்றை துறப்பதே உண்மையான துறவு உலகை வெறுத்து ஒருவன் துறவியாக முடியாது.


அனைத்திலும் தன்னையே கண்டு அந்த ஞானத்தால் பற்றறுத்தவனே உண்மையான துறவி!

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top