.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 1 December 2013

மர்மத்தீவு ஒரு பார்வை!

நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென பேசிக்கொண்டிருக்கும் போதே மாயமாய் மறைந்து விட்டால் எப்படி இருக்கும் ? பயமும், வியப்பும், திகிலும், பிரம்மையும் கலந்த அந்த நிகழ்வை எப்படி விளக்க முடியும்.

அப்படி மனிதர்களை மாயமாய் மறையச் செய்யும் ஒரு தீவே இருந்தால் ? திடுக்கிட வைக்கிறது இந்த கேள்வி. கூடவே ஒரு நல்ல ஹாலிவுட் திகில் படத்தைப் பார்க்கும் பரபரப்பையும் தருகிறது.

கென்ய ருடால்ஃப் ஏரியில் இருக்கிறது ஒரு குட்டி தீவு. என்வையிட்டினெட் தீவு என அழைக்கப்படும் அந்த தீவின் பொருள் “திரும்ப முடியாது” என்பது தான் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.

ஒரு காலகட்டத்தில் நன்றாக, இயல்பாக இருந்த கிராமம் தான் அது. அங்கே இருந்த மக்கள் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என பல தொழில்களை செய்து வந்தனர்.

அவர்கள் அடிக்கடி தீவை விட்டு வெளியே வந்து நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து அவர்களுக்கும் மீன், விலங்குகள் போன்றவற்றை அளிப்பதும் வழக்கமாக இருந்தது.

திடீரென சில நாட்களாக தீவிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என நினைத்த மக்கள் அந்தத் தீவுக்குச் சென்று தகவல் அறிந்து வர விரும்பினார்கள்.

தீவுக்குள் சென்ற மக்கள் அதிர்ந்தனர். அங்கே குடிசைகள் எல்லாம் காலியாய் கிடந்தன. வேட்டையாடப்பட்ட விலங்குகளும், பிடிக்கப்பட்ட மீன்களும் அழுகிப் போய் கிடந்தன. ஆனால் மக்களின் சுவடுகள் கூட மிச்சமில்லை.

என்னவானார்கள் இவர்கள் ? எங்கே போனார்கள் ? எதுவும் தகவல் இல்லை ! பயந்து போன மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினர் தங்கள் இருப்பிடம் நோக்கி. அதன் பின் பறவைகளைத் தவிர யாரும் அந்த தீவில் தங்கள் நிழல்கள் விழ அனுமதிக்கவில்லை.

இப்போது அந்த இடம் சாபத்துக்குள்ளான, மர்மத் தீவாக இருக்கிறது.

அந்த தீவில் யாருமே தங்குவதில்லை, அங்கே தங்குபவர்கள் மாயமாகி விடுவார்கள் எனும் நம்பிக்கை தான் அதன் காரணம். சில கிலோமீட்டர் அகலமே உள்ள அந்த தீவு சபிக்கப்பட்ட தீவாக மக்களிடையே பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அங்கே அப்படி என்ன மர்மம் தான் இருக்கிறது என யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

1935 களில் மார்டின் ஷெஃப்லிஸ் மற்றும் பில் டேசன் இருவரும் விவியன் என்பவருடைய தலைமையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

அந்த தீவில் இருக்கும் ரகசியம் என்ன என்று பார்த்து விடுவோமே என்று கங்கணம் கட்டிக் கொண்டு அந்தத் தீவில் இருவரும் சென்றனர்.

நாட்கள் நகர்ந்தன. போனவர்கள் திரும்பவில்லை. பதினைந்து நாட்கள் பொறுமையுடன் காத்திருந்தவர்களை பயம் பிடித்துக் கொண்டது. உடனே விவியன் பாதுகாவலர் குழுவை அந்தத் தீவுக்கு அனுப்பினார்.

பாதுகாவலர் படை காணாமல் போன இருவரையும் தேடி தீவுக்குள் நுழைந்தது. அக்கு வேறு ஆணி வேறாக தீவை சல்லடை போட்டுத் தேடியும் இருவரும் அகப்படவேயில்லை !

ஆளே இல்லாத ஒரு அமானுஷ்யக் கிராமமாக அது அமைதிக்குள் உறைந்து கிடந்தது.

திடுக்கிட்ட விவியன் அரசு உதவியுடனும், வாகனங்களுடனும் தீவை மீண்டும் ஒருமுறை தலைகீழாய் புரட்டித் தேடினார். ஊஹூம். ஒன்றும் கிடைக்கவில்லை.

தேடப் போனவர்கள் திரும்பி வந்ததே பெரிய விஷயம் என்று பேசிக் கொண்டனர் உள்ளூர் மக்கள்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top