.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 3 December 2013

நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்யும் தந்தையைப் பார்த்தே அந்த இரண்டு சகோதரர்களும் வளர்ந்தார்கள். குடித்ததில் செலவானது போக மீதமிருந்தது தான் குடும்பச்செலவுக்கு. அது போதவில்லை என்பதால் தாயும் வேலைக்குப் போய் தன்னால் முடிந்ததை சம்பாதித்து வீட்டுக்குக் கொண்டு வந்து குடும்பத்தை சமாளித்தாள். சில சமயம் அவள் சம்பாதித்ததையும் அவள் கணவர் பிடுங்கிக் கொண்டு போய் குடித்து விட்டு வருவதுண்டு. வீட்டில் தினமும் சண்டை, தகராறு, அடி, உதை, அழுகை....


அந்த நிம்மதியற்ற சூழ்நிலையில் வளர்ந்த ஒரு சிறுவன் பிற்காலத்தில் தந்தையைப் போலவே குடிகாரனாக மாறி விட்டான். இப்படி ஆனது ஏன் என்று அவனைக் கேட்ட போது அவன் தன் இளமைக்கால வாழ்க்கையைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் வருத்தத்துடன் சொன்னான். "தினமும் நான் பார்த்து வளர்ந்த அந்த சூழ்நிலை என்னையும் இப்படி ஆக்கி விட்டது"


இன்னொரு சிறுவன் ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதித்து பணம் சேர்த்து அதை வைத்து தொழில் ஆரம்பித்து பிற்காலத்தில் மிகப்பெரிய தொழிலதிபரானான். அவன் வெற்றிக்குக் காரணம் கேட்ட போது அவனும் தன் இளமைக்கால வாழ்க்கையைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் சொன்னான். "எப்படியெல்லாம் இருந்து விடக் கூடாது என்பதற்கான உதாரணமாக அந்த சூழ்நிலைகள் இருந்தன. அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் சிறு வயதிலிருந்தே எனக்கு ஆழமாக இருந்தது...."


ஒரே விதமான அனுபவத்திலிருந்து இருவரும் இருவேறு படிப்பினைகள் பெற்றதைப் பாருங்கள். எதுவும் நாம் பார்க்கும் விதத்திற்கேற்ப மாறுகிறது. அதைப் பொறுத்தே அதனால் பலனடைகிறோம் அல்லது பாதிக்கப்படுகிறோம்.


ஆங்கிலத்தில் படித்த ஒரு அழகான கவிதையின் வரிகள் நினைவுக்கு வருகிறது.


"Two men looked out from prison bars
One saw mud, the other saw the stars"


சிறைக்கம்பிகளின் வழியே வெளியே பார்த்தனர் இரு கைதிகள். ஒருவன் சேற்றைப் பார்த்தான். இன்னொருவன் நட்சத்திரங்களைப் பார்த்தான். இருந்த இடம் ஒன்று தான். ஆனால் பார்வைகள் போன இடங்கள் வேறு. எதைப் பார்க்கிறோம் என்பதை இருக்கும் இடமும், சூழ்நிலையும் தீர்மானிப்பதில்லை. நாமே தீர்மானிக்கிறோம்.


இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாசிகளிடம் சிக்கி பலவித சித்திரவதைகளை அனுபவித்து உயிர் பிழைத்த எத்தனையோ பேர் போர் முடிவுக்கு வந்த பின்னும் அந்த நிகழ்ச்சிகளின் தாக்கத்தில் மன நோயாளிகளாக மாறி விட்டனர். சகஜ நிலைக்கு வர பலருக்கு கவுன்சலிங், மருந்துகள் தேவைப்பட்டனர். ஆனால் அதே சித்திரவதைகளை அனுபவித்த ஒரு சிலருக்கு அவை ஒரு பாடமாக அமைந்தன. சுதந்திர வாழ்க்கையே மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதையும் அதில் தேவையில்லாமல் கவலைகளில் மூழ்கி வாழ்வை அனுபவிக்க மறப்பது முட்டாள்தனம் என்பதையும் உணர்ந்தார்கள். அந்த நாட்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் பின் எந்த நாளும் நல்ல நாளே என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். சிலர் தங்கள் அனுபவங்களைப் புத்தகமாக எழுதி பெரும் பணம் சம்பாதித்தார்கள். ஒரே விதமான அனுபவங்கள் எத்தனை விதமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது பாருங்கள்.


எனவே நான் இப்படியாக மாற மற்றவர்கள் தான் காரணம், சூழ்நிலைகள் தான் காரணம் என்பது மிகப் பெரிய பொய். முன்பு சொன்ன குடிகாரத் தந்தையின் இரு மகன்கள் எதிர்மாறான இருவேறு நிலைகளை அடைய வைத்தது அவரவர் பண்புகளே. இரண்டாம் உலகப் போர்க்கைதிகளில் பலர் மன நோயாளிகளாக மாற, சிலர் பக்குவப்பட்டு மகிழ்ச்சியான மனிதர்களாக மாறியதும், சிலர் அதைப் பற்றி எழுதிப் பணம் பார்த்ததும் அந்த அனுபவங்களை அவர்கள் எடுத்துக் கொண்ட விதத்தினாலேயே. அவர்களை மட்டுமல்ல எவரையும் எதுவாகவும் ஆக்குவது அவரவர் பார்வைகளே.


நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top