.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 11 October 2013

“ச்சீ..ச்சீ..கெளதம் மேனன் படம் புளிக்கும்!” – சூர்யா ஸ்டேட் மென்ட்!



சூர்யா – கெளதம் மேனன் இருவரும் இணைந்து ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்நிலையில் மீண்டும் ’துருவ நட்சத்திரம்’ என்னும் படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்தார்கள். சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்க கெளதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்று படப்பூஜை போடப்பட்டு, படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.அதற்குப் பிறகு எப்போது படப்பிடிப்பு, யாரெல்லாம் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாமலிருந்த. நிலையில் தற்போது சூர்யா, தான் கெளதம் மேனன் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.


11 - surya-gautham-menon-

 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் கெளதம் மேனன் அவர்கள் இயக்கம் மற்றும் தயாரிப்பில், நான் கதாநாயகனாக நடிப்பதாக முடிவானது. இது அனைவரும் அறிந்த செய்தி. பல்வேறு காரணங்களால் இப்போது நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


என்னுடைய திரையுலக அனுபவத்தின் அடிப்படையில், நான் நடிக்கும் படத்தின் கதை, மனதிற்கு முழுத்திருப்தி தந்த பிறகே படப்பிடிப்பு செல்வது என்பதை கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தி வருகிறேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகனாக என்னுடைய முதல் கடமையாக கருதுகிறேன்.


இயக்குநர் கெளதம் அவர்களிடம் என்னுடைய இந்தக் கொள்கை முடிவை முதல் நாளே தெளிவாகச் சொல்லி, அதற்கு அவர் சம்மதித்த பிறகே நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தோம். இதையே ஒப்பந்தமாகவும் செய்துகொண்டோம். ஆனால், ஒப்பந்தம் செய்து, ஒருவருட காலம் கழிந்த பிறகும், கெளதம் அவர்கள் இன்னும் என்னிடம் முழு கதையை திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை.


சிங்கம் 2 படம் முடித்த பிறகு ஆறுமாதங்களாக முழுக்கதையையும் எதிர்பார்த்து காத்திருந்தேன். முதலில் பூஜை போட்டுவிடலாம் என்றார். நட்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். ‘ஒரு டெஸ்ட் ஷுட்’ செய்து ‘கெட்டப்’ மாற்றங்களை முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும், கெளதம் அவர்கள் மீது இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். பல மாதங்களாக ஷுட்டிங் போகாமல், வீட்டில் காத்திருந்தேன். கெளதம் அவர்களிடம் இருந்து, நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக்கதை கிடைக்கும் என்று இன்றுவரை காத்திருந்தேன். அது நடக்கவில்லை.


முன்பே கெளதம் அவர்கள் ‘சென்னையில் ஒரு மழைகாலம்’ படத்திற்கு பூஜை போட்டு, ஒரு வாரம் ஷுட்டிங் செய்து, எட்டு மாதங்கள் காத்திருந்தும், கடைசியில் அந்த படம் நடக்கவில்லை. இப்போது இந்தப் படத்திற்கும் அதே அனுபவம் தொடர்ந்து ஏற்படுகிறது.


ஆறுமாத கால காத்திருத்தலுக்குப் பிறகு, இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கும் ஏற்பட்டுள்ளது. நானும் கெளதம் அவர்களும் கருத்தளவிலும் எதிரெதில் திசையில் பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது. இந்நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன்.


ஒரு திரைப்படம் உருவாவதில் பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது. நடிகனாக நம்பிக்கையில்லாமல் செய்த படங்கள், எனக்கு சரியான பாடங்களைத் தந்திருக்கின்றன். நட்பின் அடிப்படையில் கெளதம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். இனி நாங்கள் இருவரும் இப்படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது. அதனால் கெளதம் அவர்களின் படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1 comments:

Manimaran said...

நல்ல விஷயம் கொஞ்சம் லேட் டெசிசன்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top