.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 5 November 2013

ஆர்யபட்டா டூ மங்கல்யான்!

செவ்வாய் கிரகத்துக்கு இந்திய பயணம் இன்று தொடங்குகிறது



 இந்தியா 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய ’மங்கல்யான்’ விண்கலம் பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.

அது மனிதன் வாழ தகுதியான கிரகம் என்ற தகவலால் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள கலத்தில் மாதக்கணக்கில் பயணம் செய்து  செவ்வாயில் குடியேற பலர் அட்வான்ஸ் புக் செய்துள்ளனர். இவர்களில் சில ஆயிரம் பேர் இந்தியர்கள்.


இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் இந்திய முயற்சி இன்று  நிறைவேற உள்ளது. மங்கல்யான் என்ற விண்கலத்தை  ரூ.450 கோடி செலவில் இந்திய விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழமுடியுமா போன்ற தகவல்களை இந்த ராக்கெட் ஆராயும். இதற்காக இந்த விண்கலத்தில் பல்வேறு கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்படுகிறது.  இதற்கான ‘கவுன்ட் டவுன்’ நேற்று முன்தினம் காலை 6.08 மணிக்கு தொடங்கியது.

இந்த ராக்கெட் 44 நிமிடங்களில் 17 ஆயிரத்து 415 கிலோமீட்டர் பயணித்து, பூமியின் நீள் வட்டபாதை யில் நிலை நிறுத்தப்படும். டிசம்பர் 1ம் தேதி நள்ளிரவு தாண்டி 12.42 மணிக்கு செவ்வாய் நோக்கி மங்கல்யான் விண்கலம் செலுத்தப்படும். 300 நாட்கள் பயணித்து 2014  செப்டம்பர் 24ம் தேதி  செவ்வாய் கிரகத்துக்கான சுற்று  பாதை யில் நிலை நிறுத்தப்படும்.

ஆர்யபட்டா டூ மங்கல்யான்

* 1975 ஏப்ரல் 19ம் தேதி ‘ஆர்யபட்டா’ என்ற முதல் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. ஆனால் அது சோவியத் யூனியனில் இருந்து ஏவப்பட்டது.

* இரண்டாவதாக பாஸ்கரா என்ற செயற்கை கோள்  1979 ஜூன் 7ம் தேதி மீண்டும் அங்கிருந்து ஏவப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட்  10ம் தேதி  ஆர்டிபி என்ற புதிய செயற்கைகோளை இந்திய மண்ணில் இருந்து ஏவியது.

* இதுவரை 67 செயற்கைகோளை இந்தியா ஏவியுள்ளது. இவற்றில் 25 ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்டன. இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ஆர்டிபி உட்பட 7 செயற்கைகோள்கள் இலக்கை எட்டவில்லை. 4 முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

* மாணவர்கள் தயாரித்த 4 செயற்கைகோளையும்,  ஜெர்மனி, கொரியா,  பெல்ஜியம், இந்தோனேசியா, இத்தாலி, இஸ்ரேல், கனடா, ஜப்பான், துருக்கி,  சுவிட்சர்லாந்து, அல்ஜீரியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், இங்கிலாந்து நாடுகளுக்காக 35 செயற்கை கோள்களையும் இந்தியா ஏவியுள்ளது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top