உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'
சகலகலாவல்லவர்களான சாளுக்கியர் கட்டடக்கலையையும் விட்டு வைக்கவில்லை என உணர்த்தும் இடம் 'பட்டாடகல்'. கர்நாடகத்தின் மாலப்பிரபா ஆற்றங்கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களை தாங்கி நிற்கும் நகரம். இங்கு கலைநயத்துடன் சாளுக்கியர் எழுப்பிய 10ஆலயங்களை உலக பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ 1987-ல் அறிவித்தது. இவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. சாளுக்கிய மன்னர்களின் முடிசூட்டு வைபவமும் இங்கு நடந்திருப்பது இன்னொரு சிறப்பு.
விருபாக்ஷர் ஆலயம்:
சாளுக்கிய பேரரசி லோகமகாதேவி அமைத்த ஆலயம் இது. 'லோகேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைக்கப்படுகிறது. தனது கணவர் இரண்டாம் விக்ரமாதித்தன் பல்லவர்களை வென்றதன் நினைவாக இதை கட்டியிருக்கிறார். காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தை மாதிரியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டதாக கூறப்-படுகிறது. லிங்கோத்பவர், நடராஜர், உக்கிர நரமிம்மர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
சங்கமேஸ்வரர் ஆலயம்:
'விஜயேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைக்கப்படும் சங்கமேஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சாளுக்கிய மன்னர் விஜயாதித்யா சத்யஸ்ரேயா. இந்த ஆலயத்தில் திராவிட கட்டடக்கலை மிளிர்கிறது. உக்கிர நரசிம்மர், நடராஜர் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிரதான கோபுரம் மூன்று அடுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
மல்லிகார்ஜுனா ஆலயம்:
விருபாக்ஷர் ஆலயத்தின் சிறிய வடிவம்தான் மல்லிகார்ஜுனா ஆலயம். விருபாக்ஷர் ஆலயம் கட்டப்பட்ட புதிதிலேயே இதுவும் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
காட சித்தேஸ்வரர், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயங்கள்:
இவை இரண்டுமே சம காலத்தில் கட்டப்பட்டவை. காட சித்தேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் திரிசூலம் ஏந்திய சிவன் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.
பாபநாதர் ஆலயம்:
ராமாயண, மகாபாரத காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்கள் பாபநாதர் ஆலயத்தில் நிறைய உள்ளன. இதே போல கல்கநாதா ஆலயம், ஜெயின் ஆலயம், நாகநாதர் ஆலயம், மகா குட்டேஸ்வரர் ஆலயம் ஆகியவையும் பல வரலாறுகளை உணர்த்தி வருகின்றன.
எப்படிப் போகலாம்?
பெங்களூரில் இருந்து சுமார் 495 கி.மீ தொலைவிலும், படாமியில் இருந்து 22 கி.மீ தொலைவிலும் பட்டாடகல் அமைந்துள்ளது. சுமார் 24கி.மீ தொலைவில் படாமியில் ரயில் நிலையம் இருக்கிறது. பெங்களூரில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.
பட்டாடகல்லில் ஆண்டுதோறும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் சாளுக்யா உற்சவம் என்ற பெயரில் மூன்று நாட்கள் நாட்டியவிழா நடத்தப்படுகிறது. வண்ணமயமான இவ்விழாவை வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஆலயங்களின் பின்னணியில் பார்த்து ரசிப்பது பரவசம் தரக்கூடியது.
|
0 comments: