.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 14 December 2013

தூக்கத்தை ஆராய்வது என்றால் என்ன?




தூக்கத்தை ஏன் ஆராய வேண்டும். உறக்கம் அற்புதமான விஷயம். அது உடலின் சோர்வு மட்டுமல்ல, உள்மனதின் விழிப்பு. உள் மனத்தின் ஒரு வித விழிப்பு நிலைதான் கனவுகளாக வருகின்றன. அந்த கனவு அநேகமாக விழித்த பிறகு மறந்து போகும், அல்லது வேறு ஒரு கற்பனையாக போய்விடும். அந்த விழிப்பும், உறக்கமற்ற ஒரு மெளன நிலையில் கனவு ஏதும் கண்டிருந்தால் யோசித்து பார்ப்பது நல்லது. அங்கே கண்ட கனவை நினைவு கூரல் எளிது. அங்கே நினைவுபடுத்திக் கொள்ள பல நேரம் அந்த கனவுக்கு அர்த்தம் புரிந்துவிடும். நமது மனவிகாரம் ஆசை, குறிப்பாய் பறக்கிற கனவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன்னேறும் ஆசை அதிகமிருக்கின்றது என்று பொருள். தற்போது செய்ய அரியதாய் இருப்பதை செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது என்று பொருள்.


உடனே ‘இப்படி கனவு வருகிறதே என்ன பலன்’ என்று ஆராய வேண்டாம். வேறு யாரையும் கேட்க வேண்டாம். அந்த பாதி விழிப்பு நிலையிலேயே நம் மனசு என்ன சொல்கின்றது என்று நமக்கு நிச்சயம் தெரியும். உங்கள் உள்மனதை உங்களை விட தெரிந்தவர் வேறு யாரும் இருக்கமுடியாது. அப்போது கனவைப் பற்றி தெரியவிட்டாலும் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள அதுதான் மிகச்சரியான நேரம். விழித்த பிறகு என்னவோ கனவு வந்ததே, என்ன அது என்று தேடல் இருக்கும். சில சமயம் சுத்தமாய் துடைத்து விட்டதைப் போல் மறந்து போகும்.


சரி ஏன் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும், உங்களை அறிய உங்கள் கனவுகள் உதவி செய்யும், உங்களை அறிவதைவிட மிகப்பெரிய வேலை இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. நாகரீகம் கருதியோ, நற்பயன் கருதியோ வெளியுலகில் நீங்கள் போட்டுக் கொண்டு இருக்கும் வேஷம் தேவையில்லாதது. உண்மையான உங்களை உங்கள் கனவுகள் அடையாளாம் காட்டும். தன்னை தெரிந்தவனுக்குப் பிறரை அறிதல் எளிது. பிறரை அறிய தன்னை அறிவதே முதல்படி. தன்னையும் பிறரையும் அறியவேண்டிய அவசியம் உலகில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு நிச்சயம் உண்டு.


எனவேதான் நன்கு விழித்த நிலைக்கு முன்பு புரண்டு மறுபடியும் தூங்கும் நேரத்தை உன்னிப்பாய்க் கவனிக்கச் சொல்கிறேன். அந்த பாதி விழிப்பு நேரம் மிக முக்கியம் என்கிறேன். இதைப் படித்த இரவே தூங்கும் முன்பு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாதி விழித்த நிலையில் மனதை கவனிக்க வேண்டும் என்று ஆவல் கொள்ளுங்கள். அவ்வப்போது மறந்துபோனாலும், இடைவிடாது முயற்சி செய்யுங்கள். பிறகு, தினசரி விழிப்பு நிலையில் மனதைக் கவனிப்பது பழக்கமாகிவிடும்.


சரி. கனவே வரவில்லை எதைக் கவனிப்பது ஆழ்ந்த உறக்கம், சலனமில்லாத தூக்கம் இதில் கவனிக்க என்ன இருக்கிறது ஏதுமில்லை. அப்போது விழித்துக் கொள்வதைப் பற்றி யோசிப்போம். விழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம். விழித்து என்ன செய்ய வேண்டும். இன்றைய வேலைகள் என்னென்ன எதுஎது நிச்சயம் செய்தாக வேண்டும் என்று யோசிப்போம்.


கண்மூடி உடம்பு அயர்ந்து தூங்கும், தூக்கத்தின் தொடர்ச்சி உடம்பை விட்டு சற்றும் நீங்காது இருக்கும். ஆனால் மனசு மட்டும் விழித்துக் கொள்ளும். புற சத்தங்கள் அதிகமாகத் தாக்காது காதில் விழுந்தாலும் அந்த சத்தத்தை மனசு ஏற்காது. தூங்கும் நிலையே ஒருவகை தியான நிலை. அல்லது இப்படி சொல்லலாம். தியானம் செய்யும் போது இப்படி ஒரு முக்கால் தூக்க நிலை ஏற்படும். புற சத்தங்களால் பாதிக்கப்படாத ஒரு மெளனம் இருக்கும். அந்த மெளன நேரத்தில் நமது எண்ணங்களில் சார்புத் தன்மை இருக்காது. வேறுவிதமாக சொல்வது என்றால் விருப்பு-வெறுப்பு இருக்காது. தியானம் பழகாமல் இந்த பாதி விழிப்பு நிலையில் மனசை யோசிக்க பயன்படுத்தினால் போதும். நம்முடைய விஷயங்கள் பற்றி, நமது கோபதாபங்கள் பற்றி நமது ஆசைகள் அபிலாஷை பற்றி நம்மால் மிகத் தெளிவாக யோசிக்க முடியும். அதிலுள்ள நியாய அநியாய நிலையைப் பற்றி அல்லது அதை முடிக்கும் காலம் பற்றி, செயல்பட வேண்டிய வேகம் பற்றி கட்டுப்படுகின்ற உறுதி பற்றி தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரியும்.


இன்னொரு விஷயம் கவனமாக இருக்க வேண்டும். இப்படி சார்பு இல்லாமல் யோசிக்கும் போதே சில சமயம் மனசு முழு விழிப்பு கொள்ளும். உடம்போ உறக்கத்திலிருந்து மீளாது இருக்கும். சோம்பல் உடம்பை அழுத்திக் கொண்டு இருக்கும். அந்த நேரம் மனசு கற்பனைக்குப் போக வாய்ப்பு உண்டு. அதாவது மனசு முழுவதும் விழித்துக் கொண்டு கதை பண்ண ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top