.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 23 November 2013

நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு!

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?

அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்' என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்:

சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.


ப்ரீத்தி ஷா சொல்கிறார் ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன்.

உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

கோச்சடையான் ஆச்சரிய ஜாதகம்!


ரஜினி. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திரையரங்கிற்கு இழுக்கும் மந்திரம். கோச்சடையான் படமும் முழுமையான ரஜினிப் படமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பார்த்துப் பார்த்துக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் கே.எஸ். ரவிகுமார். படத்தில் கோச்சடையான்தான் அப்பா ரஜினி. இடைக்காலத் தமிழகத்தில் தென்தமிழ்நாட்டின் பாண்டியப் பேரரசை ஆட்சி செய்த புகழ்பெற்ற தமிழ் மன்னரின் படைத்தளபதியாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் தளபதியாக இருக்கும் அப்பா ரஜினியை மையப்படுத்திக் கதை நகர்கிறது என்றால், இரண்டாவது பாதியில் ’ராணா’வாகிய மகன் ரஜினி, தனது சாகஸங்களால் படத்தைத் தனது தோளில் சுமக்கிறாராம். தளபதியாக இருக்கும் அப்பா ரஜினி, போர்க்கலை மட்டும் தெரிந்தவர் அல்ல. பரதக் கலையிலும் வல்லவர். ஷோபனாவுக்கும் - அப்பா ரஜினிக்கும் படத்தில் ஒரு பரதப்போட்டி இருக்கிறதாம். மகன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகாவும் சாகஸங்கள் செய்யும் ஆக்‌ஷன் கதாபாத்திரமாக, நாட்டின் அரசியல் வாரிசாக நடித்திருக்கிறாராம்.

ரஜினியும் ரஜினியும்

ராணா ரஜினியின் அறிமுகக் காட்சிகள் ரஜினி ரசிகர்களுக்குச் செமத்தியான வேட்டையாக இருக்கும் என்கிறார்கள். அப்பாவிடம் ஆலோசனை கேட்காமல், அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று ராணா செய்யும் சில அதிரடிகள் காரணமாக, எதிர்பாராமல் ராணா,எதிரிகளின் கைகளில் சிக்கிக்கொள்கிறார். அந்த நேரத்தில் கோச்சடையான் ரஜினி வந்து மகன் ரஜினியைக் காப்பாற்றும் காட்சிக்குப் பாராட்டுகள் குவியப்போவது உறுதி என்கிறார்கள். சீன மார்ஷியல் ஆர்ட் சண்டைப் படங்களில், நாயகனும் அவனது நண்பனும் இணைந்து, எதிரியைத் தந்திரமாகத் தாக்கும் ஃபார்முலா உலகப் புகழ் பெற்றது. இதைப் போலவே அப்பா - மகன் என இரு ரஜினிகளும் இணைந்து எதிரியைத் தாக்கும் காட்சி, ஜப்பான் மற்றும் சீன, ஐரோப்பிய ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் விருந்தாக இருக்குமாம்.

படத்தில் நாசர், ஜாக்கி ஷ்ராஃப், சரத்குமார், ஆதி, ருக்மிணி , ஷோபனா ஆகியோரின் கதாபாத்திரங்களும் பேசப்படுமாம். 126 நிமிடம் மட்டுமே ஓடும் இந்தப் படத்தின் திரைக்கதையில், ‘இண்டர்வல் முடிச்சு’ கிடையாது. முக்கியமாக இது 3டி அனிமேஷன் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தாத மேம்பட்ட அனிமேஷன் படம் என்பதால், லைவ் ஆக்‌ஷன் படம்போல உணரலாம் என்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய விஷயமாக இருக்கப்போவது ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமல்ல, கதாபாத்திரங்கள் அணிந்துவரும் ஆடைகளும்தான். தேசிய விருதுபெற்ற நீத்தா லுல்லாதான் கோச்சடையான் படத்தின் காஸ்ட்யூமர். இவர் தமிழ்நாட்டில் வந்து ஆய்வு செய்து, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான உடைகளை வரைந்து, நூற்றுக்கணக்கான டிசைன்களைக் கொடுக்க, அதிலிருந்து சௌந்தர்யா தேர்வு செய்திருக்கிறார்.

தெலுங்கில் விக்ரமசிம்ஹா

கோச்சடையான் படத்தில் வரும் தமிழ் மன்னரைப் போலவே ஆந்திராவில் வாழ்ந்த 'விக்ரமசிம்ஹா' என்ற மன்னரின் பெயரைக் கோச்சடையான் தெலுங்கு பதிப்புக்கு வைத்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு பதிப்புகளுக்கு மட்டுமே ரஜினி குரல்கொடுத்திருக்கிறார். மலையாளத்தில் டப் செய்யப்படாமல் நேரடி தமிழ்ப் படமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்காகவும், கடைசிக் கட்ட 3டி வேலைகளைக் கவனிப்பதற்காகவும் தற்போது சீனாவில் தங்கியிருக்கிறார் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ஆர். அஸ்வின்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் ஒன்று போர்க்களத்தைப் பற்றிய தீம் இசை கலந்த பாடல். “எதிரிகள் இல்லை” என்று தொடங்கும் இந்தப் பாடலை வைரமுத்து எழுத, ரஜினி பாடினார். தற்போது இதே பாடலை இந்திப் பதிப்புக்காக இஸ்ரத் கமீல் எழுத, அதை ரஜினியுடன் இணைந்து ரஹ்மான் பாடியிருக்கிறார். இசை மிக பிரமாண்டமான ‘லார்ஜ் ஸ்கேல் கம்போஸிங்’ முறையில் உருவாகியிருக்கிறது.

எதிர் நீச்சல் எளிது!


நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் தமது வாரிசு களை சினிமாவில் களமிறக்கும் காலமிது. நடிகர் ‘தலைவாசல்’ விஜய்யும் அப்படி நினைத்திருந்தால் இன்று நாம் ஒரு உலக சாதனையாளரை இழந்திருப்போம். யெஸ்... தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா, உலகமே கவனிக்கும் இடத்தில் இருக்கும் நீச்சல் சாம்பியன்! செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிற ஜெயவீணாவுக்கு ஒவ்வொரு விடியலிலும் வெற்றி! 2012 டிசம்பரில் இஸ்தான்புல்லில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக பங்குகொண்ட இளவயது சாதனையாளர் என்பது இவரது லேட்டஸ்ட் அடையாளம்! ‘‘எங்கண்ணா ஜெயவந்த், ஸ்விம்மிங் ப்ராக்டீஸ் பண்ணப் போகும்போது நானும் வேடிக்கைப் பார்க்கப் போவேனாம்.

எனக்கு ரெண்டரை வயசிருக்கும்... ‘அண்ணாகூட நானும் ஸ்விம் பண்ணணும், இறக்கி விடுங்க’ன்னு அடம் பிடிச்சேனாம். அண்ணா ப்ராக்டீஸ் பண்ணினது பெரிய நீச்சல் குளம். 6 அடி, 9 அடி ஆழமிருக்கும். அதுக்குப் பக்கத்துல குழந்தைங்களுக்கான சின்ன நீச்சல் குளம் ஒண்ணு இருக்கும். அதுல என்னை இறக்கி விட்டிருக்காங்க. நான் ‘முடியாது, அண்ணன் இருக்கிற நீச்சல் குளம்தான் வேணும்’னு அடம் பிடிச்சேனாம். எங்களைக் கூட்டிட்டுப் போன எங்க தாத்தா, அவுட்டோர் ஷூட்டிங்ல இருந்த எங்கப்பாக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லியிருக்கார்.

‘ரொம்ப அடம் பண்றான்னா, பெரிய ஸ்விம்மிங் பூல்லயே இறக்கி விட்டுட்டு பக்கத்துலயே நின்னுப் பார்த்துக்கோங்க... ஒருவாட்டி தண்ணி குடிச்சான்னா, அந்த பயத்துல மறுபடி அந்தப் பக்கமே போக மாட்டா’ன்னு சொல்லிருக்கார் அப்பா. ‘தண்ணி குடிப்பேன்’னு நினைச்சு என்னை இறக்கி விட்டா, நானோ, ஸ்விம் பண்ணி மேலே வந்தேனாம். அந்த நிமிஷத்துலேருந்தே ஆரம்பிச்சது என்னோட நீச்சல் பயணம்...’’ - சாகசக் கதையை சாதாரணமாகச் சொல்கிற ஜெயவீணாவுக்கு முதல் போட்டியே வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது!

‘‘2008ல சென்னையில நடந்த மாநில போட்டியில ஜெயிச்சதுதான் முதல் வெற்றி. மெடல் வாங்கினப்ப, அது என்ன, ஏதுன்னுகூட எனக்குப் புரியலை... அதுக்கப்புறம் நேஷனல்ஸுக்கு செலக்ட் ஆகி மெடல் வாங்கினேன். 2011ல ராஞ்சியில நடந்த நேஷனல்ஸ்ல 5 மெடல் வாங்கினேன். நேஷனல்ஸ்ல அவ்ளோ சின்ன வயசுல (12 வயது) மெடல் வாங்கினதுக்காக ‘யங்கெஸ்ட் ஸ்விம்மர்’ என்ற பெருமையும் பாராட்டும் எனக்குக் கிடைச்சது’’ என்கிற ஜெயவீணா, படிப்பிலும் சுட்டி. விசில் அடித்தபடியே பாடல் பாடுவதிலும் நிபுணி.

‘‘ஸ்விம்மிங் ப்ராக்டீஸுக்கு போக மிச்சமாகிற ஒவ்வொரு நிமிஷத்தையும் படிக்க உபயோகப்படுத்திக்குவேன். ஸ்போர்ட்ஸ் மெடிசின் படிக்கணுங்கிறதுதான் என்னோட லட்சியம்’’ என்கிறவர், 2016ல் நடக்கவுள்ள ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கங்களையும் பெருமையையும் தட்டிவர இப்போதிலிருந்தே பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறார்!

Friday, 22 November 2013

இரண்டாம் உலகம் - காதல் உலகம் விமர்சனம்..!



நடிகர் : ஆர்யா

நடிகை : அனுஷ்கா

இயக்குனர் : செல்வராகவன்

இசை : ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத்

ஓளிப்பதிவு : ராம்ஜி


காதலே இல்லாத உலகத்தை உருவாக்கி அதில் காதலை தழைக்க வைப்பதுதான் இரண்டாம் உலகம்.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் ஆர்யா. தாய் இல்லாத அவர் உடல் நிலை சரியில்லாத தன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். எந்த ஒரு வேலையும் செய்யமுடியாத தந்தையை மிகவும் பொறுப்புடன் கவனித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுடன் ஆறுதலாக பழகிவருகிறார். இதே மருத்துவமனையில் டாக்டராக பணி புரியும் அனுஷ்கா இவரின் நல்ல செயல்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார். தன் காதலை ஆர்யாவிடம் சொல்ல முடிவெடுக்கிறார். அதன்படி நண்பர்கள் துணையோடு ஆர்யாவிடம் காதலை சொல்கிறார்.

இந்த காதலை ஏற்க ஆர்யா மறுத்துவிடுகிறார். இதனால் மனமுடைந்த அனுஷ்கா, தன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். முதலில் அனுஷ்காவின் காதலை ஏற்க மறுத்த ஆர்யா, பின்னர் அடிக்கடி அவரை பார்த்தபோது, அவர் மீது காதல் வயப்படுகிறார். தன் காதலை அனுஷ்காவிடம் சொல்ல அவரையே சுற்றி வருகிறார்.

ஒரு கட்டத்தில் அனுஷ்காவின் திருமணம் நடைபெறாமல் நின்றுவிடுகிறது. இதனால் ஆர்யாவின் காதலை ஏற்றுக்கொள்கிறார் அவர். இருவரும் சந்தோஷமாக காதல் வாழ்க்கையை தொடங்கும் போது, அனுஷ்கா இறந்து விடுகிறார். இவை அனைத்தும் இயல்பாக நம் வாழும் உலகத்தில் நடக்கிறது.

இதேபோன்று இரண்டாம் உலகம் என்று ஒரு கிராபிக்ஸ் உலகத்தை வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர். இந்த உலகத்தில் காதல் என்ற ஒன்று கிடையாது. அதில் வாழும் மக்கள் அனைவரும் பெண்களை மதிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆணுக்கு பெண் அடிமை என்றும் அவர்களுக்கு எந்தவித மரியாதை தராமலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நவீன உலகத்தில் ஒரு பெண்ணை தெய்வமாக வழிப்படுகிறார்கள். அவருக்கு மட்டும்தான் இந்த உலகத்தில் மரியாதை. இங்கு அரசர் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஆணுக்கு பெண் அடிமை இல்லை என்று சுய கவுரவத்தோடு வாழும் பெண்ணாக அனுஷ்கா. துடிப்பான இளைஞரான ஆர்யா அங்கு அனுஷ்கா மீது காதல் கொள்கிறார். இதை ஏற்க மறுக்கிறார் அனுஷ்கா. இவர்களுக்குள் காதல் புரிய வைக்க, காதல் மலர, இயல்பான உலகத்தில் இருந்து அனுஷ்காவை பிரிந்து வாழும் ஆர்யாவை இரண்டாம் உலகத்திற்கு கொண்டு வருகிறார் பெண் கடவுள்.

நிஜ உலகத்தில் இருந்து இங்கு வரும் ஆர்யா, இரண்டாம் உலகத்தில் காதலே என்ன என்று அறியாத அனுஷ்காவிற்கு காதலை உணரவைத்தாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இரண்டாம் உலகத்தில் முதல் காதல் மலர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

இரண்டு கதாபாத்திமாக நடித்திருக்கும் ஆர்யா மற்றும் அனுஷ்கா இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் வந்திருந்தாலும் ரசிக்கும் படியாக செய்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் இருவரும் மிரள வைக்கிறார்கள். ஆர்யாவின் உடல் அமைப்பு கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தியிருந்தாலும் ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு இல்லை.

