.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 21 September 2013

ஜீவார்மித கரைசலில் ஜொலிக்குது "பப்பாளி, திராட்சை'




ஜீவார்மித கரைசல்... அக்னி அஸ்திரம்... என இயற்கை உரமிருக்க... செயற்கைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார், திண்டுக்கல் காந்திகிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன். காந்திகிராமம் செட்டியபட்டியில் மலையடிவாரத்தை ஒட்டி செழித்திருக்கிறது, இவரது தோட்டம். மதுரையில் ஜவுளி பிசினஸ் செய்தாலும், தினமும் தோட்டத்தைப் பார்க்க தவறுவதில்லை. 21 ஏக்கர் பரந்து விரிந்த பூமியில் பப்பாளி, திராட்சை, சப்போட்டா, மா, கொய்யா ரகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
தோட்டத்திலேயே கிடைமாடுகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்கி, அவற்றின் சாணத்தை சேகரிக்கிறேன். மாடுகளுக்காக சிறிய குளம் அமைத்துள்ளேன். மலைப்பகுதியில் மேய்ச்சல் முடிந்து, இரவில் இங்கே இளைப்பாறும். மாட்டுச்சாணம், கோமியம், உளுந்து பயறு, நாட்டு சர்க்கரையுடன் கரைசலை ஊற்றப் போகும் இடத்தின் மண்ணையும் கலந்து 48 மணி நேரம் ஊறவைப்பேன். இதுதான் ஜீவார்மித கரைசல். மண்ணையும், என்னையும் வாழவைக்கிறது.


புளித்த தயிரை தண்ணீரில் கரைத்து தெளித்தால், செடிகளுக்கு நல்ல கிரியாஊக்கியாக செயல்படுகிறது. பூச்சி தாக்குதல் இருந்தால் அக்னி அஸ்திரம் இருக்கவே இருக்கிறது. இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் பொருட்களை அரைத்து தண்ணீரில் கரைத்து வடிகட்டி செடிகளுக்கு தெளிப்பேன். திராட்சை கொடிகளுக்கு கீழே, கடலை சாகுபடி செய்துள்ளேன். அதேபோல, தக்கைப்பூண்டு, கொழிஞ்சி, பசுந்தாள் உரங்களை பயிரிட்டு, அவற்றை அப்படியே பறித்து போட்டால், உரமாகிறது.
திராட்சையில் பழச் சீசனில் இலைகள் உதிரும். அவற்றை அப்படியே மண்ணில் மட்கச் செய்து உரமாக்கி விடுவேன். திராட்சை செடிக்கு பசுந்தாளும், பசுந்தாளுக்கு திராட்சை இலைகளும் நல்ல உரம் தான். வாழையில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க உள்ளேன். எல்லாமே நாட்டு ரகம் தான். 


மலையில் மழைபெய்தால் அங்கிருந்து வரும் நீர், என் தோட்டத்திற்கு தான் முதலில் பாய்கிறது. சுத்தமான தண்ணீராக இருப்பதால், தோட்டத்திற்கு வளம் சேர்க்கிறது. என் தோட்டத்தின் மண்ணெல்லாம் மெத்தை போன்று மிருதுவாக இருக்கும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை மட்டுமே நம்பியிருப்பதால், மண்ணும் மிருதுவாகி விட்டது. தனியாக மண்புழு உரம் இடுவதில்லை. தோட்டத்து மண்ணைத் தோன்றினால் பொது பொதுவென்று மண்புழுக்கள் உதிரும். மண் நன்றாக இருந்தால் தானே, புழுக்கள் உயிரோடு இருக்கும். மண்ணும் வளமாக, உயிரோடு இருப்பதால் திராட்சையின் தரம் நன்றாக இருக்கிறது. இதுவே, ஏற்றுமதிக்கான வாய்ப்பையும் பெற்றுத் தந்தது என்கிறார், ஜானகிராமன்.

இவரிடம் பேச: 91500 09998.

Click Here

1 comments:

Unknown said...

இயற்கையே உன்னை வணங்குகிறேன்

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top