சுடு தண்ணீரில் குளித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் தான். அதிலும் உடலில் தசை வலி இருக்கும் போது சுடு தண்ணீரில் குளித்தால், அந்த வலி பறந்தே போகும். அதிலும் சுடு தண்ணீர் வரும் ஷவரில் குளித்தால், அருமையாக இருக்கும். ஆனால் அந்த சுடு தண்ணீரை தலைக்கு ஊற்றினால், கூந்தல் தான் அதிகம் பாதிக்கப்படும்.
ஆகவே குளிர்காலத்தில் தண்ணீர் அதிக குளிர்ச்சியுடன் இருக்கிறது என்பதற்காக, சுடு தண்ணீரில் தான் அதிகம் குளிப்போம். ஆனால் உண்மையில் அவ்வாறு குளித்தால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் எதற்கு சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது என்று பல காரணங்களை நிபுணர்கள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
சூடான நீரில் கூந்தலை எதற்கு அலசக் கூடாது?
சூடான நீரில் கூந்தலை அலசினால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும். ஏனெனில் அப்போது முடித்துளைகள் விரிவடைவதால், வேர்கள் வலுவிழந்து, கூந்தல் காய்ந்தப் பின்னர் பார்த்தால், கூந்தல் கையோடு கொத்தாக வரும்.
அதுமட்டுமின்றி சுடு தண்ணீர் கூந்தலை எரித்துவிடும். அதாவது கூந்தலானது கெராட்டீன் என்னும் புரோட்டீனால் உருவானது. ஆகவே சூடான நீரில் குளிக்கும் போது, இந்த புரோட்டீனானது அதிக அளவில் வெப்பமடைகிறது. பின் அவை எளிதில் கரைந்து விடும். ஆகவே வெப்பம் அதிகமாக உள்ள நீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
சூடான தண்ணீரில் குளிக்கும் போது ஷாம்பு போட்டு குளிப்பது மிகவும் கெட்ட விளைவை அளிக்கும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். ஏனெனில் சூடான நீருக்கும், வெதுவெதுப்பான நீருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதிலும் பொதுவாக ஷாம்பு போட்டு குளித்தாலே, கூந்தல் வலுவிழந்து இருக்கும். அப்போது சூடான நீரில் அலசினால், கூந்தலை நன்கு கொத்தாக எடுக்கலாம்.
குளித்தப் பின்பு கூந்தலுக்கு கண்டிஷனர் போடுவோம். அப்போது நிச்சயம் குளிர்ந்த நீரில் தான் கூந்தலை அலச வேண்டும். இல்லை சூடான நீரில் அலசினால், கூந்தலுக்கு மென்மையைத் தருவதற்கு போடும் கண்டிஷனர் முற்றிலும் போய்விடும்.
ஆகவே சூடான நீர் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், கூந்தலுக்கு பெரும் பாதிப்பைத் தரும். எனவே தலைக்கு குளிக்க வேண்டுமெனில் அப்போது உடலுக்கு சூடான நீரையும், தலைக்கு குளிர்ந்த நீரையும் பயன்படுத்துவது நல்லது.
0 comments: