ரஜினி. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திரையரங்கிற்கு இழுக்கும் மந்திரம். கோச்சடையான் படமும் முழுமையான ரஜினிப் படமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பார்த்துப் பார்த்துக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் கே.எஸ். ரவிகுமார். படத்தில் கோச்சடையான்தான் அப்பா ரஜினி. இடைக்காலத் தமிழகத்தில் தென்தமிழ்நாட்டின் பாண்டியப் பேரரசை ஆட்சி செய்த புகழ்பெற்ற தமிழ் மன்னரின் படைத்தளபதியாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் தளபதியாக இருக்கும் அப்பா ரஜினியை மையப்படுத்திக் கதை நகர்கிறது என்றால், இரண்டாவது பாதியில் ’ராணா’வாகிய மகன் ரஜினி, தனது சாகஸங்களால் படத்தைத் தனது தோளில் சுமக்கிறாராம். தளபதியாக இருக்கும் அப்பா ரஜினி, போர்க்கலை மட்டும் தெரிந்தவர் அல்ல. பரதக் கலையிலும் வல்லவர். ஷோபனாவுக்கும் - அப்பா ரஜினிக்கும் படத்தில் ஒரு பரதப்போட்டி இருக்கிறதாம். மகன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகாவும் சாகஸங்கள் செய்யும் ஆக்ஷன் கதாபாத்திரமாக, நாட்டின் அரசியல் வாரிசாக நடித்திருக்கிறாராம்.
ரஜினியும் ரஜினியும்
ராணா ரஜினியின் அறிமுகக் காட்சிகள் ரஜினி ரசிகர்களுக்குச் செமத்தியான வேட்டையாக இருக்கும் என்கிறார்கள். அப்பாவிடம் ஆலோசனை கேட்காமல், அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று ராணா செய்யும் சில அதிரடிகள் காரணமாக, எதிர்பாராமல் ராணா,எதிரிகளின் கைகளில் சிக்கிக்கொள்கிறார். அந்த நேரத்தில் கோச்சடையான் ரஜினி வந்து மகன் ரஜினியைக் காப்பாற்றும் காட்சிக்குப் பாராட்டுகள் குவியப்போவது உறுதி என்கிறார்கள். சீன மார்ஷியல் ஆர்ட் சண்டைப் படங்களில், நாயகனும் அவனது நண்பனும் இணைந்து, எதிரியைத் தந்திரமாகத் தாக்கும் ஃபார்முலா உலகப் புகழ் பெற்றது. இதைப் போலவே அப்பா - மகன் என இரு ரஜினிகளும் இணைந்து எதிரியைத் தாக்கும் காட்சி, ஜப்பான் மற்றும் சீன, ஐரோப்பிய ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் விருந்தாக இருக்குமாம்.
படத்தில் நாசர், ஜாக்கி ஷ்ராஃப், சரத்குமார், ஆதி, ருக்மிணி , ஷோபனா ஆகியோரின் கதாபாத்திரங்களும் பேசப்படுமாம். 126 நிமிடம் மட்டுமே ஓடும் இந்தப் படத்தின் திரைக்கதையில், ‘இண்டர்வல் முடிச்சு’ கிடையாது. முக்கியமாக இது 3டி அனிமேஷன் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தாத மேம்பட்ட அனிமேஷன் படம் என்பதால், லைவ் ஆக்ஷன் படம்போல உணரலாம் என்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய விஷயமாக இருக்கப்போவது ஆக்ஷன் காட்சிகள் மட்டுமல்ல, கதாபாத்திரங்கள் அணிந்துவரும் ஆடைகளும்தான். தேசிய விருதுபெற்ற நீத்தா லுல்லாதான் கோச்சடையான் படத்தின் காஸ்ட்யூமர். இவர் தமிழ்நாட்டில் வந்து ஆய்வு செய்து, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான உடைகளை வரைந்து, நூற்றுக்கணக்கான டிசைன்களைக் கொடுக்க, அதிலிருந்து சௌந்தர்யா தேர்வு செய்திருக்கிறார்.
தெலுங்கில் விக்ரமசிம்ஹா
கோச்சடையான் படத்தில் வரும் தமிழ் மன்னரைப் போலவே ஆந்திராவில் வாழ்ந்த 'விக்ரமசிம்ஹா' என்ற மன்னரின் பெயரைக் கோச்சடையான் தெலுங்கு பதிப்புக்கு வைத்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு பதிப்புகளுக்கு மட்டுமே ரஜினி குரல்கொடுத்திருக்கிறார். மலையாளத்தில் டப் செய்யப்படாமல் நேரடி தமிழ்ப் படமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்காகவும், கடைசிக் கட்ட 3டி வேலைகளைக் கவனிப்பதற்காகவும் தற்போது சீனாவில் தங்கியிருக்கிறார் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ஆர். அஸ்வின்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் ஒன்று போர்க்களத்தைப் பற்றிய தீம் இசை கலந்த பாடல். “எதிரிகள் இல்லை” என்று தொடங்கும் இந்தப் பாடலை வைரமுத்து எழுத, ரஜினி பாடினார். தற்போது இதே பாடலை இந்திப் பதிப்புக்காக இஸ்ரத் கமீல் எழுத, அதை ரஜினியுடன் இணைந்து ரஹ்மான் பாடியிருக்கிறார். இசை மிக பிரமாண்டமான ‘லார்ஜ் ஸ்கேல் கம்போஸிங்’ முறையில் உருவாகியிருக்கிறது.
0 comments: