.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 5 January 2014

'அது' நல்லது... அந்த 'அது' எதுங்க...?



கொஞ்சம் இருப்பா.... நீங்க நினைத்து வந்த அந்த 'அது' இது இல்லீங்கோ.....அந்த 'அது' மருத்துவம் சம்பந்தப்பட்டது...!

மருத்துவக் குறிப்பு சம்பந்தமாக நாம் பார்க்க இருப்பது அந்த 4 நல்ல விசயங்களை பற்றி தான்.

1. இசை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?


குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் தாலாட்டு பாடல்களாலும், இனிமையான இசையாலும் பலன் பெறுகின்றன என்கிறது 'பீடியாட்ரிக்ஸ்(pediatrics)' இதழ்.

அமெரிக்காவின் 11 மருத்துவமனைகளில் 272 குறைப்பிரசவ குழந்தைகளிடம் ஆராய்ச்சி நடந்தது. வழக்கமான சிகிச்சைகளோடு தாலாட்டு பாடல், பெற்றோரே பாடிய பாட்டு, இதயத்துடிப்பு போன்ற ஓசை அடங்கிய இசை என பலவற்றை மாற்றி மாற்றி குழந்தைகளைக் கேட்க வைத்தார்கள். இசை கேட்ட குழந்தையின் இதயத் துடிப்பு முதல் உடல் வளர்ச்சி வரை எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருந்ததாம்!

2. புதுசு நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?


ரத்த வங்கிகள், தாங்கள் தானம் பெறும் ரத்தத்தை அதிகபட்சமாக 6 வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்துகின்றன. ஆனால், "இவ்வளவு காலம் வைத்திருப்பதே அதிகம். மூன்று வாரங்களுக்குள் அதை இன்னொருவர் உடலுக்குள் செலுத்திவிட வேண்டும்" என்கிறது 'அனெஸ்தீசியா அண்டு அனால்ஜெஸியா (anaesthesia and analgesia)' இதழ்.

மூன்று வாரங்களைத் தாண்டியதுமே ரத்த சிவப்பணுக்கள், மிகச்சிறிய ரத்த நாளங்களின் திசுக்களுக்குள் ஊடுருவி ஆக்சிஜனைக் கொடுக்கும் திறனை இழந்து விடுகின்றனவாம். இதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

3. ஜூஸ் நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?


'உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்' என்கிறது 'ஹைப்பர்டென்ஷன் (hypertension)' என்ற மருத்துவ இதழ். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு 250 மி.லி பீட்ரூட் ஜூஸ் கொடுத்து பிரிட்டனில் ஆராய்ச்சி நடத்தினர். 24 மணி நேரத்தில் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்தது.

பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக உள்ளது. வேர்கள் மூலம் மண்ணிலிருந்து இது நைட்ரேட்டைப் பெறுகிறது. இந்த நைட்ரேட் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. இது ரத்தக்குழாய்களை விரியச் செய்து, ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. எனவே ரத்த அழுத்தம் குறைகிறது. கோஸ், பீன்ஸ், கீரைகள் போன்ற காய்கறிகளும் உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகின்றன.

4. குடை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?


மழையைப் போலவே வெயிலுக்கும் குடை பிடிப்பது நல்லதா? 'ஜாமா டெர்மடாலஜி (jama dermatology)' அமைப்பு, குடைகளை ஆராய்ச்சி செய்துவிட்டு "ஆமாம்" என்றிருக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களை பெரும்பாலான குடைகள் வடிகட்டி, பாதுகாப்பு தருகின்றனவாம். டார்க் நிறத்தில் இருக்கும் குடைகளே இதை சிறப்பாகச் செய்கின்றன; குறிப்பாக கறுப்புக் குடை 90 சதவீத கதிர்வீச்சைத் தடுக்கிறது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top