.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 5 November 2013

புன்னகை – நல்லன எல்லாம் தரும்.!

எந்த உயிரினத்திற்கும் இல்லாத அழகான முக வடிவமைப்பை இறைவன் மனித இனத்திற்கு அளித்துள்ளான். அந்த முகத்திற்கு மேலும் மெருகூட்டி பொலிவாக்க புன்னகை என்னும் நகையை அணிந்து கொள்ள வழி செய்துள்ளான். ஆனால், மனிதர்களிடையே காணப்படும் போட்டி, பொறாமை, உறவுகளிடையே காணப்படும் வெறுப்புணர்வு ஆகியவை அந்தப் புன்னகையை மனிதர்களிடமிருந்து காணாமல் போகச் செய்கிறது. ஓவியர் லியொனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட “மோனாலிசா’ ஓவியம் புன்னகையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த ஓவியம்.




                    nov 5 - edit smile


எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பெண்ணை “புன்னகை அரசி’ என்றும், ஆணை “புன்னகை மன்னன்’ என்றும் கூறி நாம் புன்னகைக்கு மகுடம் சூட்டி மகிழ்கிறோம்.


பெற்றோர்கள் பிள்ளைகளிடம் காட்டும் புன்னகை அவர்களின் எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாகிறது. பிள்ளைகள் பெற்றோர்களிடம் காட்டும் புன்னகை, வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது. மருத்துவர் நோயாளிகளிடம் காட்டும் புன்னகை நம்பிக்கைக் கீற்றாக அமைகிறது. வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்கள் காட்டும் புன்னகை வியாபாரத்தை அதிகரிக்கிறது.


அதிகாரிகள் அலுவலர்களிடம் காட்டும் புன்னகை ஒற்றுமையை அளிக்கிறது. அரசியல் தலைவர்கள் மக்களிடம் காட்டும் புன்னகை ஜனநாயகத்திற்கு அடித்தளமாகிறது.


“புன்னகை எந்தப் பிரச்னையையும் நேராக்கும் வளைவுக் கோடு’ என்பார்கள். ஒரு நொடிப் பொழுதில் உள்ளத்தில் எழும் மகிழ் உணர்வு புன்னகையாக வெளிப்படுகிறது. நமது மகிழ்ச்சியை இயற்கையாக பிரதிபலிக்கும் ஒரு சக்தியாக புன்னகை விளங்குகிறது. புன்னகை நமது உடலையும் உள்ளத்தையும் இணைத்து மூளைக்குத் தகவல்களை அனுப்பி நம்மை சஞ்சலமற்ற மனதுடன் சந்தோஷத்துடன் இருக்க உதவுகிறது.


நமது மூளையின் புறப்பகுதியின் இடது பாகம் நமது சந்தோஷங்களைப் பதிவு செய்வதற்காகவே உள்ளது. தலைப் பகுதியிலுள்ள தசைகள் மூளையிலிருந்து வரும் சைகையை தாங்கி முகத்தில் உள்ள தசைகளை இயங்கச் செய்து உதட்டில் புன்னகையை தவழச் செய்து உடலை பரவசமாக்குகிறது. நாம் சோகமாக இருக்கும்போது, நாம் முன்பு செய்த நல்ல விஷயங்களை எண்ணிப் பார்த்து புன்னகைத்தால் அது நமது உடம்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.


நாம் சந்தோஷமாக இருக்கும்போது நமது உடம்பு நல்ல எண்ண அலைகளை வெளிப்படுத்தி மனதை தூய்மையாக்குகிறது. நாம் வீசும் ஒரு புன்முறுவல் மற்றவர்களையும் புன்னகைக்கச் செய்யும். அதாவது, நாம் சிரித்தால், நம்மைப் பார்த்து உலகம் சிரிக்கும் என்பார்கள். புன்னகை ஒரு தொற்று நோய். நம்மைச் சுற்றி வினோதமான, கோமாளித்தனமான நிகழ்வுகள் நடக்கும் போது நம்மால் புன்னகைக்காமல் இருக்க முடியாது. நமது நண்பர்களையோ உறவினர்களையோ சந்திக்கும்போது அவர்கள் வீசும் புன்னகையால் நம்மை அறியாமைலே நாம் புத்துணர்வு பெறுவோம். அதற்கு மாறாக முகத்தைச் சுளித்து, கடுமையான பார்வையைக் காட்டினாலோ அதனால் எதிர்வினைகள்தான் ஏற்படும்.


