இயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையின் கொடையான வேம்பின் பயன்பாடு குறித்து நெல் ஆராய்ச்சி மையம் விளக்கம் அளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக் கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் நன்மை செய்யும் பூச்சிகளான தட்டான், ஊசித் தட்டான், பொறி வண்டு, தரை வண்டு, சிலந்திகள், குளவிகள், தேனீக்கள் போன்றவை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூல்நிலைகளையும் பாதிக்கிறது.
பூச்சிக் கொல்லி மருந்துகளை திரும்பத் திரும்ப தெளிப்பதனால் பூச்சிகளானது பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத் தன்மையை உருவாக்கி கொள்கின்றன.
இது மட்டுமல்லாமல், நாம் உண்ணும் உணவு தானியங்களிலும் காய்கறிகள் மற்றும் பழங்களிலும் எஞ்சிய நஞ்சானது தேங்கி விடுகிறது. இதனால் மனிதர்களுக்கும், அவர்களைச் சார்ந்த விலங்கினங்களும், பறவைகளும் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
உலகில் மிக அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட மரங்களில் வேம்பு முதன்மையானது. இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர். வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இவை பூச்சிகள் பயிர்களை உண்பதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் பூச்சிகள் முட்டையிடுவதையும், முட்டையில் இருந்து இளம் பூச்சிகள் வெளியே வருவதையும் தடுக்கின்றன. பூச்சிகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.
இவை அந்துப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள், கூன் வண்டுகள், ஈக்கள், எறும்புகள், குளவிகள் நாவாய்
பூச்சிகள், வெட்டுக் கிளிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கரையான்கள் போன்ற பூச்சிகளின் வளர்ச்சி மாற்றத்தைப் பாதிக்கின்றன. மேலும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு நோய்களைப் பரப்பக்கூடிய ஈக்கள், உண்ணிகள், பேன்கள் மற்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்துவதில் அசாடிராக்டின் பயன்படுத்தப்படுகிறது.
விவசாயப் பயிர்கள்: நெற்பயிரில் வேப்பெண்ணெய் 1 சதம் (10 மிலி-லிட்டர்) அல்லது வேப்பங் கொட்டைச் சாறு 5 சத கரைசலை தெளிக்கும்போது இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் குறைகிறது. வேப்பங் கொட்டைச்சாறு 5 சத கரைசலைத் தெளிப்பதால் புகையானின் வளர்ச்சி பருவமானது பாதிக்கப்படுகிறது. மேலும் அதன் உருவம் மற்றும் எடையிலும் மாற்றம் ஏற்படுகிறது. வேப்பெண்ணெய் (3 சதம்) நெற்பயிரை கதிர் நாவாய்ப் பூச்சிகள் தாக்குதல் இருந்து பாதுகாக்கிறது.
கொண்டைக் கடலையில் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது வேப்பெண்ணெய் (5 சதம்) தெளிப்பதால் காய்த் துளைப்பானின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது. அசாடிராக்டின் கலந்த மருந்தை தெளிக்கும்போது காய்த்துளைப்பானின் தாக்குதலாவது 90 சதவீதம் வரை குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேப்பங்கொட்டைச்சாறு துவரையில் காய்த் துளைப்பான்களையும், தட்டைப் பயிரில் அசுவினியின் தாக்குதலையும் குறைக்கிறது.
நிலக்கடலையில் இலைத் துளைப்பானைக் கட்டுப்படுத்துவதில் வேம்பு சார்ந்த மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேப்பெண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்கப்பட்ட இலைகளை தொடர்ந்து உண்பதால் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழுவானது குறைந்து விடுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றன.
நன்மைகள்: வேம்பு மற்றும் வேம்பு சார்ந்த பொருட்களால் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. வேம்பானது பூச்சிகளை கொல்வதில்லை. மாறாக பூச்சிகளின் வளர்ச்சி பருவத்தைப் பாதிக்கின்றன. இவை நன்மை செய்யும் பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் தேனீக்களை எதுவும் செய்வதில்லை. வேம்பு சார்ந்த பொருள்களுக்கு பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக் கொல்வதில்லை. இதனை செயற்கையாகத் தயாரிக்கப்படும் மருந்துகளுடன் கலந்தும் தெளிக்கலாம்.
வேம்பானது எளிதில் கிடைக்கக் கூடியது மற்றும் வேம்பு சார்ந்த மருந்துகளின் விலையும் மிகவும் குறைவு.
எனவே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் வேம்பு மற்றும் அதனைச் சார்ந்த மருந்துகளைப் பயன்படுத்தி இயற்கைக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல், நன்மை செய்யும் பூச்சிகளையும் பாதிக்காமல் இயற்கையுடன் ஒருங்கிணைந்து பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக லாபம் ஈட்டலாம் என்றார் அவர்.
0 comments: