இது தவறு? இது தீமை? என்று சொல்லும் அரசுகள் அந்த தவறையும் அந்த தீமைகளையும் மக்களுக்கு உருவாக்கித் தருபவர்கள் மீது மட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் அதற்கு காரணமே நாங்கள் தான் என்ற உண்மையை மூடி மறைத்து புதிய,புதிய சட்டங்கள் மூலமும், புதிய புதிய தண்டனைகள் மூலமும் ஆளும் அரசுகளை தங்களை நம்பியிருக்கும் நாட்டு மக்களை அடிமைகள் போல நடத்தி வருகிறது.
"ஜனநாயக ஆட்சி" உள்ள நாட்டில் இருக்கிறோம்,நாங்கள் சுதந்திர நாட்டில் வாழ்ந்து வருகிறோம் என்று கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொல்லிக்கொண்டு நாமும் அடிமை வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம். இதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.
உதாரணம் 1. புகைப்பிடித்தல் ஒரு மனிதனின் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்று அறிவியலும்,அரசாங்கமும் சொல்கிறது.புகைப்பிடிப்பவர்களை விட அந்த புகை கலந்து வரும் காற்றை சுவாசிப்பவர்களுக்கு அது அதிக பாதிப்பை உண்டாக்குகிறது என்று ஆளும் அரசு பொது இடங்களில் புகைப் பிடிக்கும் தடை சட்டத்தைக் கொண்டு வந்து பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் என்று மக்களின் பொது இட சுதந்திரத்தை தடை செய்தது.
அதே நேரம் அந்த புகைபிடிப்புக்கு காரணமான அதை தயாரித்து விற்பனை செய்பவர்களை அரசு என்ன செய்தது? அந்த தயாரிப்புகளை தடை செய்ததா? ஒன்றுமே செய்யவில்லை, முதலில் தயாரித்து விற்பதை தடை செய்யாமல் அதை வாங்கி பயன்படுத்துபவர்களை துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
"புகைப்பிடிப்பது கேடு" என்று வரும் போது மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ள அரசு என்ன செய்திருக்க வேண்டும்? அந்த தயாரிப்பை அல்லவா நிறுத்தி இருக்க வேண்டும்.
ஆனால் அப்படி செய்யவில்லையே அரசு.மாறாக நாங்கள் தயாரித்து விற்போம் அதை நீங்கள் எல்லா இடங்களிலும் பயன்படுத்தினால் அபராதம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தில் தலையிடும் இந்த செயல்தான் ஜனநாயக ஆட்சி முறையா?
உதாரணம்: 2 மது குடித்தல் தீமை என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால்,மது குடித்தல் "நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு" என்ற வாசகத்துடன் அரசே அந்த மதுவை மக்களுக்கு விற்பனை செய்யும் கேவலமான செயலை என்னவென்று சொல்வது?மக்களின் நலம் பேணும் அரசு என்று வாய் கூசாமல் பொய்களை பேசி மக்களை ஒரு போதைக்குள் வைத்துக் கொண்டு அவர்களுடைய உயிரை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் இந்த பாவச்செயலுக்கு என்ன பரிகாரம் தேடப் போகிறது ஆளும் அரசுகள்.
உதாரணம்: 3 பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் அது நம்மை தாங்கி நிற்கும் பூமித்தாய்க்கு தீமை, அதனால் இந்த பூமியில் வாழும் நமக்கும் தீமை என்று வாய் கிழிய வக்கனையாக பேசும் அரசு அந்த பிளாஷ்டிக் பொருட்களில் தயாரிப்பை நிறுத்துவதை விட்டு விட்டு அதை வாங்கி பயன்படுத்தும் மக்களை மட்டும் தண்டிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
உதாரணம்: 4 "ஹெல்மெட்" என்று சொல்லப்படும் தலைக்கவசம் போடுவது வாகன ஓட்டிகளுக்கு நல்லது தான் என்று சொல்கிறது இந்த அரசு, நாளுக்கு நாள் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது என்றும் அதை தவிர்க்க தலைக்கவசம் அணிந்து கொள்வதை கட்டாயமாக்கி மக்களின் சுதந்திரத்தை பிடுங்கிக் கொள்ளும் இந்த அரசு வாகன விபத்துக்கு மிக மிக முக்கிய காரணம் அந்த வாகனங்கள் செல்லும் சரி இல்லாத சாலைகள் தான் என்ற தனது தவறை மட்டும் என் ஒத்துக் கொள்ள மறுக்கிறது?எத்தனை விபத்துகள் சாலைகள் சரி இல்லாத காரணங்களினால் நடக்கிறது?இந்த தவறை மூடி மறைத்து விட்டு தலைக்கவசம் போடாமால் போவதால் தான் அதிக விபத்துகள் நடக்கிறது என்று சொல்வது எதில் சேர்த்தி?
உதாரணம் : 5 பலச்சாறுகளே கலக்காத வெளிநாட்டு குளிர்பானங்கள் நச்சுப் பொருட்கள் கலந்தது என்று அறிவியல் ஆய்வுகள் சொல்கிறது, அதை குடித்தால் மனித உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்று அறிவியல் அதை நிரூபித்தும் விட்டது,ஆனால் இதுவரை ஆளும் அரசுகள் அந்த வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்திருக்கிறதா? இல்லையே? மாறாக அதை காற்று புக முடியாத இடத்தில் கூட விற்பனை செய்ய வைத்து வேடிக்கை பார்த்து விட்டு அந்த நிறுவனங்கள் தரும் வரிப்பணத்தில் ஆட்சி நடத்துகிறது.
இந்த கேவலத்தையும்,காட்டு மிராண்டித்தனத்தையும் எங்கு போய் சொல்வது? இப்படி பல தவறுகளை உதாரணங்களாக சொல்லிக் கொண்டே போகலாம்.
"சுதந்திரமான நாட்டில் வாழ்கிறோம்" என்று நாம் சந்தோசப்பட்டுக் கொண்டாலும்,அல்லது "சுதந்திரமாக வாழ்கிறோம்" என்று நாம் நினைத்துக் கொண்டாலும் உண்மையில் ஒரு நிமிடம் நாம் சிந்தித்துப் பார்த்தோமானால் ஆளும் அரசுகளால் நாம் "அடிமைப்படுத்தப்பட்டு வருகிறோம்" என்ற அதிர்ச்சியான உண்மைகள் புலப்படும்.
மக்கள் தவறு செய்தால் அரசாங்கம் சட்டங்களைப் போட்டு தண்டிக்கிறது, ஆனால் அரசாங்கமே தவறு செய்தால்..?
0 comments: