சகுந்தலா தேவி அவர்கள், ஒரு இந்திய பெண் கணிதமேதையாவார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கியவர். தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, உலக சாதனை புத்தகமாகக் கருதப்படும், “கின்னஸ் புத்தகத்தில்” இடம்பிடித்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கணிதவியலில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: நவம்பர் 04, 1939
இடம்: பெங்களூர், கர்நாடகா
இறப்பு: ஏப்ரல் 21, 2013
பணி: கணிதமேதை, ஜோதிடர்
நாட்டுரிமை: இந்தியா
பாலினம்: பெண்
பிறப்பு:
இந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை:
சகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.
சகுந்தலா தேவியின் கணிதத் திறமை:
சகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இல்லக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779 = 18.947.668.177.995.426.462.773.730) எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.
சகுந்தலா தேவி எழுதிய நூல்கள்:
தன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.
‘பெர்ஃபெக்ட் மர்டர்’,
‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,
‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,
‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’
போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.
இறப்பு
‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.
1 comments:
வணக்கத்திற்குரிய பெண்மணி