செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தயாரித்துள்ள மங்கள்யான் செயற்கைக் கோள் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பியுள்ளது.
மொத்தம் ரூ.450 கோடி செலவிலான இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது..
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் தொடர்ந்து தனது பாதையைப் பெரிதாக்கிக்கொண்டே வரும் விண்கலம் டிசம்பர் 1-ம் தேதி நள்ளிரவு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தள்ளனர்.
தொடர்ந்து 280 முதல் 300 நாள்கள் பயணித்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை விண்கலம் அடையும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மீத்தேன் சென்சார்கள், அங்குள்ள மேற்பரப்பை படம் பிடிக்கும் கேமரா, கனிம வளத்தை ஆய்வு செய்ய தெர்மல் இன்ஃபிராரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர், வளிமண்டலத்தை ஆய்வு செய்ய லிமான் ஆல்பா போட்டோமீட்டர், கம்போசிஷன் அனலைசர் போன்ற கருவிகள் மங்கள்யான் விண்கலத்தில் அனுப்பப்பட உள்ளன. இதன் மொத்த எடை 1,340 கிலோ ஆகும்.
இந்தியாவின் முதல் வேற்றுக்கிரக திட்டத்தைப் பொருத்தவரை செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக எடுத்துச்சென்றால் அதுவே பெரிய சாதனைதான். உலக அளவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட 51 திட்டங்களில் 21 திட்டங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
300 நாள்கள் நீண்ட பயணம்
* பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட்டுக்கான 56 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நவம்பர் 3-ம் தேதி காலை 6.08 மணிக்கு தொடங்கியது.
* நவம்பர் 5-ஆம் தேதி பிற்பகல் 2.38 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
* டிசம்பர் 1-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்கலம் பயணம்.
* 280 முதல் 300 நாள்கள் வரை இந்த விண்கலம் பயணிக்கும். பின்னர் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் விண்கலம் செலுத்தப்படும்.
0 comments: