.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 23 November 2013

நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு!

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?

அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்' என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்:

சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.


ப்ரீத்தி ஷா சொல்கிறார் ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன்.

உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top