.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 26 November 2013

தமிழர்களால் கைவிடப்பட்டவை!



அம்மி :

குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.

அண்டா :

அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

அடுக்குப்பானை:

ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.

ஆட்டுக்கல் :

வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.

அங்குஸ்தான்:

தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.

ஒட்டியாணம்:

பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.

எந்திரம் :

(அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.

உரல் :

வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.

உறி:

(வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.

குஞ்சம் - குஞ்சலம்:

(பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.

கோகர்ணம்:

(ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.

கொடியடுப்பு:

ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.

சுளகு :

வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.

தாவணி:

(இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.

தொடி:

பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.

நடைவண்டி:

(குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.

பஞ்சமுக வாத்தியம்:

கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.

பாக்குவெட்டி:

பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.

பிரிமணை :

(பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.

புல்லாக்கு:

மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.

முறம்:

(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.

மரப்பாச்சி:


பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.

லோட்டா:

நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.

அரிக்கன் விளக்கு :

காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.

அடிகுழாய்:

கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

கூஜா :


(குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.

மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். 

அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top