நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் தமது வாரிசு களை சினிமாவில் களமிறக்கும் காலமிது. நடிகர் ‘தலைவாசல்’ விஜய்யும் அப்படி நினைத்திருந்தால் இன்று நாம் ஒரு உலக சாதனையாளரை இழந்திருப்போம். யெஸ்... தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா, உலகமே கவனிக்கும் இடத்தில் இருக்கும் நீச்சல் சாம்பியன்! செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிற ஜெயவீணாவுக்கு ஒவ்வொரு விடியலிலும் வெற்றி! 2012 டிசம்பரில் இஸ்தான்புல்லில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக பங்குகொண்ட இளவயது சாதனையாளர் என்பது இவரது லேட்டஸ்ட் அடையாளம்! ‘‘எங்கண்ணா ஜெயவந்த், ஸ்விம்மிங் ப்ராக்டீஸ் பண்ணப் போகும்போது நானும் வேடிக்கைப் பார்க்கப் போவேனாம்.
எனக்கு ரெண்டரை வயசிருக்கும்... ‘அண்ணாகூட நானும் ஸ்விம் பண்ணணும், இறக்கி விடுங்க’ன்னு அடம் பிடிச்சேனாம். அண்ணா ப்ராக்டீஸ் பண்ணினது பெரிய நீச்சல் குளம். 6 அடி, 9 அடி ஆழமிருக்கும். அதுக்குப் பக்கத்துல குழந்தைங்களுக்கான சின்ன நீச்சல் குளம் ஒண்ணு இருக்கும். அதுல என்னை இறக்கி விட்டிருக்காங்க. நான் ‘முடியாது, அண்ணன் இருக்கிற நீச்சல் குளம்தான் வேணும்’னு அடம் பிடிச்சேனாம். எங்களைக் கூட்டிட்டுப் போன எங்க தாத்தா, அவுட்டோர் ஷூட்டிங்ல இருந்த எங்கப்பாக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லியிருக்கார்.
‘ரொம்ப அடம் பண்றான்னா, பெரிய ஸ்விம்மிங் பூல்லயே இறக்கி விட்டுட்டு பக்கத்துலயே நின்னுப் பார்த்துக்கோங்க... ஒருவாட்டி தண்ணி குடிச்சான்னா, அந்த பயத்துல மறுபடி அந்தப் பக்கமே போக மாட்டா’ன்னு சொல்லிருக்கார் அப்பா. ‘தண்ணி குடிப்பேன்’னு நினைச்சு என்னை இறக்கி விட்டா, நானோ, ஸ்விம் பண்ணி மேலே வந்தேனாம். அந்த நிமிஷத்துலேருந்தே ஆரம்பிச்சது என்னோட நீச்சல் பயணம்...’’ - சாகசக் கதையை சாதாரணமாகச் சொல்கிற ஜெயவீணாவுக்கு முதல் போட்டியே வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது!
‘‘2008ல சென்னையில நடந்த மாநில போட்டியில ஜெயிச்சதுதான் முதல் வெற்றி. மெடல் வாங்கினப்ப, அது என்ன, ஏதுன்னுகூட எனக்குப் புரியலை... அதுக்கப்புறம் நேஷனல்ஸுக்கு செலக்ட் ஆகி மெடல் வாங்கினேன். 2011ல ராஞ்சியில நடந்த நேஷனல்ஸ்ல 5 மெடல் வாங்கினேன். நேஷனல்ஸ்ல அவ்ளோ சின்ன வயசுல (12 வயது) மெடல் வாங்கினதுக்காக ‘யங்கெஸ்ட் ஸ்விம்மர்’ என்ற பெருமையும் பாராட்டும் எனக்குக் கிடைச்சது’’ என்கிற ஜெயவீணா, படிப்பிலும் சுட்டி. விசில் அடித்தபடியே பாடல் பாடுவதிலும் நிபுணி.
‘‘ஸ்விம்மிங் ப்ராக்டீஸுக்கு போக மிச்சமாகிற ஒவ்வொரு நிமிஷத்தையும் படிக்க உபயோகப்படுத்திக்குவேன். ஸ்போர்ட்ஸ் மெடிசின் படிக்கணுங்கிறதுதான் என்னோட லட்சியம்’’ என்கிறவர், 2016ல் நடக்கவுள்ள ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கங்களையும் பெருமையையும் தட்டிவர இப்போதிலிருந்தே பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறார்!
0 comments: