.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சுற்றுலாத்தலங்கள். Show all posts
Showing posts with label சுற்றுலாத்தலங்கள். Show all posts

Thursday 26 September 2013

ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தர் - சுற்றுலாத்தலங்கள்!



ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தர்
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரின் இன்னொரு ஆச்சரியம் 'ஜந்தர்மந்தர்' என்னும் பாரம்பரிய வானியல் கோளரங்கம். ஜெய்ப்பூர் அரண்மனையையொட்டி அமைந்துள்ளது.
 
 இது கி.பி1727-1734ஆம் ஆண்டுகளுக்கு இடையே இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா என்ற மன்னரால் அமைக்கப்பட்டது.வானவியல் கருவிகள் இங்குள்ளன.ஜந்தர் மந்தரின் உண்மையான பெயர் 'யந்த்ரா மந்த்ரா'. இதில் 'யந்த்ரா' என்றால் கருவிகள். 'மந்ந்ரா' என்றால் சூத்திரம். அதாவது கருவிகளின் துணையுடன் வானவியல் கணக்கீடுகளை அறிந்து கொள்ளுதல் என்பது இதன் பொருளாகும். இதே போல ஜந்தர்மந்தர்கள் டெல்லி, காசி, உஜ்ஜைனி, மதுரா போன்ற இடங்களில் இருந்தாலும் ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தரே மிகப்பெரியது.

 இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களும் கருவிகளும் நேரத்தை அறிந்து கொள்ளவும்,கிரகணங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும், கோள்களின் சாய்மானங்களை அறியவும் என வானவியல் தொடர்பான கணக்கீடுகளுக்கு பயன்பட்டு வந்துள்ளன.இங்குள்ள 'சாம்ராட் இயந்திரம்'என்றழைக்கப்படும் சூரியக் கடிகாரம் நேரத்தை மிகத் துல்லியமாக அறிவதற்கு பயன்பட்டுள்ளது. இதன் உயரம் 90அடி. இது உலகின் மிகப்பெரிய சூரியக்கடிகாரமாக கருதப்படுகிறது. இதன் நிழலை அடிப்படையாகக் கொண்டு நேரத்தை கணக்கிட்டு வந்துள்ளனர்.

 இங்குள்ள வானியல் கணக்கீட்டுக் கருவிகளை பளிங்குக் கற்களால் கட்டியிருப்பது இன்னொரு சிறப்பு.உள்ளுர் உழவர்கள் பருவநிலையை தெரிந்து கொள்ள இன்றளவும் இந்தச் சூரியக்கடிகாரம் உதவி வருகிறது. சிறப்புக்குரிய ஜந்தர்மந்தர் 1948ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியலில் 2010ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

 ஜெய்ப்பூரின் வரலாற்றில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. கி.பி.1875ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணியின் மகன் இந்த நகருக்கு வருகைதந்ததையொட்டி நகரின் முக்கிய வீதிகளில் சிவப்பு வண்ணங்களைப் பூசி அழகுபடுத்தினார் ஜெய்ப்பூர் மகாராஜா சவாய் ராம்சிங். அன்று முதல் ஜெய்ப்பூர் 'பிங்க் சிட்டி' என்றழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூர் அரண்மனையின் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஜெய்ப்பூரின் ஆச்சரியம் மற்றும் அதிசயங்களில் ஒன்றாக ஜந்தர்மந்திர் என்றழைக்கப்படும் வானியல் கோளரங்கமும் திகழ்ந்து வருகிறது.
 
எப்படிப் போகலாம்?
 
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ஜெய்ப்பூருக்கு நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஜெய்ப்பூரில் பெரிய ரயில்நிலையம் உள்ளது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து ஜெய்ப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஜெய்ப்பூர் நகரில் இருந்து சுமார் 13கி.மீ தொலைவிலேயே விமான நிலையம் உள்ளது.

Wednesday 25 September 2013

காசிரங்கா தேசியப்பூங்கா - சுற்றுலாத்தலங்கள்!

                     காசிரங்கா தேசியப்பூங்கா
ந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை 'ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள்' உலவும் இடம் காசிரங்கா தேசியப் பூங்கா.

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் இது அமைந்துள்ளது. உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் உள்ளதாம். இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகை பறவையினங்களையும் காசிரங்காவில் காணமுடியும்.


காசிரங்கா தேசியப் பூங்கா உருவானதன் பின்னணி சுவாரஸ்ய-மானது. பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் கர்சன்பிரபுவின் மனைவி மேரி விக்டோரியா 1904ஆம் ஆண்டில் தற்போதைய காசிரங்கா பகுதிக்கு வந்தார். அரியவகை மிருகங்களை பார்த்து ஆச்சரியப்-பட்டுப் போன அவர், தனது கணவர் கர்சன் பிரபுவிடம் அந்த அரியவகை மிருகங்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1905ஆம் ஆண்டில் காசிரங்கா காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. சுமார் 430சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த காட்டுப்பகுதி 1974ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக மாற்றப்பட்டது. 1985ஆம் ஆண்டில் இதனை உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம் செய்தது. 2005ஆம் ஆண்டில் நடந்த காசிரங்கா தேசியப்பூங்காவின் நூற்றாண்டு விழாவில் கர்சன் பிரபுவின் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

 இத்தனை சிறப்புமிக்க காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள அரியவகை உயிரினங்களைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.காசிரங்கா தேசியப் பூங்காவுக்குள் அங்குள்ள வாகனங்களில் சென்று ரசிக்கலாம். யானை சவாரியும் உண்டு. வனத்திற்குள் சுற்றுலாப் பயணிகள் நடந்துசெல்ல அனுமதி இல்லை. நவம்பர் மாதத்தின் மத்தியில் இருந்து ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் வரை காசிரங்காவிற்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற காலமாக கருதப்படுகிறது.
எப்படிப் போகலாம்?
காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு சாலை வசதி உள்ளது.220கி.மீ தொலைவில் கவுகாத்தியிலும் 90கி.மீ தொலைவில் ஜோர்ஹட்டிலும் விமான நிலையங்கள் உள்ளன.இந்த இரு நகரங்கள் மற்றும் ஃபர்கெட்டிங் ஆகிய இடங்களில் ரயில்நிலையம் உள்ளது.அங்கிருந்து சாலை மார்க்கமாக தேசியப்பூங்காவிற்கு சென்று விடலாம்.

Tuesday 24 September 2013

குளுகுளு குற்றாலம்! - சுற்றுலாத்தலம்!


      குளுகுளு குற்றாலம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் அருவிகள் ஆர்ப்பரித்துக் கொட்டும் குளுகுளு பகுதியே குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் தென்னிந்தியாவின் ‘ஸ்பா’ என்றும் அழைக்கப்படுகிறது. காடு, மலைகளைக் கடந்து வரும் தண்ணீர் பல்வேறு மூலிகைச் செடிகளையும் தழுவி வந்து அருவியாக கொட்டுவதால் இயற்கையிலேயே நோய்தீர்க்கும் குணம் கொண்டது என்பதும் ஒரு நம்பிக்கையாகும்.
 
குற்றாலத்தில் ஒன்பது அருவிகள் உள்ளன. முக்கியமான பேரருவியே குற்றால அருவி என்றழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற துறையில் விழும் தண்ணீர் பொங்கியெழுந்து விரிந்து பரந்து கீழே விழுகிறது. பேரருவிக்கு சற்று மேலே சென்றால் சிற்றருவி. பெயருக்கு ஏற்றாற்போல சிறிய அருவிதான். பேரருவியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அருவி உள்ளது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் இருக்கிறது. சித்ரா பவுர்ணமி நாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் தேனருவி உள்ளது. இங்கு ஏராளமான தேன்கூடுகள் உள்ளதால் தேனருவி என்று பெயர் பெற்றதாக கூறுகின்றனர். தேனருவி அருகே பாலருவி உள்ளது.

 குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் ஐந்தருவி அமைந்துள்ளது. இங்கு ஐந்து கிளைகளாக பிரிந்து அருவி கொட்டுவதால் ஐந்தருவி எனப் பெயர்பெற்றது. ஐந்தருவிக்கு அருகே பழத்தோட்ட அருவி என்றழைக்கப்படும் வி.ஐ.பி அருவி உள்ளது. இங்கு முன் அனுமதி பெற்ற முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே குளிக்க அனுமதி. குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் புலியருவியும், சுமார் 15 கி.மீ தொலைவில் பழைய குற்றாலம் அருவியும் உள்ளது.

 தென்மேற்கு பருவ காலம் தொடங்கியவுடன் ஜூன் மாதத்தில் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து விழத் தொடங்கி விடும். ஆகஸ்ட், செப்டம்பர் வரை இங்கு சீசன் காலம்தான். தமிழக அரசு சார்பில் கலைநிகழ்ச்சிகளுடன் சாரல் விழாவும் குற்றாலத்தில் நடத்தப்படுகிறது. குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) கோவில் உள்ளது. திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியின் நாயகர் இந்த குற்றால நாதர்தான்.

 அருவிகள் ஆர்ப்பரிக்கும் குற்றாலம், மதுரையில் இருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் தென்காசியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. தங்குவதற்கு தனியார் விடுதிகளும், பேரூராட்சி விடுதிகளும் உள்ளன. குற்றாலக் குளியல் உற்சாகத்தின் புதையல் என்பது அதனை அனுபவித்தவர்களின் கருத்தாகும். 
 

Monday 23 September 2013

வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம்’ வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு அழகான வரலாற்று பின்னணி!



இந்த சரணாலயத்துக்கு சுவாரஸ்யமான வரலாற்று பின்னணியும் உண்டு. இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து சென்றுள்ளன. 1700ம் ஆண்டுகளில் கிராம உள்ளூர் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக இது இருந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுதை கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலையில், 1936ம் ஆண்டு உள்ளூர் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ப்ளேஸ், வேடந்தாங்கலை பறவைகள் சரணாலயமாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 1962ல் இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம்’ என்று அர்த்தம்.


கிராம மக்களின் தியாகம்



இங்கு பறவைகள் வந்து செல்வதால் அவற்றின் எச்சம் நீர்பரப்பு முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. இந்த நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதாலும், வயல்வெயிலில் பறவைகள் எச்சமிடுவதாலும் விளைச்சல் நன்றாக இருப்பதாக கூறுகின்றனர் இக்கிராமத்து விவசாயிகள். இதற்காக பறவைகளுக்கு எந்த தொந்தரவும் தராமல் வாழ்ந்து வருகின்றனர். பறவைகள் வெடி சத்தத்துக்கு பயப்படும் என்பதால் இந்த கிராமத்தினர் தீபாவளியன்று கூட பட்டாசு வெடிக்காமல் அந்த சந்தோஷத்தையும் தியாகம் செய்திருக்கிறார்கள். 

வியக்க வைக்கும் விருதுநகர்! - சுற்றுலாத்தலங்கள்!


   வியக்க வைக்கும் விருதுநகர்
உழைப்புக்கும், வர்த்தகத்திற்கும் பெயர் பெற்றது விருதுநகர் மாவட்டம். சமையல் எண்ணெய், பருத்தி, மிளகாய், ஏலக்காய், நறுமணப்பொருட்கள் என பல்வேறு நுகர்பொருட்கள் இந்த மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சிறப்பு மிக்க விருதுநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன.

சிவகாசி:
குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் உலக அளவில் பிரபலமானவை. தீப்பெட்டி உற்பத்தியும், நவீன அச்சுத் தொழிலும் இங்கு பிரசித்தம். வானத்தில் வர்ணஜாலம் காட்டும் பட்டாசுகள் தயாராகும் முறைகளை இங்கு நேரில் பார்க்கலாம்.

ரமண மகரிஷி ஆசிரமம்:
பகவான் ஸ்ரீரமண மகரிஷி அவதரித்த திருச்சுழி இங்குதான் உள்ளது. ரமணர் பெயரால் இங்குள்ள குண்டாற்றங்கரையில் ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சுழியில் ரமணர் வாழ்ந்த வீடு ‘சுந்தர மந்திரம்’ என்றழைக்கப்படுகிறது. ரமணரின் கருத்துக்களால் கவரப்பட்டவர்கள் கண்டிப்பாக வந்து செல்லவேண்டிய இடம் இது.

திருத்தங்கல்:
வரலாற்று சிறப்பு மிக்க நகரம். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என தமிழின் மூன்று சங்கங்களிலும் இடம் பெற்ற புலவர்களான முடக்கூரனார், போர்க்கோலன், வெண்ணாகனார், ஆதிரேயன் செங்கண்ணனார் ஆகியோர் வாழ்ந்ததாக சொல்லப்படும் இடம்.

அணில்கள் சரணாலயம்:

செண்பகத்தோப்பு காட்டு அணில் சரணாலயம் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். சாம்பல் நிற காட்டு அணில்களை இங்கு பார்க்கலாம். புலி, சிறுத்தை, நீலகிரி நீண்ட வால் குரங்கு, புள்ளிமான், தேவாங்கு போன்ற உயிரினங்களும் உண்டு.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்:

பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சாத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள அம்மனை வழிபட்டால் அம்மை உள்பட பல்வேறு நோய்கள் நீங்கும் என்பது காலந்தொட்டு வரும் நம்பிக்கை.

சவேரியார் தேவாலயம்:

புனித பிரான்சிஸ் நினைவாக பிரான்சிஸ் அசோசியேஷனால் கட்டப்பட்ட தேவாலயம். இதன் சுவர்களில் ஏழு குதிரை பூட்டப்பட்ட தேரில் ஸ்ரீகிருஷ்ண பகவான் வருவது போலவும், இஸ்லாமை குறிக்கும் பிறை நிலவும் பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்தை உணர்த்துகிறது.

ஆண்டாள் கோவில்:

பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது. திருப்பாவை பாடிய ஆண்டாளின் பெருமையை உணர்த்தும் திருத்தலம். இந்த கோவிலின் கோபுரம்தான் தமிழ்நாடு அரசாங்கத்தின் இலச்சினையாக அமைந்துள்ளது.

இவை தவிர அய்யனார் அருவி, திருமேனிநாத சுவாமி கோவில், கல்விக்கண் திறந்த காமராஜர் நினைவு இல்லம் என பார்க்கத் தகுந்த பல இடங்கள் விருதுநகர் மற்றம் சுற்றுப் பகுதிகளில் உள்ளன.

தெய்வீக திருவண்ணாமலை! சுற்றுலாத்தலம்!


 தெய்வீக திருவண்ணாமலை
திருவண்ணாமலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலைநகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.
ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவில்.
திருவண்ணாமலையில் இருக்கும் ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவில். மற்ற இடங்களில் நாம் மலைமேல் சுவாமி இருப்பதாக கேள்வி பட்டிருப்போம், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர்.  இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது. முக்தி தரும் இடமாக கருதப்படும் இடங்களில் இத்திருத்தலமும் ஒன்று.  திருவாரூரில் பிறக்க வேண்டும், காசியில் இறக்க வேண்டும், தில்லை சிதம்பரத்தை போய் பார்க்க வேண்டும், ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமிது.  இம்மலையில் சுற்றும் வழியில் அஷ்ட லிங்கங்கள் உள்ளது.  அவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம்.  இம்மலையை சுற்றி வந்தால் இறைவனை சுற்றுவதற்கு சமானம். அதுவும் பௌர்னமியன்று சுற்றினால் மிகவும் விசேஷம்.
இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராத்திலும் பல சந்நிதிகள் இருக்கிறது.  முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது.  மூன்றாவது சந்நிதியில் உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது.  மற்ற பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, விநாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி,  வள்ளாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது.
இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம்.  இந்த மரம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.  குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள்.  குழந்தை பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.
ஸ்தல வரலாறு  
ஒரு காலத்தில் பிரம்மாவிற்கும், விஷ்னுவிற்கும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று.  இதனால் இருவரும் சிவபெருமானை மத்யஸ்த்திற்கு அழைத்தார்கள்.  ஆகையால் சிவபெருமான் இவர்களின் உயர்வு தாழ்வு எண்ணத்தை போக்க ஒரு போட்டி வைத்தார்.  யார் முதலில் தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ பார்த்து சொன்னால் அவர் தான் சிறந்தவர் என்றார். பிறகு சிவன் ஜோதிமயமாக தன் உருவை மாற்றிக் கொண்டார். இதனால் விஷ்னு வராக அவாதாரம் எடுத்து அடியை காண பூமியை குடைந்து சென்றார். ஆனால் அவரால் முடியவில்லை.  தான் செய்தது தவறு என்று ஏற்றுக் கொண்டார்.  அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக மாறி முடியை தேடிச் சென்றார். இடையில் தாழம்பூ சிவனின் முடியிலிருந்து கீழே விழுவதை பார்த்துவிட்டு, சிவனின் முடியைக் காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கேட்டார்.  அதற்கு தாழம்பூ தாம் பல்லாயிற வருஷ காலமாக கீழே விழுவதால் தனக்கு தெரியவில்லை என்றது. இதனால் பிரம்மா தாம் தோர்க்கக்கூடாது என்ற எண்ணத்தினால் தாழம்பூவை தாம் சிவனின் முடியை பார்த்ததாக பொய் சாட்சி கூற கூறினார்.  இதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.  இதனால் கோவம் அடைந்த சிவபெருமான் பிரம்மாவிற்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபித்தார்.  அப்படி ஜோதியாக சிவன் நின்ற அந்த இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.
இந்திரலிங்கம்

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.
அக்னிலிங்கம்
கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.
யமலிங்கம்.
கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.
நிருதி லிங்கம்
கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.
வருண லிங்கம்
கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.
வாயு லிங்கம்
கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

குபேர லிங்கம்
கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

ஈசானிய லிங்கம்
கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.

திருவிழாக்கள்
திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் அல்லது டிசம்பர்  மாதம் வரும்.
இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று, காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும்.[4] இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.
இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.
மகான்கள்
இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்-வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி இறக்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.மற்றும் விசிறி சாமியார் யோகிராம் சுரத்குமார்  ,சேஷாத்திரி மகரிஷி, குகை நமசிவாயர் சுவாமிகள் போன்ற எண்ணற்ற மகான்கள் வாழ்ந்த பூமி திருவண்ணாமலை.

Sunday 22 September 2013

குளு..குளு..கொடைக்கானல்..! - சுற்றுலாத்தலங்கள்!


 குளு..குளு..கொடைக்கானல்..!
குளு..குளு..கொடைக்கானல்

கொடைக்கானல்-இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக்கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளில் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி)உயரத்தில் உள்ளது.கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு,  காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ்மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலங்களில் இங்கு தங்கியிருந்தனர்.
இனி..சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
வெள்ளி நீர்வீழ்ச்சி:

கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.

கொடைக்கானல் ஏரி:

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.கொடைக்கானல் ஏரியின் அழகை ரசித்தவாறு பெரிய அன்னங்களைப் போல வடிவமைத்த வண்ணப் படகுகளில், பெடல்களை மிதித்து இயக்கியவாறு உல்லாசமாகச் செல்லலாம்

ப்ரயண்ட் பூங்கா:

பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

கோக்கர்ஸ் நடைபாதை:

1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம். 
வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது.
டால்பின் மூக்கு:

பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது.
பசுமை பள்ளத்தாக்கு;

கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.

தலையர் நீர்வீழ்ச்சி
:
இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது.  இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.

குணா குகைகள்:

கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர்.  அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை
என்றழைக்கப்பட்டது இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம்
.
ஊசியிலை காடு;

இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்.  கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

பியர் சோழா அருவி

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது.  அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.
கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம்

1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார்.
இந்த ஆய்வுக்கூடம் காலை 10 மணி - மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி - 9 மணி.
சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

தூண் பாறைகள்:

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்கள் பல உள்ளன. அவற்றில் முக்கியமானதும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் ஓர் இடம் உண்டு என்றால், அது தூண் பாறைதான். கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த தூண் பாறை. இது மேகங்கள் தொட்டுச் செல்லும் அளவில் உயர்ந்துள்ளது. இரு பிரிவுகளாகப் பிரிந்து வான் உயரக் கம்பீரமாக நிற்கும் இப்பாறைகள் அதன் அமைப்பினால் "தூண் பாறைகள்' என அழைக்கப்படுகின்றன.
இப்பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பாறையின் அமைப்பைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து விடுவர். மாலைப் பொழுதில் அடிக்கும் வெயில் இப்பாறையின் மீதுவிழும்போது பொன் நிறமாகக் காட்சியளிப்பது ஓர் அரிய காட்சியாகும்.
பாம்பர் அருவி:

இந்த அருவி கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
குறிஞ்சி ஆண்டவர் கோவில்:

1934 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்த லீலாவதி என்பவரால் கட்டப்பட்டது இந்தக் கோவில். இந்தக் கோவிலின் முக்கிய கடவுள் குறிஞ்சி ஆண்டவர் என்றழைக்கப்படும் முருகன். தற்போது பழநி தண்டாயுதபாணி திருக்கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்தக் கோவில். 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவை இங்கு பார்க்கலாம்.

செண்பகனூர் அருங்காட்சியகம்:

இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது.  கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும்.
அமைதியான சூழல், அருகே அழகிய ஓடை, சில்லென்ற காற்று வீசுவதால் இந்த இயற்கைக் காட்சியை கண்டு ரசிக்கவும் இயற்கையின் கொடையை அனுபவிக்கவும்
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மனதில் தோன்றும் ஓர் எண்ணம் எதுவென்றால் அடுத்த முறையும் இங்கு வரவேண்டும் என்பது. மேலும் இப் பகுதிகளில் உள்ள மலைத் தோட்டங்கள் இயற்கைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. இப் பகுதியில் காலை முதல் மாலை வரையில் சுற்றுலாப் பயணிகள் வருகை எப்போதும் அதிகம் இருக்கும்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலை, இந்த கோடை விடுமுறையில் நீங்களும் கண்டு மகிழுங்கள்
விழாக்கள் - வருடந்தோறும் மே மாதம் இங்கு கோடை விழா நடத்தப்படுகிறது.
செல்ல உகந்த நேரம் - ஏப்ரல் முதல் ஜூன் வரை
கொடைக்கானலுக்கு திண்டுக்கல், பெரியகுளம், மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
அருகில் உள்ள ரயில் நிலையம் - கொடை ரோடு, 80 கி.மீ தொலைவில் உள்ளது
அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 121 கி.மீ தொலைவில்.உள்ளது

Saturday 21 September 2013

ஆச்சர்ய.. கன்னியாகுமரி..! - சுற்றுலாத்தலங்கள்!


ஆச்சர்ய.. கன்னியாகுமரி..!
 
ஆச்சர்ய.. கன்னியாகுமரி..!

கன்னியாகுமரி ஓர் இயற்க்கையின் ஆச்சர்ய பூமி... முக்கடலும் சங்கமிக்கும் இக்கடற்கரையில்  அன்னை கன்னியாகுமரித் தாயின் திருக்கோயில் அமைத்திருக்கிறது . கடல் நடுவே வீரத்துறவி விவேகானந்தரின் திருக்கோயிலும் ஐய்யன் திருவள்ளுவரின் பிரமாண்டத் திருச்சிலையும் தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் நினைவு மண்டபமும் ஒருசேர ஒரே இடத்தில் அமைந்திருப்பது ஆச்சரியமல்லவா?

அந்த ஆச்சர்ய கன்னியாகுமரியை இப்போது அறிவோம்
 

கன்னியாகுமரியில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கின்றன.  இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழாவாக திகழ்கின்றது கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பவுர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம். பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரையைக் காணக்காண மனதெல்லாம் உற்சாகம் பரவும்
1984ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது. காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது. அதுமட்டுமல்ல அம்மனின் சக்தி பீடங்களில் கன்னியாகுமரியும் ஒன்றாக திகழ்கிறது
 

கன்னியாகுமரி அம்மன் ஆலயம்
 
கன்னியாகுமரியில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது குமரி பகவதி அம்மன் ஆலயம். அன்னை பகவதி திருமணம் செய்து கொள்ளாமல் குமரியாகவே வாழ்வதால் அன்னைக்கு கன்னியாகுமரி என்று பெயர். அதனால் தான் இந்த மாவட்டத்திற்கு கன்னியாகுமரி என்று பெயர் வந்தது. முக்கடலும் சங்கமிக்கும் கடலோரமாக அமைந்துள்ளது இந்தக் கோவில். குமரி அம்மனின் மூக்குத்தி ஒளியால் கவரப்பட்டு வந்த கப்பல் ஒன்று பாறையில் மோதி சிதறி விட்டதாம். அதனால் கடலை நோக்கிய கோவிலின் கருவறை வாசல் மூடப்பட்டிருக்கிறது என்பது ஐதீகம்.
 

திருவள்ளுவர் சிலை

கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக, பிரமாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது. மிகவும் கலைநுணுக்கத்துடன் திருக்குறளில் 133 அதிகாரங்களையும் நினைவுபடுத்தும் வகையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமாய் வானுயர நின்ற வடிவில் எழிலோடு நம் அய்யனின் திருச்சிலை  அமைந்திருக்கிறது   இச்சிலையை அருகில் சென்று பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை திறந்த வெளியில் நிற்பதால் கடல் காற்றாலும், மழை மற்றும் வெயிலாலும் சேதம் அடைகிறது. இதை தடுக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலையை சுற்றிலும் ரசாயன கலவை பூசப்படுகிறது. சிலையில் படிந்துள்ள உப்பு படிவங்கள் உறிஞ்ச பேப்பர் ஒட்டப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. பின்னர் வேக்கர் சிலிகான் மெட்டீரியல் மூலம் சிலை முழுவதும் ரசாயன கலவை பூசப்படுகிறது.
 

காந்தி நினைவு மண்டபம்
 
கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டது. அவருடைய நினைவாக முக்கடலின் கரையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று சூரிய ஒளி நேரடியாக இந்த சாம்பலின் மேல் விழுவது இதன் சிறப்பாகும்
 

விவேகானந்தர் நினைவு மண்டபம்
 
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ளது சுவாமி விவேகானந்தர் மண்டபம். 1892ல் சுவாமி விவேகானந்தர் சிகாகோ உரையை முடித்துக்கொண்டு  குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தவம் செய்தாராம். அவரது நினைவாக அவர் தவம் செய்த பாறையின் மேல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 200 மீட்டர் கடலின் உள்ளே இது அமைந்துள்ளது. மண்டபத்தின் உள்ளே தியான அறையும் அமைந்துள்ளது. வாரத்தின் எல்லா நாட்களும் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பாறைக்கு படகுப் போக்குவரத்து இருக்கிறது. குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.
நாங்களும் ஒருமுறை கன்னியாகுமரி சென்று அந்த ஆச்சர்யத்தை உணருங்கள் 
 
 

கன்னியாகுமரிக்கு அருகே
அமைந்துள்ள சுற்றுலா தளங்கள்

நாகர்கோவில்
சுசீந்திரம்
வட்டக் கோட்டை
பத்மநாபபுரம் அரண்மனை
சிதறால் சமண நினைவு சின்னங்கள்
மாத்தூர் தொட்டிப் பாலம்
திருநந்திக்கரை குகைக் கோவில்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
உதயகிரிக் கோட்டை
உலக்கை அருவி
பேச்சிப்பாறை அணைக்கட்டு
பெருஞ்சாணி அணைக்கட்டு
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
முட்டம் கடற்கரை
தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
சங்குத்துறை கடற்கரை
ஆலஞ்சி கடற்கரை

Friday 20 September 2013

வீரமிகு செஞ்சிக்கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!


   வீரமிகு செஞ்சிக்கோட்டை
 

 
வீரமிகு செஞ்சிக்கோட்டை.
 
தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஊர் , சென்னையில் இருந்து 160 கிமீ  தொலைவில் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.
மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது.

பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்கள் பாதுஷாபாத் என்றார்கள்  ,சோழர்கள் சிங்கபுர நாடு என்று கொண்டாடினார்கள் 
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை.
பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.
 
செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.
 
செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் ஆராய்ந்தால்.. கி.மு. முதல் கி.பி 6 முதல்இங்கு ஜைனர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, பல்லவர் காலத்தில் கிபி 600முதல் 900 முதல் சிங்கபுரத்தில் ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்குத் தெற்கே பனமலைப் பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது. இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கி.பி.580 முதல் 630 வரை விசித்ரசித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. மேலும் செஞ்சி கிழக்கு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகச் சொல்கிறது. தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது. 1014-1190 களில், செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
 
இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விஜயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை வலிமை பொருந்திய கோட்டையாக மாற்றினர். 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர் என்கிறது கல் வெட்டுக்குறிப்பு.  அதுமட்டுமல்ல தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் செஞ்சி விளங்கியதாக கல்வெட்டு செய்தி தெரிவிக்கின்றது
 
புராணப்படி பார்த்தால் செஞ்சி வந்ததிற்கான தெய்வீக தகவல் நம்மை ஆச்சர்யமூட்டுகின்றது
அனுமன் பர்வத மலையை இலங்கைக்கு தன் கையால் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து பிரிந்து விழுந்த சிறிய பகுதிதான் சிரஞ்சீவி மலை என்றும், அதுதான் காலப்போக்கில் செஞ்சி என்று மாறியதாகவும் புராணக்கதை  சொல்கின்றது
.
தேசிங்குராஜாவும் செஞ்சிக் கோட்டையும் 
 
ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை அதனால் குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லிக்கு வர சொன்னார் சுல்தான், அவருக்கு துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தனக்கொரு  வாய்ப்பளிக்கும்படி   தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது .அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்து எல்லோரையும் ஆச்சர்யமூட்டினான்
அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்தார்  சுல்தான். அது மட்டும் அல்ல.. இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் தேசிங்கிற்கு மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய். இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை..
செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அந்த ஆலயத்தில் பள்ளிக்கொண்டிருக்கும்
ஸ்ரீ அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம். அதேப் போன்று எந்தப்போருக்குச்சென்றாலும்  அரங்கனிடம் உத்தரவு பெற்ற பின்பு தான் போருக்கு புறப்படுவாராம் ஒரு முறை ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட நேர்ந்தபோது... தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டாராம். அதற்கு ஸ்ரீஅரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டது அதனால் ... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ஸ்ரீரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணும் போது இது உண்மை சம்பவமே என்பது புலப்படும்
 

செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன..
 
செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

கோட்டையுள் அமைந்துள்ள கல்யாண மண்டபம் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்துள்ளது வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார்.
 
ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான் என்கிறது கல்வெட்டு செய்தி
 
பல்வேறு படையெடுப்புகளை முறியடித்து காலத்தாலும் அழிக்கமுடியாத பொக்கிஷமாக காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை. கடைசி மன்னராக செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு வாழ்ந்த இடம், போரிட்ட இடம், மரணம் தழுவிய இடம், தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என பார்த்து பரவசம் அடையும் வண்ணம் உள்ளது.
வியப்பில் ஆழ்த்தும் கட்டட கலைக்கு எடுத்தக்காட்டாக கலைநயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தை கண்டு வியப்படையாதவர்களே இல்லை.
தேசிங்குராஜன் ஆட்சி செய்த 17-ம் நூற்றாண்டின் வரலாற்றின் காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் இடமாக விளங்கி வருகிறது இந்த செஞ்சிக் கோட்டை.
கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வந்த பின்பு தான் நாம் மீண்டும் இந்த நூற்றாண்டுக்கு திரும்பிவந்த உணர்வு ஏற்படும்

ராஜா கோட்டையின் கீழே பார்க்க வேண்டிய இடங்கள்
 
சிவன் கோயில், அம்மன் ஆலயம், வேலூர் வாயில், சாதத்துல்லாகான் மசூதி, பாண்டிச்சேரி வாயில், வெங்கடரமணர் ஆலயம், சுழலும் பீரங்கிமேடை, உளி வளிக்கும் கல் பட்டறை, கல்யாண மஹால், முகமதுகான் மசூதி, அரண்மணை வளாகம், பணியாளர்கள் தங்கும் அறை, கல்யாண மஹால், குதிரை லாயம், யானைக்குளம், ஆயுதக் கிடங்கு, உடற்பயிற்சி அரங்கம், வெடி மருந்துக் கிடங்கு, நெல் களஞ்சியம், வேணுகோபாலசுவாமி கோயில், ஜும்மா மசூதியின் கலை பாணி, தேசிங்குராஜன் உடல் எரியூட்டப்பட்ட இடம், ஏழு கன்னிமார் கோயில், சர்க்கரை குளம், செட்டிக்குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக்கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.

இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை கொத்தலங்களைப் பார்த்து, வரலாற்றை நேரில் பார்த்த அனுபவத்தை பெற்றிடுங்கள் .
இந்திய தொல்லியல்துறையின் முழு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செஞ்சிக் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சிலவற்றை செய்து பராமரித்து வருகிறது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top