.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 14 December 2013

டிசம்பர் 15 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்!




தேதி : 15 Dec 2013

திரையரங்கம் : WOODLANDS

11:00 am : A Long And Happy Life

ரஷ்யாவின் சிறிய கிராமம் ஒன்றில் வசிப்பவன் சாஷ்சா. அவனுக்கு கொஞ்சம் நிலம்.. கொஞ்ச ஒரு காதலி. இப்படி மிக எளிமையாகக் கழிகிற அவன் வாழ்க்கையில் திடீரென புயல். அரசாங்கம் அவன் நிலத்தைப் பறித்துக் கொள்கிறது. சாஷ்சாவுக்கு விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது. வேறெங்காவது போ.. கூலி வேலை செய் என்று விரட்டுகிறது அரசு, சாஷ்சா தன் நிலத்தை மீட்பதென முடிவெடுக்கிறான். ஒரு அரசாங்கத்தை எதிர்த்து ஒற்றை மனிதனின் போராட்டம். ரஷ்ய சினிமாவில் அன்று புடவ்கின், ஐசன்ஸ்டீன் காலத்தில் கம்யூனிச ஆதரவு பிரச்சாரம். இன்று அதே சினிமாவில் கம்யூனிச எதிர்ப்பு.

2:00 am : Puppy Love

மனதின் விசித்திரம்.. மாறும் அதன் நிறம், மணம், குணம். இருக்கும் செல்போனை தலையைச் சுற்றி தூக்கி எறிந்துவிட்டு இன்னொன்று வாங்கவே ஏங்கும். டயானாவும் அப்படித்தான். அவள் தூக்கி எறிந்தது செல்போனை அல்ல. இது வரை வாழ்ந்த வாழ்வை. அப்படி அவளை மாற்றியவள் ஜூலியா. ஜூலியா அடல்ட் விசயங்களில் அத்துபடி. இத்தனை காலம் உத்தமபுத்திரியான டயானா இப்போது ஜூலியாவால் பாதை மாறுகிறாள். அழகான ஆண்கள்.. ரசனையான இரவுகள். இயக்கம்: டெல்பீன் லேஹெரிசி.

4:30 pm : A Touch of Sin

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்ற படம். இயக்கம்: ஜியா சான்கே. வாழ்வில் விதி விளையாடினால் சரி.. சதி விளையாடினால்?. துரோகம் கழுத்தை நெரித்தால்.. அடுத்த நொடி திமிறி எழுந்தால்தான் வாழ்வு. இது நான்கு பேரின் திமிறல்கள். ஒரு நாடோடி, ஒரு சுரங்கத் தொழிலாளி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருத்தி, அடிக்கடி இடமாற்றப்படும் அலுவலக ஊழியன். நால்வரும் சமூகத்தின் கடைக்கோடி மக்கள். இவர்கள் கழுத்தை நெரிப்பதோ அதிகாரத்தின் கைகள். சுற்றும் வரை பூமி.. போராடும் வரை மனிதன்.

7:00pm : Young & Beautiful

Francois Ozon என்கிற பிரெஞ்சு இயக்குனரின் படம். இசபெல் என்கிற பெண்ணுக்கு கட்டுக்கடங்காத பாலியல் வேட்கை. அதற்காகவே வேசி ஆகிறாள். இது வீட்டுக்குத் தெரியாது. ஒரு நாள் பலான சமயத்தில் வாடிக்கையாளனாக வந்த ஜார்ஜ் இறந்து விட.. இசபெல் அதிர்ச்சி அடைந்து வீட்டுக்கு ஓடி வந்து விடுகிறாள். தடயங்களை வைத்து போலிஸ் அவளைத் தேடுகிறது. போலிஸ் அவளைப் பிடித்ததா? அவள் விஷயம் வீட்டுக்கு தெரிந்ததா?.