காதலே இல்லாத உலகத்தை உருவாக்கி அந்த உலகம் காதல் இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லி, பின்பு அதில் காதலை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். எங்கெல்லாம் காதல் இல்லாமல் இருக்கிறதோ அந்த உலகத்திற்கு எல்லாம் ஆர்யாவை அனுப்பி காதலை மலர வைப்பது என்று முடிவெடுத்திருப்பதுடன் படம் முடிகிறது.

மொத்தத்தில் இரண்டாம் உலகம் காதல் உலகம்.

பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக பேச ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

 

உலகில் அதிகம் பயன்படுத்தபடுத்தப்படும் முக்கியமான சமூக இணையதளம் ஒன்று உண்டென்றால் அது பேஸ்புக் தளமாகத்தான் இருக்கும். அவ்வாறு பலரும் பயன்படுத்த காரணம் அத்தளத்தில் உள்ள வசதிகள், மற்றும் எளிமையாக பயன்படுத்தும் வழிமுறைகளே காரணமாக உள்ளது. பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதும்,மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டதுமான பேஸ்புக் தளத்திலிருந்து இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக பேச

உங்கள் பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக உங்கள் மொபைலிலிருந்து அழைத்துப் பேச பயன்படுகிறது ஓனஜ் என்ற   ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பயன்படுகிறது. நீங்கள் Android, Apple iPad, iPod touch என எந்த வகை மொபைல்களைப் பயன்படுத்தினாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி எளிதான உங்களுடைய நண்பர்களுடன் உரையாடல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இந்த பேஸ்புக் அப்ளிகேஷன் முற்றிலும் இலவசமே. இதைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள உங்கள் நண்பரும் அவருடைய ஆண்ட்ராய்ட் அல்லது ஐபோன் போன்ற சாதனங்களில் இந்த அப்ளிகேஷனை நிறுவியிருக்க வேண்டும்.

உலகில் எந்த ஒரு மூலையில் உங்கள் உறவினர் நண்பர்கள் இருந்தாலும் உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு பேச முடியும் என்பதே இந்த அப்ளிகேஷனின் சிறப்பு. இந்த அப்ளிகேஷன் ஐபோன், ஆண்ட்ராய்ட், ஐபோட், ஐபேட் ஆகிய சாதனங்களில் தொழிற்படுகிறது.

இந்த அப்ளிகேஷனை ஐடியூன் ஸ்டோர் (iTunes Store), ஆண்ட்ராய்ட் மார்க்கெட் (Android market), வோனஜ் பேஸ்புக் பேன் பேஜ் (Vonage Facebook FanPage)ஆகியவற்றில் கிடைக்கிறது. தற்பொழுது அனைத்து நாடுகளிலும் கிட்டதட்ட 3ஜி, 4ஜி மற்றும் வைபை தொழில்நுட்பம் (3G, 4G, WiFi) இயங்குவதால் அனைத்து நாடுகளில் உள்ளவர்களும் இந்த பேஸ்புக் அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம்.


பேஸ்புக் வோனஸ் மொபைல் அப்ளிகேஷன் இயங்கும் விதம்:


இந்த அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, முதன் முதலில் இயககும்பொழுது உங்களுடைய கடவுச் சொல், பயனர் பெயர் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.


உடனேயே இந்த அப்ளிகேஷன் , உங்கள் பேஸ்புக் நண்பர்களை இரு குழுக்களாக பிரித்து காண்பிக்கும். வோனஜ் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி இலவச அழைப்புகளை மேற்கொள்பவர்களை ஒரு பிரிவாகவும், மற்றொரு பிரிவில் இன்ஸ்டன்ஸ் மேசேஜ் (Instant Message) சேவையை பயன்படுத்துபவர்களாகவும் காட்டும்.


பேச வேண்டிய நபர்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவர்களாக இருப்பவராயின் உடனடியாக அவர்களை நீங்கள் தொடர்புகொண்டு அழைக்கலாம். நீங்கள் அழைத்தவுடன் உங்களுடைய நண்பரின் முகப்பு படமும் அவரது ஸ்டேடஸ் செய்தியும் திரையில் தோன்றும். இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும்பொழுதும், உங்கள் நண்பர்கள் உங்களை அழைக்கும்பொழுது உங்களுக்கு அழைப்புச் சத்தம் கேட்கும்.


மிகச்சிறந்த இலவசமான இந்த அப்ளிகேஷன்களை நீங்கள் பின்வரும் வழிமுறைகளில் பெறலாம். 



1. ஐடியூன் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும். (இது iPhone, iPod touch பயன்படுத்துவபர்களுக்கு) CLICK


2. ஓனஜ் அப்ளிகேஷன் ஆன்ட்ராய்ட் லிப் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும் (இது ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு)  CLICK


குறிப்பு: இந்த அப்ளிகேஷன் மூலம் பேசுவது மட்டுமின்றி, எழுத்துகள், படங்கள் ஆகியவற்றையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். 


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top