.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 4 December 2013

சிகரட்டை காதலிக்கும் ஒரு நபரின் காதல் கடிதம்!


என் இதயத்தை கொள்ளைகொண்ட சிகரட்டே ....

உன் முன்னால் காதலன் எழுதும் கடைசி மடல் , உனக்கு கடிதமா என யோசிக்காதே .

நீயும் என் காதலிதான்

இதுவும் நிச்சயம் காதல்கடிதம்தான்

காதலியை அணைத்தபின் அனுபவிப்பேன்

உன்னை அனுபவித்து பின் அணைப்பேன் .

நீயும் என் காதலிதான் உன் வேலையும் இதயத்தில் நுழைவதுதானே .

நம் உறவும் காதலைப்போல் தானே துவங்கியது , நண்பர்களால் அறிமுகமானாய் , முதன்முதலில் நீ எனக்கு எப்போதாவது நண்பர்களின் உதவியோடு ஊருக்குள் மறைவாய் யாருமில்லா இடங்களிலே ,உன்னை முதன்முறை பார்க்கையில் உடனே பிடிக்கவில்லை உன்னுடனான தொடர்பு நண்பர்களினூடே தந்த கௌரவம் எனை மாற்றியதோ .

என் இதழ்களுடனான உன் முதல் சந்திப்பு அத்துனை இதமாய் இருந்திருக்கவில்லை , அதன் பின் இரண்டாம் முத்தம் இதமாய் மூன்றாம் முத்தம் சுகமாய் நான்கைந்தில் அடிமையாக்கினாய் , என் இதழுடனான உன் உறவு அதிகமாக , உன்னை சந்திக்கவே பல நாட்கள் என் நண்பர்களை சந்தித்திருக்கிறேன் தெரியுமா .

உன்னுடனான எனது தொடர்பு என் வீட்டில் பல நாள் தெரிந்து போய் என் தந்தையிடமும் தாயிடமும் எவ்வளவு அடி வாங்கியிருப்பேன் தெரியுமா , எல்லாம் உனக்காக! உன்னொடு என்னை என மாமன் பார்த்துவிட்டு அடித்த அடி எத்தனை வலித்தது தெரியுமா . எல்லாம் எதற்காக உனது உறவுக்காய் . காதலில் வலியும் வேதனையும் சகஜம் தானே .

நண்பர்களின் உதவியோடு உனை சந்தித்த அந்த பால்ய பருவம் கடந்து போய் நானே உன்னை சந்திக்க விழைந்தேன் . அத்தனிமையில் இனிமையாய் உன்னை என் உதடுகளின் மத்தியில் வைத்து பிடித்து ......... ஆனந்தம் . நண்பர்களுடன் பேசும் சமயங்களைவிட உன்னை தனிமையில் சந்திக்கையில் உன்னை அதிகம் விரும்பினேன் . எப்போதும் விரும்புவேன் .

காலம் ஓடியது , நம் உறவு பிரிக்க முடியாததும் , உடைக்க முடியாததுமாய் நானும் நீயும் பின்னி பிணைந்து என் உடலில் கலந்து உயிரிலும் கலந்து விட்டாய் .

இப்போதெல்லாம் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை என்பது போல எந்நேரமும் என் விரலிடுக்கில் , உதடிடுக்கில் என எப்போதும் காலை முதல் மாலைவரை உன்னை நினைக்காத நொடியில்லை . என் இதயத்தில் எந்த காதலியும் இத்தனை சீக்கிரம் பிடித்திடாத இடத்தை நீ பிடித்து விட்டாய் . இதயம் மட்டுமல்ல நுரையீரல்,கல்லீரல் ,கணையம் என எந்த காதலியும் அமர முடியாத இடத்திலெல்லாம் நீதான் நீ மட்டும்தான் . நீ காதலியை விடவும் உயர்ந்தவள் .

