இதயம் இயற்கையாக நின்று போனாலும், தொடர்ந்து சீராக இயங்க வைக்கும் சாதனங்களை இன்றைய மருத்துவ அறிவியல் கொண்டுள்ளது. அவற்றுள் இன்றியமையாதது தவிர்க்க முடியாதது, பேஸ் மேக்கர். சரசரியாக ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது, ஒரு நிமிடத்துக்கு 70 முதல் 100 வரை இருக்க வேண்டும். இதற்கு மேலே போனாலோ அல்லது குறைந்தாலோ ஆபத்து தான். இது போன்ற நிலையற்ற இதயத்துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவியைக் கண்டுபிடித்த கதை சுவாரஸியமானது.
1952ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த வில்சன் கிரேட்பேட்ச் என்ற பொறியாளர், இதயத் துடிப்புகளைப் பதிவு செய்து மருத்துவருக்கு தெரிவிக்கும் கருவியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். வெற்றிகரமாக ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்த போது, ஒருநாள் தவறான ரெசிஸ்டர் வகையை தனது கருவிக்குள் பொருத்தி, அதை கவனிக்காமல் இயக்கினார். உடனே அவரது கருவி முன்பு போல செயல்படாமல் வித்தியாசமாக செயல்படத் தொடங்கியது. அமைதியாக இருந்து, மீண்டும் துடிப்புகளைப் பதிவு செய்து, மீண்டும் அமைதியாக இருந்து செயல்பட்டது.
இந்த வித்தியாசத்தால் குழப்பமடைந்த வில்சன் விலங்குகளுக்கும், அதன் பின் மனிதர்களுக்கும் இந்த கருவியை வைத்து சோதனை செய்தார். சராசரிக்கும் அதிகமாக அல்லது குறைவாக இதயத் துடிப்பைக் கொண்டவர்களின் இதயம், இந்த கருவியின் மூலம் சீராக துடிப்பதைக் கண்டறிந்தார்.
இதன் பின் பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு, மார்புப் பகுதியில் பொருத்தப்படும் மிகச் சிறிய பேஸ்மேக்கர் கருவி கொண்டுவரப்பட்டது. தற்போது டிஜிட்டல் பேஸ்மேக்கர் கருவி பலரது வாழ்நாளை நீட்டித்துக் கொண்டிருக்கிறது.
0 comments: