.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 13 December 2013

வெற்றியின் படிகள் மூன்று!



 ஒரு செயலினை சிறப்பாக செய்து முடிப்பதற்கு தன்னறிவு, தன்னம்பிக்கை, சுய முயற்சி ஆகியவை தேவை. இவை மூன்றும் தான் வெற்றியின் முக்கிய மூன்று படிகள். எந்த வேலை தன்னறிவுடனும், ஆழ்ந்த ஈடுபாட்டு டனும் செய்யப்படுகிறதோ அந்த வேலையே மிகச்சிறந்த பலனைத் தருகிறது.


தன்னறிவு



தன்னைப் பற்றிய அறிவு, தனது தகுதிகள், திறமைகள், எல்லைகள் ஆகியவற்றை ஒருவன் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இது எல்லோருக்கும் அவசியம். இது பற்றிய ஒரு பழமையான கருத்து உள்ளது.


தெரியாது என்று தெரியாதவனுக்குத்

தெரியாது – அவனை விட்டுவிடு

தெரியாது என்று தெரிந்தவனுக்கு

தெரியாது – அவனுக்குக் கற்றுக்கொடு

தெரியும் என்று தெரியாதவனுக்குத்

தெரியும் – அவனை விழிக்கச் செய்

தெரியும் என்று தெரிந்தவனுக்கு

தெரியும் – அவனைப் பின்பற்று.


தன்னம்பிக்கை



சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தங்களைப் பற்றி தெரியும். அவர்களும் வாழ்க்கையில் தோல்வி காண்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன? தன்னம்பிக்கை இல்லாமை. அறிவையும் செயலையும் இணைக்கின்றசங்கிலி அது. நம்மைப் பற்றிய அறிவு நமது முயற்சிகளில் இணைந்து வெற்றியைத் தர வேண்டுமானால் தன்னம்பிக்கை வேண்டும்.


தன்னம்பிக்கை என்றால் என்ன? நமது மனத்தை நம்புவது தான் தன்னம்பிக்கை.


ஆனால் காமம், கோபம் போன்ற எதிர்மறைப் பண்புகள் பல நமது மன ஆழங் களில் உள்ளன. அப்படி இருக்கின்றமனத்தை எப்படி நம்புவது? இதனால்தான் பலர் தங்களை விட அடுத்தவர்களை அதிகமாக நம்புகின்றனர்.


காமம் முதலானவை நம்மில் இருப்பது உண்மைதான். ஆனால் அதே மன ஆழங்களில்தான் அன்பு, கருணை, தூய்மை, சிறப்பு, ஆற்றல் போன்றநற்பண்புகளும் உள்ளன. அவற்றில் நம்பிக்கை வைக்க வேண்டும்.


உலகம் உண்மையிலேயே நல்லது. நன்மையும் உண்மையும் எங்கே உள்ளனவோ அங்கே வெற்றி உறுதி என்பதனைப் பரிபூரணமாக நம்பினால் மன ஆழங்களில் உள்ள நற்பண்புகள் தாமாக வெளிப்படத் தொடங்கும். இந்த நற்பண்புகள் தீய பண்புகளைப் படிப் படியாகக் கட்டுப்படுத்தத் தொடங்கும். மனத்தைத் தூய்மை செய்தல் என்று இதையே நாம் சொல்கிறோம்.


இவ்வாறு தீய பண்புகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு நாம் மனத்தை நம்பலாம். இது ஒருவிதமான தன்னம்பிக்கை.


மற்றொரு தன்னம்பிக்கையும் உள்ளது. நம்மில் ஆழ்மனம் என்றஒன்று இருப்பது போலவே ஆன்மா என்றஒன்றும் உள்ளது. இது நமது உயர் பரிமாணம். இந்த ஆன்மா தெய்வத்திலிருந்து பிரிக்க முடியாத ஓர் அம்சம். இதுதானே ஒளிர்வது. ஆனந்த மயமானது. சுதந்திரமானது. எல்லா அறிவிற்கும் ஆன்மீக சக்திக்கும் இருப்பிடம் அதுவே. அதன் ஒளியைச் செலுத்துவதன் மூலம் மனத்தின் எந்தப் பகுதியையும் தூய்மையாக்கலாம், கட்டுப்படுத்தலாம்.


இந்த ஆன்மாவே நமது உண்மை இயல்பு. இந்த ஆன்மாவில் நிலைபெற்று, அதைச் சார்ந்து வாழ்வதும் தன்னம்பிக்கைதான். இது உயர்நிலை தன்னம்பிக்கை.


சுயமுயற்சி



தன்னறிவும், தன்னம்பிக்கையும் ஒருவனை வெற்றிக்குத் தகுதியுடையவன் ஆக்குகின்றன. ஆனால் வெற்றி கிடைக்க வேண்டுமானால் மூன்றாவது ஒன்று அதற்கு வேண்டும். அதுவே சுயமுயற்சி.


தன்னம்பிக்கை என்பது செயலில் பிரதி பலிக்க வேண்டும். இல்லாவிட்டால் தன்னைப் பற்றியே நினைத்து நினைத்து ஒருவன் தனக்குள்ளே அமுங்கிப் போவதற்கான (ஐய்ற்ழ்ர்ஸ்ங்ழ்ள்ண்ர்ய்) வாய்ப்பு உண்டு. இது மனநலத்திற்கு மிகவும் ஊறு விளைவிப்பதாகும்.


அறிவு, கல்வி போன்றவற்றிற்கு வாழ்க்கையில் உண்மையிலேயே பலன் உண்டு. ஆனால் அவற்றையே முதலும் முடிவுமாகக் கொண்டு அவற்றிலேயே மூழ்கிக் கிடப்பது ஒருவன் முயற்சிகளில் ஈடுபடாமல் தடுக்கிறது. அவனை எதற்கும் உதவாத சோம்பேறி ஆக்குகிறது.


வாழ்க்கையில் செயல்படுத்தி, பரிசோதிக்கப் பட்டால் மட்டும் அறிவினால் பலன் உண்டு. அப்படி பரிசோதிப்பது எப்படி? வேலைகளின் மூலம் தான்.


செயல்முறைஅறிவு இல்லாமல் வெறும் புத்தக அறிவு மட்டுமே கொண்ட ஒருவனிடம் யாரும் போய் உதவி கேட்க மாட்டார்கள். நடைமுறையில் வாழ்ந்து காட்டாதவனால் தனக்கும் பிரயோஜனம் (உபயோகம்) இல்லை, மற்றவர்களுக்கும் பயனில்லை. நமது துன்பங் களில் பாதி அறியாமையினால் உண்டாகிறது என்றால், மீதி, வேலை செய்யாமல் சோம்பேறி யாக இருப்பதால் உண்டாகிறது.


நாம் ஏன் வேலை செய்யாமல் இருக்கிறோம்? எங்கே தவறுகள் நேர்ந்து விடுமோ என்ற பயத்தால்தான்.


ஆனால் சும்மா இருப்பதால் இந்த பயம் போகாது. வேலைகள் செய்வதன் மூலமே இந்தப் பயத்தைக் கடக்க முடியும். எனவே வேலை செய்வதால் அதிக தவறுகள் உண்டாகும் என்றாலும் தயங்காமல் வேலை செய்தே தீர வேண்டும்.


என்னுடைய மாணவர்களிடம் நான், “ஒரு தவறு செய்வது போதாது, ஏழு தவறுகளாவது செய்யுங்கள்” என்பேன். “எங்கே தவறு செய்து விடுமோமோ” என்று பயந்து கொண்டு இருப்பவன் நின்ற இடத்திலேயே நிற்கிறான். தயங்காமல், தவறுகளைப் பற்றி கவலைப் படாமல் செயல்படுபவன் முன்னேறிச் செல்கிறான்.


ஆன்மிக வாழ்வு என்று வரும்போது இதனைப் பிரத்தியட்சமாக காணலாம். புத்தகத்திலிருந்து ஆன்மீக சாதனைகள் பற்றி படிக்கின்றோம். குருவிடமிருந்து கேட்கிறோம். ஆனால் இவற்றைவாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.


அதிகம் படிப்பதால் மனம் குழம்புகிறது. எல்லாவற்றையும் அடைந்து விட்டது போன்று பிரமை ஏற்படுகிறது. இது அறிவற்றவனாக இருப்பதை விட மோசமானது. அதனால்தான் “வெறுமனே சில வார்த்தைகளைப் படிப்பதான வெற்றறிவு ஓர் அடர்ந்த காடு. இந்தக் காடு மனித மனத்தை வெறுமனே அலைந்து திரிய வைக்கிறது” என்று கூறப்படுகிறது.


ஞானம், பக்தி என்றெல்லாம் நாம் சொல்லிக் கொள்வதும் இந்தப் பிரிவிலேயே அடங்கும். பசித்தவனுக்கு உடனடியாக வேண்டியது உணவு. பசியைப் பற்றிய ஒரு கவிதையோ, சத்துணவைப் பற்றிய கட்டுரையோ அவனுக்குப் பயனற்றது.


அதுபோலவே, கடவுளுக்காக ஏங்குகின்ற மனிதன் பக்தியைப் பற்றியோ ஞானத்தைப் பற்றியோ கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டான். கடவுளுடன் எப்படி நேரடியாகத் தொடர்பு கொள்வது என்ற ஒரே நோக்கத்துடன் தீவிரமாகப் பாடுபடுவான். சுயமுயற்சியுடன் கூடிய தன்னறிவும் தன்னம்பிக்கையும் நிச்சயம் வெற்றியை ஈட்டித்தரும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top