ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன.
ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மவுனமாக இருக்கும்.
``நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள்!'' குதித்து குதித்து நடன மாடியபடி சொல்லியது குரங்கு.
``நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும் வாழ்கிறோம்! எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை!'' என்றது எலி.
``மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன்!'' பெருமிதம் பொங்கக் கூறியது வெட்டுக்கிளி.
``நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை!'' முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது.
``என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான்!'' குரங்கு சொல்லியது.
``ஆமாம்... ஆமாம்...!'' ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி.
``நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ள முடியும்'' என்றது எலி.
``எனக்கொரு யோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன?'' கேட்டது வெட்டுக்கிளி.
``போட்டி நடத்தலாம். ஆனால் நடுவர் யார்?'' சந்தேகம் எழுப்பியது எலி.
``நடுவராக நானிருக்கிறேன்!'' திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது.
``நீங்கள் எப்படி?'' ஆச் சரியப்பட்டது குரங்கு.
``நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். முயலை யும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என்று காகம் தன் முகவரி கூறியது.
``அப்படியே செய்கிறோம்...'' அனைத் தும் சேர்ந்து குரல் கொடுத்தன.
மறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தைத் தேடி போய்க் கொண்டு இருந்தன.
அப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. அதன் கால்களில் காயம் தெரிந்தது.
``எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான்!'' குருவி பல கீனமாக உதவி கேட்டது.
``நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அபசகுனமாக பேசாதே!'' கடுமையாக கூறியது குரங்கு.
குருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று விட்டன. முயல் குருவி அருகே தயங்கி நின்றது. பின்னர் அவசர அவசரமாக மருந்து தேடிக் காலில் வைத்து விட்டு அழகிப்போட்டிக்கு சென்றது.
அழகிப் போட்டி தொடங்கியது. குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின.
``அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன். இனி உங்கள் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன்!'' காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.
அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.
``முயல்தான் அழகு ராணி! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன்! குருவி என் நண்பன்தான்! ஒரு ஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது. அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது! உதவும் நல்ல மனசு உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்!'' காகம் கூறியதும் எலி, வெட்டுக்கிளி, குரங்கு ஆகியவற்றின் முகங்கள் அஷ்டகோணலாகின.
0 comments: