.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 10 October 2013

'மனைவி கட்டிய தாஜ்மஹால்' -சுற்றுலாத்தலங்கள்!



      'மனைவி கட்டிய தாஜ்மஹால்'

 'மனைவி கட்டிய தாஜ்மஹால்'
காதலும்,கலைரசனையும் மொகலாயர்களின் உணர்வில் ஊறியது போலும். மனைவி மீது கொண்ட காதலால், அவரை அடக்கம் செய்த இடத்தில் பளிங்கு மாளிகை எழுப்பினார் ஷாஜகான். அது, தாஜ்மஹால்.
 அன்புக்கணவர் ஹுமாயுன் நினைவாக, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கலையநயமிக்க மாளிகை ஒன்றை எழுப்பினார் ஹுமாயுனின் மனைவி ஹமீதாபானு பேகம். அது, ஹுமாயுன் கல்லறை (Humayun's Tomb). டெல்லியில் கிழக்கு நிஜாமுதீன் பகுதியில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் ஹுமாயுன் கல்லறைதான் இந்தியாவில் மொகலாயர் கட்டிய கலை ரசனைமிக்க முதல் கட்டடம். ஆம். இது மனைவி கட்டிய தாஜ்மஹால்.
 
ஹுமாயுன் என்கிற நஸ்ருதீன் ஹுமாயுன். பாபரின் புதல்வர். அக்பரின் தந்தை. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வடஇந்தியப் பகுதிகளை ஆட்சி செய்தவர். கி.பி. 1530- 40வரையிலும் 1555- 56வரையிலும் ஹுமாயுன் ஆட்சி நடந்தது. 1556ல் தனது நூலகத்தின் படிகளில் இருந்து தவறி விழுந்து எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார்.
 
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மனைவி ஹமீதாபானு பேகம் விருப்பப்படி கட்டடம் எழுப்பப்பட்டது. இதற்காக பாரசீக கட்டடக்கலை நிபுணர்களான சையத் முகமது, அவரது தந்தை மிராக் கியாதுதீன் ஆகியோரை ஆப்கானிஸ்தான் ஹெரத் நகரில் பிரத்யேகமாக வரவழைத்துள்ளனர். சுமார் 8ஆண்டுகளாக கட்டடப்பணி நடந்துள்ளது. சதுரவடிவிலான அழகான நந்தவனங்கள், நீரோடைகள், நடுவே மாளிகை வடிவத்தில் நினைவிடம் என பாரசீக பாணியில் கட்டி முடிக்கப்பட்டது. செக்கச்சிவந்த சிவப்பு கற்கள், பளபளக்கும் பளிங்கு கற்கள் கலந்து உருவாக்கப்பட்ட இந்த கட்டடம் இன்றளவும் அதே அழகுடன் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது.
 
இதை கணவர் ஹுமாயுன் நினைவாக கட்டுவதற்கு உத்தரவிட்ட ஹமீதாபானு பேகம் இறந்தபிறகு அவரது உடலும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது. தவிர, டெல்லியை ஆண்ட கடைசி மொகலாய மன்னரான இரண்டாம் பகதூர்ஷா உள்ளிட்ட பல மன்னர்களின் கல்லறைகளும் இங்குள்ளன. 1857-ம் ஆண்டில் நடைபெற்ற கலகத்தின் போது இரண்டாம் பகதூர்ஷா இங்கே மறைந்திருந்ததாகவும், அவரை லெப்டினென்ட் ஹாட்சன் இங்கிருந்துதான் பிடித்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
வரலாற்று நினைவுகளையும் வனப்புகளையும் தாங்கி நிற்கும் ஹுமாயுன் கல்லறை, 1993ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
 
எப்படிச் செல்வது?
 
டெல்லியிலேயே இது அமைந்துள்ளதால் எங்கிருந்தும் எளிதாக சென்றடையலாம். நல்ல சாலை வசதி உள்ளது. பிற பகுதிகளில் இருந்து நிஜாமுதீனுக்கு ரயில் வசதி இருக்கிறது. டெல்லியில் சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ளது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top