தென்னை சாகுபடியில் ஏற்படும் மகசூல் குறைவிற்கு பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுவாக, தென்னை மரங்களை கருந்தலைப்புழு, காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, மரப்பட்டைத் துளைப்பான் என 14-க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் தாக்குகின்றன. இவற்றில் கருந்தலைப் புழுக்கள் அதிக சேதத்தை விளைவிக்கின்றன. தென்னையின் அனைத்து வயதுடைய மரங்களையும் இந்தப் புழுக்கள் தாக்குகின்றன. வருடம் முழுக்க இதன் தாக்குதல் இருந்தாலும், கோடைக்கலங்களில் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
தென்னைமரக் கொண்டையின் கீழ்ப்புற இலைப்பரப்பில், காய்ந்த திட்டுக்கள் காணப்படுவது கருந்தலைப்புழு தாக்குதலின் அறிகுறிகளாகும். கருந்தலைப் புழுக்கள், தென்னை ஓலைகளின் அடிப்பரப்பில் நூலாம்படையினை உருவாக்கி, அதனுள் இருந்துகொண்டே, பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். மரத்தின் கொண்டை மேற்பகுதியில் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர, மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய்விடும். அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள், எரிந்து தீய்ந்து போனது போன்று காட்சியளிக்கும். இதனால், தென்னை மரங்களில் ஒளிச்சேர்க்கை தடைப்பட்டு, மகசூல் குறைந்து விடுகிறது. தகுந்த நேரத்தில் கவனிக்காமல் விட்டால், நாளடைவில் மரம் பட்டுப்போய் விடும்.
பொதுவாக, கருந்தலைப் புழுக்களை அழிக்க, ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது வழக்கம். இதனால், மண் வளம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், மண்புழு, நத்தை, ஊசித்தட்டான் போன்ற நன்மை தரும் பூச்சியினங்களும் அழிந்து விடுகின்றன.
கருந்தலைப் புழுக்களை அழிக்க, பிரிக்கானிட் எனும் ஒட்டுண்ணிகளைக் கண்டுபிடித்துள்ளது, கோவை மாவட்டம் ஆழியார் நகரில் உள்ள, தென்னை ஆராய்ச்சி நிலையம். இது குறித்து, தென்னை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் முனைவர். ந.ஷோபா கூறியதாவது:
சேமிப்புக் கிடங்குகளில் உள்ள அரிசி, நெல் மணிகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் புழுக்களைச் சேகரித்து, அதைப் பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி, அதிலிருந்து பிரிக்கானிட் ஒட்டுண்ணிகளை உருவாக்கி, தென்னை விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம். பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த ஒட்டுண்ணிகள், மனிதனை துன்புறுத்தாது. பிரிக்கானிட் ஒட்டுண்ணிகளை, 21 நாட்களுக்கு ஒருமுறை, ஏக்கருக்கு 2,100 ஒட்டுண்ணிகள் வீதம் (ஒரு மரத்திற்கு 30 ஒட்டுண்ணிகள்) தென்னந்தோப்புகளில் புழக்கத்தில் விட்டு, கருந்தலைப்புழுவின் தாக்கத்தைக் கணிசமாகக் கட்டுப்படுத்தலாம்.
மேலும், பிரிக்கானிட் ஒட்டுண்ணிகள், கருந்தழைப் புழுக்களைக் கொன்று, அதன் மீது 15-20 முட்டையிடுகின்றன. அதிலிருந்து வெளியேறும் புழுக்கள், 7-11 நாட்களில் ஒட்டுண்ணியாக மாறிவிடுகின்றன. நாளடைவில் தோப்பில் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, கருந்தலைப் புழுக்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விடும்.
100 பிரிக்கானிக் ஒட்டுண்ணிகள் கொண்ட ஒரு பாக்கெட், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுண்ணிகள் தேவைப்படும் விவசாயிகள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்" என்கிறார்.
தொடர்புக்கு: 04253 288722
0 comments: