.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 28 December 2013

ஜாதி சான்றிதழ் வாங்குவது எப்படி...?



சாதிகள் இல்லையடி பாப்பா என்போம், ஆனால்... சாதி சான்றிதழ் கேட்போம்....
வருமானச் சான்றிதழ் போலவே சாதிச் சான்றிதழும் பெரும்பாலும் மாணவர்களுக்கும், அரசுப் பணியில் சேர்பவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் தேவைப்படுகிறது.


இச் சான்றிதழும் ஒரு தற்காலிகச் சான்றிதழே ஆகும். எவரும் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது என்ற போதிலும், வகுப்பு என்பது மாற வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஒருவர் பிற்பட்ட வகுப்பில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர், தனது மதத்தை மாற்றிக்கொண்டால், வேறு வகுப்பிற்குச் சென்றுவிடுவார்.


இச்சான்றிதழ் தமிழில் வகுப்புச் சான்றிதழ் என்றுதான் அழைக்கப்படவேண்டும். ஆனால், சாதிச் சான்றிதழ் என்றே அழைக்கப்படுகிறது. எனவே, சாதியை மாற்றமுடியாவிட்டாலும், வகுப்பு என்பது நிலையானது அல்ல. எனவே, சாதிச் சான்றிதழும் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல.


இருப்பினும் மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல வருடங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். எனினும், மாணவர்களின் பெற்றோர் இடையில் தங்களது மதத்தை மாற்றிக்கொண்டால், அதை முறைப்படி தெரிவித்து, தங்களது சாதிச் சான்றிதழையும் மாற்றிக்கொள்ளவேண்டும்.


கல்விக் காரணங்களைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக இச் சான்றிதழ் வேண்டுமென்றால், உதாரணமாக இரண்டு பெண் குழந்தைகள் நலத் திட்டத்திற்கு இச்சான்றிதழ் வேண்டுமென்றால், அதற்கு வழங்கப்படும் சான்றிதழ் ஒரு முறை மட்டும் குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டும் பயன்படுத்தும்படியே வழங்கப்படும்.


வழக்கம் போல், இச் சான்றிதழும் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளும் ஒரு சான்றிதழே ஆகும். இச் சான்றிதழுக்கான விண்ணப்பம் இந்த முகவரியில் கிடைக்கும்.

http://www.tn.gov.in/appforms/cert-community.pdf


 (இந்த விண்ணப்பத்தில், எண் 5, 6, மற்றும் 7 ஆகியவை குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று உள்ளிட்டவைகளைக் கேட்கின்றன. இருப்பினும் இவை எதுவும் இல்லாத பொழுது, இவற்றைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.)


இச் சான்றிதழ் தேவைப்படுவோர், தங்களது குடும்ப அட்டையின் நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வேறு ஆவணங்கள் ஏதாவது இருப்பின் கூடுதலாக அளிக்கலாம்; ஆனால் கட்டாயமில்லை. பொதுவாக மனுவுடன் கூடுதல் ஆவணங்களை/ சான்றுகளை இணைப்பது எதற்கென்றால், வட்டாட்சியரின் பணிகளில் ஒரு எளிமையை கொண்டுவந்து, சான்றிதழை விரைவாகப் பெறுவது ஒன்றுதான் காரணம்.


சாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் பொழுது, குடும்ப அட்டை கூட இருந்தால் மட்டுமே அளிக்க வேண்டும்.


ஒருவருக்குக் குடும்ப அட்டையே இல்லை; எனவே அவருக்குச் சாதிச் சான்றிதழே வாங்க முடியாது என்பதெல்லாம் தவறு. மனுதாரர் தன்னிடம் வேறு சான்று/ஆவணங்கள் எவையும் இல்லையென்றால், மனுவை மட்டும் உரிய முறையில் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது.


இப்படி மனு அளிக்கும் பொழுது, சான்றிதழ் பெற இரண்டு அல்லது மூன்று நாள்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ளப்படும். எனினும் சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையற்ற கால தாமதத்தை வட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்த முடியாது.


ஏனென்றால், வட்டாட்சியர் அலுவலகம் தான் அடிப்படைச் சான்றுகளை அளிக்கும் ஒரு அலுவலகமாகும். அவர்களே பொது மக்களிடம் ஏதாவது சான்று கொடுத்தால் தான் பொது மக்கள் கேட்க்கும் சான்றினை வழங்க முடியும் என்று கேட்பது முறையல்ல. எந்த ஆவணமும் இணைக்கப்பட முடியாத பொழுது, பொது மக்கள் தங்களுக்குத் தேவையான சான்று பெற, வட்டாட்சியருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது ஒரு கூடுதல் தேவை.


அதாவது தங்களது கோரிக்கைக்கு வலுவூட்டும் காரணிகளை அளித்தல் உள்ளிட்ட சில கூடுதல் பணிகளைச் செய்யலாம். இதுவும் கட்டாயமல்ல. ஒரு வட்டாட்சியருக்கு, எவ்வகையிலும் விசாரித்து எந்த உண்மையையும் கொண்டுவரத் தேவையான அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆவணங்கள் இருந்தால் அளிக்கலாம்; இல்லாவிட்டால் வட்டாட்சியரே சரியான சான்று வழங்குவார்.

1 comments:

Admin said...

பயனுள்ள தகவல். நன்றி.

www.amarkkalam.net
பயனுள்ள தகவல்களின் தொகுப்பு.
ஒரு முறை வந்து பாருங்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top