******************************

திரையரங்கம் : Woodlands Symphony

4:15 pm : RECLAMATION 

1979 விடுதலைக்குப் பிறகான ஈரானின் ஒரு மிலிட்டரி தலைவர் சஹாடி. அந்த சஹாடிக்கு ஒரு ஆசைக் கனவு. இரண்டாம் உலகப் போரின் சமயம். ரஷ்யாவுக்கு போன 16 டன் தங்கத்தை தாயகத்தின் கஜானாவுக்கு திரும்பக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். மிகப் பெரிய சாகசத்துக்கு கிளமபுகிறார் கேப்டன். ஈரானின் தங்கம் அந்த தங்கத்தை மீட்டதா?. ஈரானியப் படங்கள் என்றாலே பெண்ணியம்தானா? இப்படி 'பொன்'னியமும் உண்டு. இயக்கம்: அலி கஃபாரி.

6:45 pm : THE DOOR 

மாக்டா சாபோ என்கிற ஹங்கேரிய பெண் எழுத்தாளரின் வாழ்வின் ஒரு பகுதி படமாகியிருக்கின்றது. 1960ல் ஹங்கேரியை சேர்ந்த மிகப் பெரிய பங்களா ஒன்றின் கேர்டேக்கர், எம்ரன்ஸ் என்கிற மூதாட்டி. மாக்டாவும் அவள் கணவனும் அந்த வீட்டுக்கு வாடகைக்குக் குடி வருகின்றனர். வந்த நாள் முதல் மாக்டாவுக்கும் எம்ரன்ஸ்க்கும் ஒத்துப் போகவில்லை. இருவருக்கும் இருவேறு சித்தாந்தங்கள். ஒவ்வொரு விசயத்திலும் இருவருக்கும் முட்டிக் கொள்கிறது. அந்த வீட்டில் எம்ரன்ஸ்சின் ஒரு அறை எப்போதும் பூட்டிக் கிடக்கிறது. அந்த அறையில் யூதர்களிடமிருந்து திருடிய விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாக மாக்டா சந்தேகப்படுகிறாள். அந்த அறையில் அப்படி என்னதான் இருந்தது?. மாக்டாவாக மார்டினா கெடக், எம்ரன்ஸ்சாக உலகப் புகழ் பெற்ற நடிகை ஹெலன் மிரண்.. இருவரும் நடிப்பில் மிரட்டி உள்ளனர்.

********************************

திரையரங்கம் : SWARNA SAKTHI ABIRAMI

11:00 am : Life Feels Good

It's a wonderful life, Wings of desire போலவே இதுவும் நம்பிக்கை டானிக் படம். சின்ன வயதில் நம்மைப் போல தான் மார்டியசும். ஒரு தவறான மருத்துவ சிகிச்சை அவன் தலைவிதியை மாற்றிவிடுகிறது. மார்டியசால் இன்று நடக்க முடியாது, பேச முடியாது. அவனை இந்த கதிக்கு ஆளாக்கிய மருத்துவமனைக்கோ அவன் மீது இரக்கம் இல்லை. டாக்டர்கள்.. நர்ஸ்கள்.. எவரிடமும் துளி கருணை இல்லை. அவனுக்கு ஆறுதல் அவன் அம்மாவும் குடும்பமும். கூடவே ஒரு ஜன்னலும். வீட்டு ஜன்னலுக்கு வெளியேதான் அவன் உலகம்.

அந்த உலகில் ஒரு புது வரவு. எதிர் வீட்டு அழகி. பார்க்கும் அத்தனை பேரையும் பைத்தியமடிக்கிற அழகு. ஆனால் அவளுக்கு மார்டியஸ் பைத்தியம் வருகிறது. அதுதான் மார்டியசின் சாமர்த்தியம். நம் போன்றவர்கள் தோற்ற போது மார்டியஸ் எப்படி ஜெயித்தான். 'உன்னால் ஜெயிக்க முடியாது.. ஜெயிக்க முடியும் என்று நீ நினைக்காத வரை' எனும் பாப் மார்லி வரிகளின் திரை வடிவம்.

2:00 pm : White Lie 

ரிச்சர்ட் நெம்பர் ஒன் எழுத்தாளன். அவனிடம் 8 வருடமாக வேலைபார்ப்பவள் சிட்னி. பூவோடு சேர்ந்த நாறும் மணக்குமே. அவளும் எதோ எழுதுவாள். தன் முதல் புத்தகத்தை எழுதி ரிச்சர்டிடம் காட்ட.. இதெல்லாம் ஒரு எழுத்தா என்று அவள் முகத்தில் தூக்கி எறிகிறான். உன் வேலையே வேண்டாம் என சிட்னி வெளியே வருகிறாள். கொஞ்ச நாளில் ரிச்சர்டின் அடுத்த புத்தகம் வந்து செமையாக போகிறது. புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது என வாங்கிப் பார்க்கும் சிட்னிக்கு அதிர்ச்சி. அது அவள் எழுதிய நாவல். ரிச்சார்ட் விட்டெறிந்த அவளுடைய எழுத்து. சிட்னியின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?.. ஆனால் சிட்னி ஒரு காரியம் செய்தாள்?. இமா கார்டியர் எனும் பிரெஞ்சு பெண் இயக்குனரின் முதல் படம்.

4:30 pm : THE Wild Ones

நம் பெற்றோரை விட நம் மீது அன்பும் அக்கறையும் யாருக்கு உண்டு?. ஆனால் சில சமயம் நாம் அதிகம் வெறுப்பது நம் பெற்றோரைத்தான். பெற்றோருக்கு தம் குழந்தைகள் என்றும் குழந்தைகள்தான். வளர்ந்த பின்னும் அவர்களை குழந்தைகளாகவே பார்ப்பார்கள். அலெக்ஸ், கேபி, ஓஜி மூவரும் நண்பர்கள், இளைஞர்கள். எப்போதும் குடி, பெண்கள், ஊர்சுற்றித் திரிவது. பொதுவாக எல்லா இளைஞர்களும் செய்யும் காரியம்தான். ஆனால் மூவரின் பெற்றோரும் குமுறுவது.. 'நம் குழந்தை இப்படி செய்யலாமா?'. பெற்றோர்-பிள்ளை உறவின் உளவியல் சிக்கலை அலசும் ஸ்பெயின் நாட்டுப் படம்.

7:00 pm : The Amazing Catfish

கிளாடியா ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதி. ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலாக செல்பவள். பல நோயாளிகளைப் பார்ப்பவள். அன்று அவள் சந்தித்தது மார்த்தாவை. மார்த்தா மரணத்துக்கு காத்திருக்கிற ஒரு எய்ட்ஸ் நோயாளி. கிளாடியாவின் நடப்பால் ஏறக்குறைய செத்துவிட்ட மார்த்தாவுக்குள் உயிர் துளிர்க்கிறது. சக மனிதனிடம் குறிப்பாக ஒரு நோயாளியிடம் நாம் காட்ட வேண்டிய நேசத்தைப் பேசுகிற படம். டொரான்டோ திரைப்பட விழாவில் பாராட்டுக்களை அள்ளிய கிளாடியா லுஸ் என்கிற மெக்சிக பெண் இயக்குனரின் முதல் படம்

**************************

திரையரங்கம் : ROBOT BALA ABIRAMI

10:45 am : Don Jon 

டான் ஜுவான் பல பெண்களை மயக்கும் உமனைசர். ஒரு ஸ்பானிய புனைவு கதாபாத்திரம். இந்த டான் ஜூவான் மொசார்ட் முதல் பெர்னார்ட் ஷா வரை பாதித்திருக்கிறான். எல்லோரும் அவனைத் தழுவியிருக்கிறார்கள். அந்த டான் ஜுவானின் கலியுக அவதாரமே இந்த டான் ஜான். ஜான் அமெரிக்காவின் மன்மதன். அதனாலேயே அவனை டான் ஜான் என்று அவனது நண்பர்கள் செல்லமாக அழைக்கின்றனர். டான் ஜானுக்கு காதல் என்பது வெறும் ஒரு சொல்.. அவ்வளவுதான். அப்படிப்பட்டவனும் ஒரு பெண்ணுக்காக கடைசியில் மாய்ந்து மாய்ந்து உருகினான். காதல் என்கிற வார்த்தையின், முழு அர்த்தத்தை உணர்ந்து கொண்டான். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோசப் கார்டன் லெவி இயக்கிய முதல் படம்.

