.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சுற்றுலாத்தலங்கள். Show all posts
Showing posts with label சுற்றுலாத்தலங்கள். Show all posts

Saturday 12 October 2013

வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம் - சுற்றுலாத்தலங்கள்!

     வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம்

வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம்
சென்னை அருகே உள்ள வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம். கல்லிலே கலைவண்ணம் கண்டபுரம். பல்லவர்கால துறைமுக நகரம். இங்குள்ள புடைப்புச்சிற்பங்களும், கோவில்களும் உலகப்புகழ் பெற்றவை. தெய்வங்களின் உருவங்கள், புராணக்கதை காட்சிகள், சமுதாய நிகழ்வுகள் இங்கு சிற்பங்களாக சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.
கடற்கரை கோவில்:
மாமல்லபுரம் என்றவுடனேயே அலைகள் தொட்டுச் செல்லும் கடற்கரை கோவில்தான் முதலில் நினைவுக்கு வரும். இது இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.
பஞ்ச ரதம்:
பஞ்ச ரதம் என்றழைக்கப்படும் ஐந்து ரதங்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. முதலாம் மகேந்திரவர்மன், அவரது மகன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தைச் சேர்ந்தவை. நிஜத்தேர் போன்று காணப்படும் கோவில் வடிவிலான இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டவை. இவற்றுக்கு தர்மராஜ ரதம், பீம ரதம், திரௌபதி ரதம், நகுல- சகாதேவ ரதம் என பஞ்ச பாண்டவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தர்மராஜ ரதத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், அழகும் ஆச்சரியமும் கலந்தது. கோவில்களின் மாதிரிக்காக பஞ்ச ரதங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அர்ச்சுனன் தபசு:
சுமார் 30மீட்டர் உயரம், சுமார் 60மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்-படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எல பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டிக்கலாம் என தெரிகிறது. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.

மகிஷாசுரமர்த்தினி சிற்பம்:
கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபம்.
இவை தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய ஆச்சரியங்கள் கொண்டவை. இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984ல் யுனெஸ்கோ அறிவித்தது.
எப்படிப் போகலாம்?
சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ரயிலில் வருவோர் செங்கல்பட்டில் இறங்கி விட்டால் அங்கிருந்து 30கி.மீ தூர பயணம்தான். சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது. 

Friday 11 October 2013

சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்' -சுற்றுலாத்தலங்கள்!


      சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'
 
கலகலாவல்லவர்களான சாளுக்கியர் கட்டடக்கலையையும் விட்டு வைக்கவில்லை என உணர்த்தும் இடம் 'பட்டாடகல்'. கர்நாடகத்தின் மாலப்பிரபா ஆற்றங்கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களை தாங்கி நிற்கும் நகரம். இங்கு கலைநயத்துடன் சாளுக்கியர் எழுப்பிய 10ஆலயங்களை உலக பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ 1987-ல் அறிவித்தது. இவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. சாளுக்கிய மன்னர்களின் முடிசூட்டு வைபவமும் இங்கு நடந்திருப்பது இன்னொரு சிறப்பு.
 
விருபாக்ஷர் ஆலயம்:
 
சாளுக்கிய பேரரசி லோகமகாதேவி அமைத்த ஆலயம் இது. 'லோகேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைக்கப்படுகிறது. தனது கணவர் இரண்டாம் விக்ரமாதித்தன் பல்லவர்களை வென்றதன் நினைவாக இதை கட்டியிருக்கிறார். காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தை மாதிரியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டதாக கூறப்-படுகிறது. லிங்கோத்பவர், நடராஜர், உக்கிர நரமிம்மர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
 
சங்கமேஸ்வரர் ஆலயம்:
 
'விஜயேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைக்கப்படும் சங்கமேஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சாளுக்கிய மன்னர் விஜயாதித்யா சத்யஸ்ரேயா. இந்த ஆலயத்தில் திராவிட கட்டடக்கலை மிளிர்கிறது. உக்கிர நரசிம்மர், நடராஜர் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிரதான கோபுரம் மூன்று அடுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
 
மல்லிகார்ஜுனா ஆலயம்:
 
விருபாக்ஷர் ஆலயத்தின் சிறிய வடிவம்தான் மல்லிகார்ஜுனா ஆலயம். விருபாக்ஷர் ஆலயம் கட்டப்பட்ட புதிதிலேயே இதுவும் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
 
காட சித்தேஸ்வரர், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயங்கள்:
 
இவை இரண்டுமே சம காலத்தில் கட்டப்பட்டவை. காட சித்தேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் திரிசூலம் ஏந்திய சிவன் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.
 
பாபநாதர் ஆலயம்:
 
ராமாயண, மகாபாரத காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்கள் பாபநாதர் ஆலயத்தில் நிறைய உள்ளன. இதே போல கல்கநாதா ஆலயம், ஜெயின் ஆலயம், நாகநாதர் ஆலயம், மகா குட்டேஸ்வரர் ஆலயம் ஆகியவையும் பல வரலாறுகளை உணர்த்தி வருகின்றன.
 
எப்படிப் போகலாம்?
 