நமது மனம் உற்சாகத்திலிருக்கும்போது, உதடு புன்னகைக்கிறது. புன்னகை மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. நாம் புன்னகைக்கும்போது நமது உடம்பிலிருந்து எண்டார்பின், செரோடினின் போன்ற இயற்கையான வலி நிவாரணிகள் சுரக்கின்றன.


உடல்வலியைக் கட்டுபடுத்த இறைவன் நமக்கு அளித்த அருமருந்து புன்னகை. அது மன உளைச்சலையும் சோர்வையும் உடல்வலியையும் போக்கும். சிறு புன்னகைதான் பெரும் சிரிப்பை வரவழைக்கும். புன்னகை இல்லாமல் சிரிப்பில்லை. சந்தோஷ சிரிப்பு நம் உடல் நலனை சீராக்குவதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்கி, சீரான தூக்கத்தையும் அளிக்கும்.


எப்போதும் புன்முறுவல் பூத்தவாறு பிறருடன் அன்பாக பழகுபவருக்கு உடல்நலப் பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை, அதிக அளவில் புன்முறுவல் பூத்து உற்சாகத்துடன் உழைப்பவர்கள் மற்றவர்களை விட ஏழு ஆண்டுகள் இளமையுடன் இருப்பார்கள் என தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
நமது குறுநகை பிறருடைய கவனத்தை இழுக்கும் திறனுள்ளதாக அமையும். அதனால்தான் புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்கும்போது நம்மைப் புன்னகைக்கச் சொல்கிறார்கள்?


வேலைப் பளு காரணமாகவோ மன வருத்தம் ஏற்படும்போதோ, அல்லது பிறர் நம்மை வருந்துமாறு பேசினாலோ ஒரு சிறுநகை உதிர்த்தால் மனம் லேசாகி விடும். ஏதேனும் ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் பேராவல் ஏற்பட்டு அது கிடைக்காமல் போனால் மனம் விசாரம் கொள்ளாமல் இருக்கவும் புன்னகை உதவுகிறது. ஆபத்து வருமோ என்ற கவலையும் மனதிலிருந்து மறைகிறது. பிறரைக் கவர வேண்டுமானால் நமக்கு உயர்ரக ஆடைகளும், அலங்காரங்களும் தேவையில்லை. உதட்டில் புன்னகையை அணிந்தாலோ, அது முன்பின் தெரியாதவர்களையும், ஏன், எதிரியைக்கூட நண்பராக்கும் பாச வலையாகும்.


நாம் புதியதாக வேலை தேடிச் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் மற்றவர்களை பார்க்கச் போனாலோ நல்ல உடையுடன் சேர்த்து புன்னகையையும் அணிந்து செல்ல வேண்டும். நல்ல உடை மட்டும் ஒருவனைச் சிறந்தவனாகக் காட்டாது. சிடுசிடுப்பான முகத்துடன் உடை பகட்டாக இருந்தால் எந்தவிதமான பயனும் இல்லை. எனவே மற்றவர்கள் மனதில் நாம் பதிய வேண்டுமானால் அழகாக இயற்கையான முகிழ்நகையும் நம்முடன் இருக்க வேண்டும்.


புன்னகையை யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வழங்கலாம். விலையில்லா புன்னகையால் விளையும் பலன்களோ விலைமதிப்பற்றவை. புன்னகை – நல்லன எல்லாம் தரும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top