1:45 pm : Strangers In the House

பால்ய வயதில் துள்ளி திரிந்த வீட்டைக் கடந்து செல்லும் போது.. உங்கள் மனநிலை எப்படி இருக்கும், உடனே உங்கள் மனைவியிடமோ அல்லது குழந்தைகளிடமோ அந்த வீடு பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள்தானே?. 70 வயது அகபிக்கும் தான் வாழ்ந்த வீட்டைப் பற்றி சொல்ல பல கதைகள் உள்ளன. ஆனால் அந்த வீட்டுக்கு சொந்தக்காரி இப்போது வேறு ஒருத்தி. அவள் வேறு யாரும் அல்ல.. சொந்தப் பேத்தி எல்பிடா. எவ்வளவோ கேட்டும் எல்பிடா கிழவிக்கு அந்த வீட்டைத் தர மறுக்கிறாள். அவளுக்கு அதை இடித்து ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். அந்த வீடு என்ன ஆனது?. பாட்டி-பேத்தி வீட்டை விட்டுக் கொடுத்தது யார்?. உணர்ச்சிமிகு குடும்ப காவியம்.

4:15 pm : Hide Your Smiling faces

டாமி அண்ணன், எரிக் தம்பி. இந்த இரண்டு சிறுவர்களும் இப்போது வசிக்கும் இடம் ஜெர்சி நகரத்தின் ஒரு காட்டுப் பகுதி. பக்கத்து வீட்டு சிறுவனுக்கோ இவர்களுடன் எப்போதும் சண்டை. ஒரு நாள் காட்டுக்குள் ஏரிக்கரையில் அந்த பக்கத்து வீட்டுச் சிறுவன் செத்துப்போய் கிடக்கிறான். அருகிலே அவன் அப்பாவும் செத்துப் போய் கிடக்கிறார். அவர்களைக் கொன்றது காட்டுக்குள் இருக்கும் ஒரு அதிபயங்கர அரக்கன். அப்படித்தான் அண்ணனும் தம்பியும் நம்புகின்றனர். அந்த அரக்கன் தங்களையும் கொன்று விடுவானோ?. வீட்டை விட்டு வெளியே வரவே பயம். தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகலாம் போல் இருக்கிறது. சிறுவர்களின் கனவுலகம் எழில் மிகுந்ததும், வண்ணமயமானது மட்டும் அல்ல. சில நேரம் கலவரமானதும் கூட.

**************************************

திரையரங்கம் : Inox 2

4:15 pm : Floating Skyscrapers

கூபா ஒரு நீச்சல் வீரன். சில்வியா அவன் காதலி. எவ்வித சிக்கலும் இன்றி வானவில்லாய் கழியும் வாழ்க்கை. ஒரு ஓவியக் கண்காட்சியில் சிக்கல் வருகிறது, மிக்கேல் உருவில். மிக்கேலுக்கும் கூபா வயது அழகன். கூபா - மிக்கேல் நண்பர்கள் ஆகின்றனர். கொஞ்ச நாளில் அவர்கள் நட்பு அதையும் தாண்டி அபுனிதமாகிறது. இது சில்வியாவுக்கு தெரிய வருகிறது. இது முக்கோண காதல் கதையில் சேருமா? பார்த்துவிட்டு முடிவு சொல்லுங்கள்.

6:45 pm : The Tree and The Swing

லண்டன் காலேஜில் எலினா ஓர் ஆசிரியை. விடுமுறையில் ஊர் வருபவளுக்கு அதிர்ச்சி. அப்பாவின் அருகே ஒருத்தி. அவள் அப்பாவின் புது மனைவி. கொஞ்ச நாளில் தெரிந்து விடுகிறது. சித்திகாரி சூழ்ச்சிக்காரி என்று.. சித்தியின் நோக்கம் அப்பாவின் சொத்து. எலினா இப்போது சித்தியுடன் போராடத் தயார். அந்த கால மனோகரா.. இந்தக் கால மெகா சீரியல். இயக்கம்: மரியா டௌசா.

*********************************

திரையரங்கம் : INOX 3

11:00 am : SPECIAL TREATMENT

நம்மூர் மருத்துவமனைகள் போலத்தான் செர்பியாவிலும். சின்ன தலைவலிக்கே எக்ஸ்ரே, ஸ்கேன் வரை எடுத்து வரச் சொல்லி நம்மை 'ரமணா' விஜயகாந்த் ஆக்க அலைகழிப்பார்கள். வணிக மயமாகிவிட்ட செர்பியாவின் மருத்துவச் சூழலை நையாண்டி செய்யும் படம். BLACK HUMOUR GENREக்கு சிறந்த எடுத்துக்காட்டு இப்படம். குடிப் பழக்கத்திலிருந்து மீள ட்ரீட்மென்ட்க்கு வரும் 6 பேஷண்ட்களை ஆராய்ச்சி எலிகளாய் சாடிஸ்ட் டாக்டர் படுத்தி எடுப்பதைப் பார்க்க வேண்டுமா? இப்படம் பாருங்கள். இயக்கம்: Goran Paskaljevic.

2:00 pm : The Future

ஸ்ரோடின்கரின் பூனை: ஒரு சிறிய நிகழ்வு உங்கள் மொத்த வாழ்வையும் புரட்டிப்போடும் அல்லது போடாது. தாமசும் பியான்காவும் அண்ணன் தங்கை. வசதியான குடும்பம். ஒரு விபத்தில் பெற்றோர் இறந்து போக.. எல்லாம் தலைகீழ் ஆகிறது. இருவரும் இப்போது நடுத்தெருவில். குடிகாரன் விழுந்தால் தடுமாறி எழுந்து விடுவான். தெளிவானவன் விழுந்தால்.. எழுந்தால்தான் உண்டு. இயக்கம்: ஆலிசியா ஷெர்சன்.

4:30 pm : Let Me Survive

தகுதியுள்ளதே உயிர்வாழும். இல்லாதது செத்துப் போகும். 'சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட்' டார்வினின் பரிணாமக் கோட்பாடு. கூட்டிப் பெருக்கும் வேலையா? அதற்கும் தகுதி இல்லையா? பெருக்கித் தள்ளிவிடுவார்கள். இன்று வேலை என்பது உயிர் போல.. இந்தப் படத்தில் ஒரிஜினல் உயிர் பிரச்சினையே வருகிறது.

கேட் - அம்மா. அவளுக்கு 14 வயது மகள் எமிலி. அம்மாவுக்கு ஒரு புதுக் காதலன் கிடைக்க.. அம்மா, மகள், காதலன் மூவரும் பிக்னிக் போகின்றனர். பிக்னிக் கடலில். சொந்தப் படகில் பயணம். திடீரெனப் புயல். அலைகடல் நடுவே ஜீவமரணப் போராட்டம். படகிலோ கொஞ்சம் ரொட்டி, கொஞ்சம் தண்ணீர். தகுதியானதே உயிர் வாழும். பிரான்சில் நடந்த நெஞ்சை உறைய வைக்கும் உண்மைக் கதை.

**************************

திரையரங்கம் : CASINO

11:00 am : THE PHOTOGRAPH

ஆடம் வயது 16. அம்மா அப்பாவுடன் வாழ்ந்து வருகிறான். மகிழ்ச்சி ததும்பும் அவன் வாழ்வை ஒரு புகைப்படம் கெடுக்கிறது. அந்தப் படத்தில் அவன் அம்மா கர்ப்பமாக இருக்கிறாள். அவள் அருகே ஒரு ஆள் இருக்கிறான். யார் அந்த ஆள்?. அவன்தான் ஆடமின் உண்மையான அப்பாவா?. அந்த கேள்விக்கு விடை தேடி புறப்பட்ட ஆடமுக்கு கிடைக்கிறது ஒரு காதல், ஒரு நட்பு. அது சரி.. தேடிப்போன விடை கிடைத்ததா?.இயக்கம்: மைக்கிஜ் அடாமெக்.

2:00 pm : Northwest

கோபன்ஹேகன் குற்ற பூமி. மாஃபியா, கொலைகாரர்கள், புரோக்கர்கள் திரியும் அந்த அழுக்கு சாம்ராஜ்யத்தின் இளவரசன் 18 வயது கேஸ்பர். கொலை, கொள்ளை என கலவரக் கலவையாகக் கழியும் வாழ்க்கை. ஒரு நாள் கதை மாறுகிறது. சாம்ராஜ்யத்தின் துப்பாக்கி இளவரசன் தம்பியை குறி வைக்கிறது. இது வரை மற்றவர்களை துரத்திய கேஸ்பர். இப்போது ஓட ஆரம்பிக்கிறான். துடிப்பான திரில்லர் படம்.

4:30 pm : ANOTHER HOUSE 

ஹென்றி 86 வயது கிழவன். அவன் முதுமையே அவன் நோய். அவனுக்கு எப்போதும் ஒரே கனவு வருகிறது. அந்தக் கனவில் ஒரே ஒரு வீடு. மிக அழகான வீடு. கிழவனுக்கு தினமும் இதே கனவு.. இதே வீடு, அந்த வீட்டைக் கண்டுபிடித்தே தீர்வேன் என அலைபவனை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் சேர்க்கின்றனர். ஹென்றிக்கு இரண்டு மகன்கள். ஒருவன் பத்திரிகையாளன், இன்னொருவன் ராணுவ வீரன். இருவரும் அப்பாவைப் பார்க்க வருகின்றனர். கிழவனின் ஒரே ஆசை அவன் கனவு வீட்டை பார்க்க வேண்டும். வீட்டைக் காட்டிவிடுவதென மகன்கள் முடிவெடுக்கின்றனர். உங்களுக்கு இப்படி எதாவது கனவு வருகிறதா?. இயக்கம்: மேத்திவ் ராய்.

7:00 pm : Thou Gild'st The Even

ஓனர் அனலு இயக்கிய துருக்கி ஃபாண்டஸிப் படம். கதை ஆனடோலியா நகரத்தில் நடக்கிறது. செமால் ஒரு கால்பந்தாட்ட ரெஃப்ரீ. யாசெமின் முட்டை பாக்டரியில் வேலை பார்ப்பவன். டெப்னீ புத்தகங்கள் விற்பவள். இர்பான் ஒரு டாகடர். இந்த நால்வரும் நம்மைப் போல் இல்லை; நமக்கும் மேல். வினோத விசித்திர சக்தி அவர்களுக்கு உண்டு. செமால் சுவற்றை துளைத்து நடப்பான். யாசமின் நினைத்தாலே பொருட்கள் நகரும். டெப்னீ காலத்தை நிறுத்துவாள். துருக்கியின் எக்ஸ் மென்.

****************************

திரையரங்கம் : RANI SEETHAI HALL

11:00 AM : காதல் மன்னன் (இயக்குநர் : அசோக் குமார்)

2:00 PM : தங்க மீன்கள்

4:00 PM : கும்கி

7:00PM : Spooks And Spirits

ஆனாவும் இங்கியும் காதலர்கள். ஆனாவுக்கு ஒரு பூர்வீக வீடு. அந்த வீட்டை விற்க வேண்டும். ஆனால் அதை யாரும் வாங்கத் தயாராக இல்லை. காரணம் ஆனாவின் அப்பா ஃபைக். குடிகாரன், சிடுமூஞ்சி & பெண்பித்தன். ஃபைக் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இப்போதும் ஃபைக் அதே வீட்டில் ஆவியாகத் திரிகிறான். பேயாகியும் பயல் திருந்தவில்லை. அதே கெட்ட ஃபைக்தான் இப்போதும்.

மகள் ஆனா முடிவெடுத்து விட்டாள்.இந்த பேயை ஓட்டினால்தான் வீட்டை விற்க முடியும். இப்போது புது சிக்கல் இப்போது ஃபைக்கோடு இன்னொரு பேயும் சேர்ந்து கொள்கிறது. அது ஃபைக்கின் முன்னாள் காதலி. பேய் கலாட்டா. சிரித்து ரசிக்க ஒரு பேய்ப் படம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top