பெங்களூரில் இருந்து சுமார் 495 கி.மீ தொலைவிலும், படாமியில் இருந்து 22 கி.மீ தொலைவிலும் பட்டாடகல் அமைந்துள்ளது. சுமார் 24கி.மீ தொலைவில் படாமியில் ரயில் நிலையம் இருக்கிறது. பெங்களூரில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.   

பட்டாடகல்லில் ஆண்டுதோறும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் சாளுக்யா உற்சவம் என்ற பெயரில் மூன்று நாட்கள் நாட்டியவிழா நடத்தப்படுகிறது. வண்ணமயமான இவ்விழாவை வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஆலயங்களின் பின்னணியில் பார்த்து ரசிப்பது பரவசம் தரக்கூடியது.
 
 

Thursday 10 October 2013

'மனைவி கட்டிய தாஜ்மஹால்' -சுற்றுலாத்தலங்கள்!



      'மனைவி கட்டிய தாஜ்மஹால்'

 'மனைவி கட்டிய தாஜ்மஹால்'
காதலும்,கலைரசனையும் மொகலாயர்களின் உணர்வில் ஊறியது போலும். மனைவி மீது கொண்ட காதலால், அவரை அடக்கம் செய்த இடத்தில் பளிங்கு மாளிகை எழுப்பினார் ஷாஜகான். அது, தாஜ்மஹால்.
 அன்புக்கணவர் ஹுமாயுன் நினைவாக, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கலையநயமிக்க மாளிகை ஒன்றை எழுப்பினார் ஹுமாயுனின் மனைவி ஹமீதாபானு பேகம். அது, ஹுமாயுன் கல்லறை (Humayun's Tomb). டெல்லியில் கிழக்கு நிஜாமுதீன் பகுதியில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் ஹுமாயுன் கல்லறைதான் இந்தியாவில் மொகலாயர் கட்டிய கலை ரசனைமிக்க முதல் கட்டடம். ஆம். இது மனைவி கட்டிய தாஜ்மஹால்.
 
ஹுமாயுன் என்கிற நஸ்ருதீன் ஹுமாயுன். பாபரின் புதல்வர். அக்பரின் தந்தை. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வடஇந்தியப் பகுதிகளை ஆட்சி செய்தவர். கி.பி. 1530- 40வரையிலும் 1555- 56வரையிலும் ஹுமாயுன் ஆட்சி நடந்தது. 1556ல் தனது நூலகத்தின் படிகளில் இருந்து தவறி விழுந்து எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார்.
 
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மனைவி ஹமீதாபானு பேகம் விருப்பப்படி கட்டடம் எழுப்பப்பட்டது. இதற்காக பாரசீக கட்டடக்கலை நிபுணர்களான சையத் முகமது, அவரது தந்தை மிராக் கியாதுதீன் ஆகியோரை ஆப்கானிஸ்தான் ஹெரத் நகரில் பிரத்யேகமாக வரவழைத்துள்ளனர். சுமார் 8ஆண்டுகளாக கட்டடப்பணி நடந்துள்ளது. சதுரவடிவிலான அழகான நந்தவனங்கள், நீரோடைகள், நடுவே மாளிகை வடிவத்தில் நினைவிடம் என பாரசீக பாணியில் கட்டி முடிக்கப்பட்டது. செக்கச்சிவந்த சிவப்பு கற்கள், பளபளக்கும் பளிங்கு கற்கள் கலந்து உருவாக்கப்பட்ட இந்த கட்டடம் இன்றளவும் அதே அழகுடன் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது.
 
இதை கணவர் ஹுமாயுன் நினைவாக கட்டுவதற்கு உத்தரவிட்ட ஹமீதாபானு பேகம் இறந்தபிறகு அவரது உடலும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது. தவிர, டெல்லியை ஆண்ட கடைசி மொகலாய மன்னரான இரண்டாம் பகதூர்ஷா உள்ளிட்ட பல மன்னர்களின் கல்லறைகளும் இங்குள்ளன. 1857-ம் ஆண்டில் நடைபெற்ற கலகத்தின் போது இரண்டாம் பகதூர்ஷா இங்கே மறைந்திருந்ததாகவும், அவரை லெப்டினென்ட் ஹாட்சன் இங்கிருந்துதான் பிடித்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
வரலாற்று நினைவுகளையும் வனப்புகளையும் தாங்கி நிற்கும் ஹுமாயுன் கல்லறை, 1993ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
 
எப்படிச் செல்வது?
 
டெல்லியிலேயே இது அமைந்துள்ளதால் எங்கிருந்தும் எளிதாக சென்றடையலாம். நல்ல சாலை வசதி உள்ளது. பிற பகுதிகளில் இருந்து நிஜாமுதீனுக்கு ரயில் வசதி இருக்கிறது. டெல்லியில் சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ளது.

Tuesday 8 October 2013

காதல் கோவில் 'கஜுரஹோ' - சுற்றுலாத்தலங்கள்!



     காதல் கோவில் 'கஜுரஹோ'

காதல் கோவில் 'கஜுரஹோ'
கலைநயத்துடன் எழுந்து நிற்கும் கோவில்களுக்கும் காம விளையாட்டுக்களைச் சித்தரிக்கும் சிற்பங்களுக்கும் பெயர்பெற்றது 'கஜுரஹோ'. இங்குள்ள ஆயிரக்கணக்கான சிற்பங்களில் வெறும் பத்து சதவீதமே காமத்தைச் சித்தரிப்பவை. ஆனால், அத்தனையும் 'பளிச் பளிச்' ரகங்கள்.

'காதலையும் காமத்தையும் தெரிந்து கொள்' என்கிற ரீதியில் உருவாக்கப்பட்ட கஜுரஹோ சிற்பங்கள், கி.பி.9- கி.பி.13ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. மத்தியப் பிரதேச மாநிலம் சாட்டர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கஜுரஹோவின் பழைய பெயர் கர்ஜுரவஹாகா என்பதாகும். கர்ஜுர் என்றால் சமஸ்கிருதத்தில் ஈச்சம்பழம் என அர்த்தமாம். அப்போது, ஈச்ச மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால், கர்ஜுரவஹாகா என்றழைக்கப்பட்டு பின்னர் கஜுரஹோ என மருவியதாக வரலாறு.

ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 13ம் நூற்றாண்டு வரை மத்திய இந்தியாவை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், சாந்தலர்கள் எனப்படும் ராஜபுத்திரர்கள். இவர்களில் மன்னர் வித்யாதர், கஜினி முகமதுவை எதிர்த்து நின்றவர். வித்யாதருக்கு, வீரத்தைப் போல கலைரசனையும் அதிகம் போல. கஜுரஹோ கோவில்களுக்கும் சிற்பங்களுக்கும் முக்கிய காரணகர்த்தா இவர்தான் என கருதப்படுகிறது. கஜுரஹோ கலைப்பொக்கிஷங்களை உருவாக்க மன்னர்கள் 100ஆண்டுகள் செலவிட்டனராம்.

இங்கு கட்டப்பட்ட 80க்கும் மேற்பட்ட கோவில்களில், தற்போது எஞ்சியிருப்பவை 22கோவில்களே. எட்டு சதுர மைல் பரப்பளவில் விரிந்து எழுந்து நிற்கும் கோவில்களை மேற்குப் பகுதி கோவில்கள், கிழக்குப் பகுதி கோவில்கள், தெற்குப் பகுதி கோவில்கள் என மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் தேவிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை.

இங்குள்ள லட்சுமணா கோவில் பிரசித்தம். விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவிலில் காணப்படும் 'வைகுந்த விஷ்ணு' உருவம் பரவசம் தரக்கூடியது. கோவிலின் வெளிப் பிரகாரத்தில் 600க்கும் மேற்பட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.
இதே போல் வராஹா கோவிலும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள வீணையுடன் காட்சி அளிக்கும் சரஸ்வதி, ஒன்பது கிரகங்களின் உருவங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், கண்டரிய மகாதேவா கோவில், சௌன்ஸாத் யோகி கோவில், விஸ்வநாத் கோவில் போன்றவையும் முக்கியமானவை.
கோவில்களுக்குள் பக்தி மணம் வீசும் தெய்வ ஓவியங்கள், சிற்பங்கள் நிறைய உள்ளன. காதல் சிற்பங்கள் அனைத்தும் கோவில்களின் வெளிச்சுவர்களில் மட்டுமே என்பதும் இங்கு இன்னொரு சிறப்பு. காதலைப் பற்றித் தெரியாதவர் கூட கஜுரஹோ சென்று வந்தால் காதல் மன்னராகி விடுவர் என்றும் கூட வேடிக்கையாக சொல்லப்படுவது உண்டு. கஜுரஹோ கலைச் சின்னங்களை உலக பண்பாட்டுச் செல்வமாக 1986ல் யுனெஸ்கோ அறிவித்தது.

எப்போது செல்லலாம்? எப்படிச் செல்லலாம்?
அக்டோபர்- ஏப்ரல் மாதங்கள், கஜுரஹோ செல்ல உகந்த மாதங்கள் ஆகும். மஹா சிவராத்திரியன்று இங்கு நடக்கும் சிவ- பார்வதி கல்யாணம் சிறப்பு வாய்ந்தது. பிப்ரவரி- மார்ச் மாதத்தில் இசை, நாட்டிய விழா நடத்தப்படுகிறது. இதில் பல பகுதிகளில் இருந்தும் இசை, நாட்டிய ரசிகர்கள் திரளாக பங்கேற்கிறார்கள். கஜுரஹோவில் தினமும் மாலையில் ஒளி, ஒலி காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் கஜுரஹோவின் சிறப்பு பற்றி ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுமார் ஒருமணி நேரம் விளக்கம் அளிக்கின்றனர்.
டெல்லி, ஆக்ரா, வாரணாசி, காத்மண்டு ஆகிய இடங்களில் இருந்து கஜுரஹோவுக்கு தினசரி விமானப் போக்குவரத்து உள்ளது. மஹோபா, ஹர்பல்பூர் ஆகியவை கஜுரஹோவுக்கு அருகில் உள்ள ரயில்நிலையங்கள். மும்பை, டெல்லி, சென்னையில் இருந்து வருபவர்களுக்கு ஜான்சி ரயில்நிலையம் வசதியானது. ஜான்சியில் இருந்து கஜுரஹோ சுமார் 175 கி.மீ தொலைவில் உள்ளது.

Monday 7 October 2013

இயற்கை எழில் ததும்பும் லட்ச தீவுகள் - சுற்றுலாத்தலங்கள்!



இயற்கை எழில் ததும்பும் லட்ச தீவுகள்
 இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக உள்ள லட்சதீவுகள், அரபிக்கடலில், கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் 36 தீவுகளை கொண்ட எழிமிகு தீவுக் கூட்டம் தான் இலட்சத்தீவுகள் ஆகும். இத்தீவுகூட்டமானது பல்லவ அரசுக்குட்பட்டு இருந்தது என்பதை ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவகால
கல்வெட்டில் ''தீப லக்ஷம்'' என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து அரியலாம்.இத்தீவின் தலைநகரம் காவரத்தி. காவரத்தி, மினிக்கோய், அமினி ஆகிய தீவுகள் இத்தீவுக்கூட்டங்களில் முக்குஇய தீவுகளாகும்.
 
 
அகத்தி தீவு:
 
லட்ச தீவுகளின் நுழைவாயிலாக  அமைந்திருப்பது அகத்தி தீவு.  சுமார் 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்தீவு எவ்வித வணிக சந்தடிகள் இல்லாமல் இயற்கையின் பரிசுத்தத்தை பிரதிபலித்துக் கொண்டு காண்பவரை கவரும்படியுள்ளதோடு கோடை சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது. இந்த அகத்தி தீவில்தான் உள்நாட்டு விமானநிலையம் அமைந்துள்ளது.உலகிலேயே ‘ட்யூனா’ மீன் அதிகம் பிடிபடும் இடம் இந்த அகத்தி தீவு. அது மட்டுமின்றி ஸ்கூபா டைவிங், ஸ்நார்க்கெலிங் பொழுது போக்கு அம்சங்கள் இங்கு உள்ளன. மேலும் இத்தீவின் கடல் உணவுகளின் சுவை மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும் வகையிலிருக்கும். இத்தீவில் மது அருந்த அனுமதியில்லை என்பது குற்ப்பிடத்தக்கதாக்கும்.
 
 
அமினி தீவு:
 
முட்டை வடிவுல் சிறியதாக இருக்கும் இத்தீவானது வெறும் 3 கிலோமீட்டர் நீளமும், 1 கிலோ மீட்டர் அகலமும்
கொண்டு அமிந்துள்ளது. இத்தீவானது எந்த ஒரு ஆரவரமும் இன்றி நிசப்தமாக இருப்பது மனதிற்கு மிகவும்
இதமாக இருக்கும், இங்கு சூரியன் அஸ்தமிக்கும் காட்சியினை இங்குள்ள விடுதிகள் அமைத்துள்ள செயற்கை
மரப்பொருட்களால் அமைக்கப்பட்ட தளங்களில் அமர்ந்து ரசிக்கலாம். அகத்தி தீவிலிருந்து படகின் மூலம் இந்து
அமினி தீவிற்கு எளிதாக வந்து சேரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பங்காரம் தீவு:
 
ழகிய கடற்கரைப் பகுதிகளோடு 120 ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்போடு அமைந்துள்ள ஒர் எழிழ்மிகு தீவு
பங்காரம் தீவு. இங்கு கடல்வால் உயிரினங்களோடு நிலவாழ் உயிரினங்களும் வசிக்கின்றன. ஸ்கூபா டைவிங்,
ஸ்நார்க்கெலிங் போன்ற கடல்மூழ்கு நீச்சல் மூலம் நீருக்கடியில் உள்ள பலவிதமான உயிரினங்கள்,
பவளப்பாறைகளை இங்கு காணலாம். அகத்தி தீவிலிருந்து படகு மூலமாகவோ அல்லது ஹெலிகாப்ட்டர்
மூலமாகவோ இத்தீவிற்கு செல்ல முடியும். இலட்சத்தீவுகளில் மது அருந்த அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே தீவு பங்காரம் தீவு மட்டும்தான்.
 
 
மாலிகு தீவு:
 
ட்சத்தீவு பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள தீவுதான் மாலிகு தீவு என்று அழைக்கப்படும் மினிக்காய்
தீவு ஆகும். 1976 ஆம் ஆண்டு மாலத்தீவும்-இந்தியாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் இப்படி இத்தீவானது
இந்தியாவிற்கு சொந்தமானது. 10.கிலோமீட்டர் நீளமும் 1 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த
மினிக்காய்த்தீவின் இயற்கை அமைப்பானது மாலத்தீவின் இயற்கை அமைப்பை போன்றே அமைந்துள்ளது .
இத்தீவு முழுவதும் தென்னை மரங்களால் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
காவரத்தி தீவு:
 
ட்சதீவுகளின் தலைநகரமாக இருப்பது காவரத்தி தீவு. 4.22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த
தீவானது கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவிலும், அகத்தி தீவிலிருந்து 50. கிலோ
மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இத்தீவின் கடற்கரை நீரானது மரகதப் பச்சை நிறத்தில் ஸ்படிகம் போன்று
பிரகாசிக்ககூடியதாக இருக்கிறது.
 
இங்கு நீச்சல் தெரிந்தவர்கள், தெரியாதவர்களுக்கேற்றவாறு நீர்  விளையாட்டுகளும், மரைன் என்ற மியூசியமும் காணப்படுகின்றன.இந்த மரைன் மியூசியத்தில் பலவகையான
மீன்கள், நீர் வாழ் உயிரினங்களை காட்சிக்கு வைத்துள்ளனர். இங்குள்ள கடலில் கண்ணாடி அடித்தளத்துடன் அமைக்கப்பட்ட படகுகளில் பயணிப்பதன் மூலம் கடலில் உள்ள பவழப்பாறைகள், கடல் உயிரினங்களை நேரடியாக பார் கண்டு மகிழலாம்.
 

கல்பேணி தீவு:
 
திலக்கம், பிட்டி, செரியம் ஆகிய மூன்று தீவுகள் சேர்ந்ததே கல்பேணி தீவு. இலட்ச தீவுக் கூட்டங்களில் 2.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஆழம் குறைந்த அலைகள் இல்லாத ஸ்படிகம் போன்று தூய்மையான நீருடன் காட்சியளிக்கும் கடல் நீர்பரப்பான ''தரைக்கடல்'' பகுதியாக அமைந்துள்ளது இக் கல்பேணி தீவு. இத்தீவில் 37 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி சென்று பார்த்தால் இத்தீவின் முழு இயற்கை அழகையும் இமைக்காமல் பார்த்து ரசிக்கலாம். கொச்சியிலிருந்து இத்தீவிற்கு நேரடி படகு போக்குவரத்து வசதியுள்ளது.
 

சுஹேலி பார்:
 
கத்தி தீவிலிருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் சுஹேலி வலியக்கரா ,சுஹேலி செரியக்கரா எனும் இரண்டு சிறிய தீவுகளை கொண்ட தீவுதான் சுஹேலி பார் தீவுக்கூட்டமாகும். நீள்வட்ட வடிவில் விளிக்கு வெளிச்சத்தின் விளிம்பை போன்று மரகதப்பச்சை நிறத்தில் பிரகாசிக்கும் தரைக்கடல் பகுதி இத்தீவின் சிறப்பாகும். சுஹேலி வலியக்கரா ,சுஹேலி செரியக்கரா ஆகிய இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே உள்ள ஒரு நீண்ட மணல் திட்டுப் பகுதியானது பலவிதமான பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது. மேலும், அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை ''ட்யூனா'' மீன்களை பதப்படுத்தும் தற்காலிக இடமாகவும் இந்த சுஹேலி தீவு உள்ளது.
 

புத்தகயா மஹாபோதி ஆலயம் - சுற்றுலாத்தலங்கள்!



   புத்தகயா மஹாபோதி ஆலயம்

 
புத்தகயா மஹாபோதி ஆலயம்
 
சையே அழிவுக்கு காரணம் என்ற தத்துவத்தை உலகுக்கு போதித்தவர் புத்தர். அஹிம்சையை வலியுறுத்தியவர். அவர் ஞானம் பெற்ற இடமே புத்தகயா. புத்தர் இங்கு ஆறு ஆண்டுகள் தங்கி தவமிருந்திருக்கிறார். அவர் ஞானம் பெற்ற மரம் அமைந்துள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆலயம் மஹாபோதி ஆலயம் என்றழைக்கப்படுகிறது. இங்கு அமர்ந்தவாக்கில் அமைதியின் உருவமாக ஆழ்ந்த தியான நிலையில் புத்தர் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
 
மஹாபோதி ஆலயத்தின் 55மீட்டர் உயர பிரம்மாண்ட கோபுரமும்  அதைச் சுற்றியுள்ள நான்கு சிறிய கோபுரங்களும் இன்றளவும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. காரணம், அனைத்தும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. கோபுரம் கட்டப்பட்ட காலம் 3-6ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என கருதப்படுகிறது. சிறப்புக்குரிய மஹாபோதி ஆலயத்தைக் கட்டியவர் அசோக மன்னர். புத்தர் ஞானம் பெற்று சுமார் 250ஆண்டுகளுக்கு பிறகு இதை கட்டியிருக்கிறார். புத்தர் தியானத்தில் அமர்ந்த இடத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டு இரண்டு பெரிய பாதச்சுவடுகள் வைக்கப்பட்டுள்ளன.
 
புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்து, ஞானம் பெற்ற புத்தகயா, அவர் முதல்முறையாக போதனை செய்த சாரநாத், முக்தி அடைந்த குஷி ஆகிய இடங்கள் புத்தமதத்தினருக்கு புனிதமான இடங்கள். இவற்றில் புத்தகயா புத்தர் ஞானம் பெற்ற இடம் என்பதால் சிறப்புகுரியதாகிறது.
 
உலகம் முழுவதிலும் இருந்தும் புத்தமதத்தினர் இங்கு வந்து செல்கிறார்கள். புத்தகயாவில் உள்ள மஹாபோதி கோவில் பீகார் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது யுனெஸ்கோ சார்பில் உலக பண்பாட்டுச் சின்னமாக 2002ல் அறிவிக்கப்பட்டது.
 
எப்படிச் செல்லலாம்?
 
சிறப்புக்குரிய புத்தகயா, பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து சுமார் 95கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல பீகாரின் முக்கிய நகரங்களில் இருந்து சாலை வசதி இருக்கிறது. புத்தகயாவில் ரயில் நிலையம் உள்ளது. பாட்னாவில் விமானநிலையம் உள்ளது.

Sunday 6 October 2013

ஆனந்த ரயில்கள் - சுற்றுலாத்தலங்கள்!


    ஆனந்த ரயில்கள்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
ஆனந்த ரயில்கள்
 
ரயில் பயணம் ஆனந்தமே. பாரம்பரியமிக்க ரயில்களில் பயணம் செய்வது பேரானந்தம். பெருமையும் கூட. இந்தியாவில் அப்படி பெருமைக்குரியவை டார்லிஜிங் இமாலயன் ரயில், நீலகிரி மலைரயில் மற்றும் கல்கா- சிம்லா ரயில்கள். காரணம், இவை மூன்றும் யுனெஸ்கோ அமைப்பால் உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை.
 
* டார்லிஜிங் இமாலயன் ரயில்:
 
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி- டார்ஜிலிங் மலைப்பாதையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இது அழகாக, பொம்மைபோல் இருப்பதால் இருப்பதால் டாய் டிரெய்ன் என்றும் அழைக்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் புறப்பட்டு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் உள்ள டார்ஜிலிங்கை அடைகிறது. பயணதூரம் 86 கி.மீ.
 
குட்டி குட்டி பெட்டிகளை பழைமை வாய்ந்த நீராவி என்ஜின் இழுத்துச் செல்வதைப் பார்க்கும்போதே பரவசம் தொற்றிக்கொள்ளும். இந்த ரயில்பாதை1879 - 1881ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியதாம். இது முதலில் சரக்குபோக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது சிப்பாய்களையும் ஆயுங்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகே பயணிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
 
சிறப்புக்குரிய டார்ஜிலிங் இமாலயன் ரயில் 1999-ம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்தியாவின் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட 2வது ரயில் ஆகும். (முதல் ரயில் ஆஸ்திரியாவின் ஸெம்மரிங் ரயில்).
 
* நீலகிரி மலைரயில்:
 
தமிழகத்தில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் நீலகிரி மலைரயில் இயக்கப்படுகிறது. 1845ம் ஆண்டில் ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1899ம் ஆண்டில் போக்குவரத்து தொடங்கியது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர். பல்சக்கரங்களை பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.
 
மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை நீராவி என்ஜினும் பின்னர் டீசல் என்ஜினும் பயன்படுத்தப்படுகிறது. பயணதூரம் 46கி.மீ.தான் என்றாலும் பயணநேரம் சுமார் ஐந்தரைமணி நேரமாகும். வழியில் 208 வளைவுகள், 16குகைகள், 250 பாலங்கள் உள்ளன. எங்கு திரும்பினும் பசுமை, நீரோடை, காட்டு மிருகங்கள் என இயற்கைமயம் மனதைத் தாலாட்டும்.
 
நீலகிரி மலைரயில் 2005ம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
 
* கல்கா- சிம்லா ரயில்:
 
இமயமலை அடிவாரத்தில் உள்ள குளுகுளு ஜிலுஜிலு நகரம் சிம்லா. இமாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகர். கல்கா நகரத்தில் இருந்து சிம்லாவுக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயருக்கு சிம்லாமீது ஒரு மோகம் உண்டு. காரணம், அங்கு நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலை.
 
அதனால் பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர். ராணுவத்தின் தலைமை அலுவலகத்தையும் சிம்லாவில் அமைத்தனர். இதற்காக போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் கல்கா- சிம்லா ரயில்பாதை அமைக்கப்பட்டது. 1903ம் ஆண்டு முதல் ரயில்போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லாவுக்கு ரயிலில் செல்வது சுகமான சூப்பரான அனுபவம்.
 
கல்கா - சிம்லா ரயில் 2008ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
 

ஆனந்த ரயில்களில் உங்களது ஆனந்தப் பயணம் எப்போது?

Monday 30 September 2013

அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்- சுற்றுலாத்தலங்கள்!



      அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்
 
டெல்லி குதுப்மினார். இந்தியாவின் மிகஉயர்ந்த கோபுரம். செம்மண்-பாறைக் கற்களால் உருவான அரிய பொக்கிஷம். இதன் உயரம் 72.5 மீட்டர் (சுமார் 238அடி). உயர்ந்து நிற்கும் குதுப்மினார், சுவாரஸ்ய வரலாற்றையும் உள்ளடக்கியது.

 
டெல்லி மட்டுமின்றி தெற்காசியாவின் முதல் முஸ்லிம் ஆட்சியாளர், முதல் சுல்தான் என்ற பெருமைக்குரியவர் குத்புதீன் ஐபக். அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர். மத்திய ஆசியாவில் துருக்கிய மரபில் பிறந்த குத்புதீன் ஐபக் சிறுவயதிலேயே அடிமையாக விற்கப்பட்டார். இடையே கைமாறி, கடைசியில் முகமத்கோரியால் விலைக்கு வாங்கப்பட்டார். தனது வீரதீர செயல்பாடுகளால் கோரியின் முக்கிய தளபதியாக விளங்கினார். கோரியின் மறைவுக்குப் பிறகு டெல்லி சுல்தான் ஆனார்.டெல்லியில் உருவான முஸ்லிம் நினைவுச்-சின்னங்களுக்கு காரணகர்த்தா இவரே.
 
முதலில் குவ்வாத்-உல்-இஸ்லாம் மசூதியை அமைத்த குத்புதீன் ஐபக், 1199ம் ஆண்டில் குதுப்மினாருக்கு அஸ்திவாரம் போட்டார். மக்களை தொழுகைக்கு அழைப்பதற்கு வசதியாக இந்த கோபுரத்தை எழுப்பத் தொடங்கினார். இதன் முதல் அடுக்கு முற்றுப்பெற்ற நிலையில் குத்புதீன் ஐபக் திடீரென மரணம் அடைந்தார். பிறகு ஆட்சிக்கு வந்த குத்புதீன் ஐபக்கின் மருமகன் சம்சுதீன் அல்துமிஷ், கோபுரத்தில் மேலும் மூன்று அடுக்குகளை அமைத்தார். 1211 முதல் 1236ம் ஆண்டு வரை கட்டடப்பணிகள் நடந்தன.
 
இருப்பினும், கடைசி அடுக்கு 1386ம் ஆண்டில் பெரோஷா துக்ளக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இப்படி மூன்று மன்னர்களால் உயர்த்தப்பட்டதுதான் குதுப்மினார். ஒவ்வொரு அடுக்கிலும் உப்பரிகை அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. குதுப்மினாரின் உச்சிக்கு சென்றடைய 379 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
குதுப்மினார் வளாகத்தில் உள்ள அல்துமிஷ் ஸ்தூபி, அலைய் தர்வாஷா மெயின்கேட், அலைய் மினார் போன்ற கட்டடங்களும் கலைநயம் மிக்கவை. ஏழு மீட்டர் உயரம் கொண்ட இரும்புத்தூண் ஒன்றும் இங்கு உள்ளது. நான்கரை அடி பருமனும் ஏழரை டன் எடையும் கொண்ட இந்த இரும்புத்தூண் இன்றளவும் சிறிதும்கூட துருப்பிடிக்காதது அதிசயமே.
 
குதுப்மினாரையும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்களையும் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ அமைப்பு 1993ம் ஆண்டில் அறிவித்தது. நவம்பர்- டிசம்பரில் இங்கு குதுப் திருவிழா நடத்தப்படுகிறது. டெல்லி மாநில சுற்றுலாத்துறை சார்பில் 3நாட்கள் நடைபெறும்  இந்த  விழா, இசை - நடனம் - நாட்டியம்  என அமர்க்களப்படுகிறது.
 
அடிமை உருவாக்கிய அற்புத கோபுரம் குதுப்மினார்,தன்னைக் காண்போரையும் அடிமையாக்கி விடுகிறது, வனப்பாலும் வசீகரத்தாலும்..!

Saturday 28 September 2013

டெல்லி செங்கோட்டை- சுற்றுலாத்தலங்கள்!


      டெல்லி செங்கோட்டை
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
டெல்லி செங்கோட்டை
 
டெல்லி நகரின் இன்னொரு கம்பீரம் 'செங்கோட்டை'. இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர் தேசியக்கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் மொகலாய மன்னர் ஷாஜஹான்.
 
தனது தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜஹானா பாத்திற்கு (தற்போதைய பழைய டெல்லி) ஷாஜஹான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக் கட்டிமுடிக்க 1638-48 வரை பத்தாண்டு ஆனது. செலவிட்ட தொகை அப்போதைய மதிப்புக்கு ஒருகோடி ரூபாயாம்.
 
யமுனை நதிக்கரையில் ஒப்பிலா அழகுடன் எழுந்து நிற்கும் செங்கோட்டை, பாரசீக, ஐரோப்பிய, இந்திய கட்டடக் கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சரியப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை இன்றளவும் போற்றப்படுகிறது. டெல்லிகேட், லாகூர்கேட் என இருபெரும் நுழைவாயில்கள் உள்ளன.
 
கோட்டைக்குள் இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றி அந்தப்புரங்களிலும்கூட கலைநயம் கண்சிமிட்டுகிறது. 'திவான்- இ- ஆம்' எனப்படும் தர்பார் மண்டபம் பொதுமக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே மன்னருக்காக அமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது.
 
'ஜெனானா' என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மஹால், ரங் மஹால் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்ட நீருற்று புதுமையின் பதிப்பு.அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட மோத்திமஸ்ஜித் எனப்படும் பியர்ல் மஸ்ஜித் (முத்து மசூதி) முழுவதும் சலவைக்கல் மயமே.

 
இவைதவிர அரச குடியிருப்புகள் அமைந்திருந்த 'நஹ்ர்-இ-பேஹிஸ்ட்' என்ற பகுதி அசத்தல் ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி, கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும்கூட கால்வாய்வெட்டி நனவாக்கிய மொகலாய மன்னர்கள். இதை 'சொர்க்கத்தின் நீரோடை' என்றும் அழைத்து வந்தனர். நீரோடையை இன்றும் காணலாம்.
 
செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜஹான் என்றாலும் அவருக்குப் பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது கண்டோன்மென்ட்டாக (ராணுவமுகாம் மற்றும் குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது. அப்போது சில கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப்பிறகும் ராணுவக்-கட்டுப்பாட்டில் இருந்துவந்த செங்கோட்டை, 2003ம் ஆண்டில் இந்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இங்குள்ள மும்தாஜ் மஹாலில் மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வரலாற்றுப் பொக்கிஷங்கள். பெருமைக்குரிய டெல்லி செங்கோட்டை, யுனெஸ்கோவால் 2007ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

Friday 27 September 2013

கொனார்க் சூரியக்கோவில் - சுற்றுலாத்தலங்கள்!



      கொனார்க் சூரியக்கோவில்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
கொனார்க் சூரியக்கோவில்
 
"இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள்.
 
"இருபத்து நான்கு பெரிய சக்கரங்கள் கொண்ட பிரம்மாண்டத் தேர்,  முன்கால்களைத் தூக்கியவாறு ஆக்ரோஷமாக அதை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகள்..." எனச் சொல்லிப்பாருங்கள். மிரட்டலாக இருக்கும். அதுவே நிஜமாக இருந்தால்...? இருக்கிறது. கொனார்க் சூரியகோவிலாக!. ஆம். கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவம்தான் சூரியபகவான் கோவில்.
 
 
ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கோவில் இது. சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த கலைப்பொக்கிஷத்துக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி1236- 1264) கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது. இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம்.
 இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.

 பாலியல் விளையாட்டுக்களை பளிச்செனக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில் சூரியபகவான் சிருஷ்டிதேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே பாலியல் சிற்பங்கள் உருவாகக்காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன.
 
 நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம்.
 
 இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
 
விழாக்கள்:

கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும் 'மஹாசப்தமி விழா' பிரசித்தம்.  சூரியபகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத் திருவிழா இது.
 
எப்படிப் போகலாம்?

புவனேஸ்வரில் இருந்து 65 கி.மீ தொலைவிலும் பூரியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலைமார்க்கமாக சென்று விடலாம். பூரி, புவனேஸ்வரில் ரயில்நிலையங்கள் உள்ளன. புவனேஸ்வரில் விமான நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திபாகா கடற்கரை உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத்தலமாகும்.

காதல் சின்னம் தாஜ்மஹால் - சுற்றுலாத்தலங்கள்!



     காதல் சின்னம் தாஜ்மஹால்
 லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ,அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவின் 27 இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23 இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த வாரம்...

காதல் சின்னம் தாஜ்மஹால்
 
 உலக அதிசயம், காதல் சின்னம், பரவசப்படுத்தும் பளிங்கு மாளிகை என தாஜ்மஹாலின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அழகுப் பெட்டகமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தாஜ்மஹால், இந்தியாவின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்று.

 மொகலாய மன்னர் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக இதைக் கட்டி முடித்தார். ஷாஜஹானின் மூன்றாவது மனைவி மும்தாஜ். இவர் மீது ஷாஜஹானுக்கு தனிக்காதல் உண்டு. தனது பதினான்காவது பிள்ளைப்பேற்றின் போது மும்தாஜ் இறந்து விட்டார். மும்தாஜின் பிரிவைத் தாங்க முடியாத ஷாஜஹான் அவரது நினைவாக எழுப்பியதே தாஜ்மஹால். இங்கு மும்தாஜின் சமாதி உள்ளது. பின்னாளில் ஷாஜகான் இறந்த பிறகு அவரது உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டது.

 வரலாற்றுச் சிறப்புக்குரிய தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் கி.பி. 1631-1654ம் ஆண்டு. சுமார் 22ஆயிரம் பேர் கட்டடப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முழுவதும் பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி பாரசீக பாணி மற்றும் மொகலாயருக்கே உரித்தான ஸ்டைலும் கலந்து உருவாக்கப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டுபவை.
 
 தாஜ்மஹால்- மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்டது. சதுரவடிவ நிலப்பரப்பில் சமச்சீராக கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மூலைக்கு ஒன்றாக நான்கு உயரமான மினார்களும், கட்டடத்தின் உச்சியில் வெங்காய வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் குவிமாடமும் தாஜ்மஹாலின் தனி அடையாளங்கள். குவிமாடம் மட்டும் 35மீட்டர் உயரம் கொண்டது. சுவர்கள் அனைத்திலும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 'துலுத்' என்ற வகையிலான அரபி வனப்பெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாரசீக வனப்பெழுத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் இவை உருவானவை. மேலும் செடி, கொடி வடிவங்களும் அழகுற வரையப்பட்டுள்ளன. தாஜ்மஹாலின் உட்புறக்கூடம் இன்னும் அழகானது. எண்கோண வடிவில் அமைந்துள்ள உட்புறக்கூடத்தில் விலை உயர்ந்த பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.தாஜ்மஹாலைப் போலவே அதன் முன்புறம் அமைந்துள்ள பூங்காவும் ரசனைக்குரியது. பாரசீக பூங்காக்களின் வடிவமைப்பை பின்பற்றி இது அமைக்கப்பட்டுள்ளது.
 
எப்படிப் போகலாம்?
 
ஆக்ராவில் விமான நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன ஆக்ராவும் ரயில் நிலையமும் உள்ளது. டெல்லியில் இருந்து சுமார் 3மணி நேர ரயில் பயணத்தில் ஆக்ராவை அடைந்து விடலாம். நல்ல சாலை வசதிகளும் உள்ளன.
 
"கலையும், காதல் வரலாறும் கலந்த ஒரு அழகு ஓவியம்தான் தாஜ்மஹால். நேரில் பார்க்கும்போதே இதை உணர முடியும்''

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top