உன்னால் என் இதயத்தில் கோளாறு வருமாம் என் உயிருக்கே ஆபத்தாம் , அஞ்சமாட்டேன் இதற்கெல்லாம் , கேன்சர் என்றால் பயந்து விடுவேன் என்று நினைத்தாயோ , நம் உறவு அதையும் தாண்டி புனிதமானது . உனை பிரிந்து நான் எப்படி , சோறின்றி கூட பட்டினி கிடப்பேன் உன்னை பிரிந்து ஐயகோ நினைக்கவே அச்சமாக இருக்கிறதே .

நம் இணைபிரியா உறவை சிதைக்க அரசாங்கம் கூட முயல்கிறது , இதோ போட்டுவிட்டான் தடையுத்தரவு , என்ன கொடுமை கோல்டு பில்டரே!!....

பொது இடத்தில் உன்னை சந்திக்கத் தடையாம் , இனி உன்னை வீட்டில் மட்டுமே சந்திக்க வேண்டுமாம். இயலுமா , நாம் அப்படியா பழகியிருக்கிறோம் , என்றுமே நம் காதல் கள்ளக்காதல்தானே . அலுவலகத்தில் , பேருந்து நிறுத்தத்தில் , பொது இடத்தில் எங்கும் இனி நாம் சந்திக்க இயலாதாம் .

எவன் தடுத்தாலும் விடேன் , அந்த எமன் தடுத்தாலும் விடேன் , மறைவாய் உன்னை சந்திக்க ஆயிரம் இடமிருக்கையில் எனக்கென்ன கவலை என அடித்தேன் அடித்தேன் விடாமல் அடித்தேன் மறைவாய் சந்தில் பொந்தில் இண்டு இடுக்கு என யார் கண்ணிலும் படாமல் உனை அனுபவிக்கிறேன் , நிறைய நிறைய நிறைய நிறைய......

வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ ? என கவியரசர் பாடிச்சென்ற வரிகளும் பொய்யே , உனது சுவடுகள் நான் இறந்து மக்கி மண்ணாகும் வரை என் நெஞ்சுக்குள் நிலைத்திருக்கும் . நிக்கோடின் சுவடுகளாய் .. என் உயிர் பிரிந்தாலும் உனைப்பிரியேன் ;-)

ஆனால் ஒரு பத்து நாட்களாக என்னவோ தெரியல என்ன மாயமோ புரியல உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை , இறுமல் அதிகமாகி அதிகமாகி இதயமே வாய் வழியாய் வந்துவிடும் போலிருந்தது . டாக்டரிடம் கேட்டால் காசநோயாம் !!! அட கருமம் புடிச்ச பன்னாடை பரதேசி நாய்ங்களா ... கேன்சர்தானடா வரும்னு சொன்னீங்க தீடீர்னு இது வந்திருச்சுனு சொன்னேன் , அதெல்லாம் ஒத்துக்கமுடியாது னு சொன்னாலும் வந்தது வந்ததுதான் நொந்தது நொந்ததுதான் என்று இளையராஜா வாய்ஸில் பாடுகிறார் .

அடிப்பாவி உன்னை காதலிச்ச பாவத்துக்கு என் நெஞ்சத்தான் கிழிச்சி தொங்கவிட்டனுபாத்தா கொஞ்ச கொஞ்சமா என் என் கு.........கு.......கு............குட்டி நுரையீரலையுமில்ல காலிபண்ணிட்ட..

பிறகென்ன ... ம்ம் வந்தது வந்துதான் நொந்தது நொந்தது தான்........

எப்போதும் போல எல்லா காதல் கதைகளின் முடிவும் இதுதானே ரோமியோ போல் , அம்பிகாபதியைபோல அமரக்காதல்னா கடைசியில் காதலனுக்கு முடிவு சங்குதானேதானே..

இப்படிக்கு...

நெஞ்சு பஞ்சா போயி பஞ்சரான

பஞ்சாபகேசன் ( இப்பல்லாம் எல்லாரும் நான் இருமுறத பாத்து கஞ்சாபகேசன்னுதான் கூப்பிடறாங்க ... எல்லாம் உன்னாலே உன்னாலே , சங்கூதினப்பறம் இப்படிலாம் கடிதமெழுத முடியாது அதான் முன்னாடியே , சாகறதுக்கு முன்னாடி சமாதி கட்ற மாதிரி.... )

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top