.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 24 September 2013

குளுகுளு குற்றாலம்! - சுற்றுலாத்தலம்!


      குளுகுளு குற்றாலம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் அருவிகள் ஆர்ப்பரித்துக் கொட்டும் குளுகுளு பகுதியே குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் தென்னிந்தியாவின் ‘ஸ்பா’ என்றும் அழைக்கப்படுகிறது. காடு, மலைகளைக் கடந்து வரும் தண்ணீர் பல்வேறு மூலிகைச் செடிகளையும் தழுவி வந்து அருவியாக கொட்டுவதால் இயற்கையிலேயே நோய்தீர்க்கும் குணம் கொண்டது என்பதும் ஒரு நம்பிக்கையாகும்.
 
குற்றாலத்தில் ஒன்பது அருவிகள் உள்ளன. முக்கியமான பேரருவியே குற்றால அருவி என்றழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற துறையில் விழும் தண்ணீர் பொங்கியெழுந்து விரிந்து பரந்து கீழே விழுகிறது. பேரருவிக்கு சற்று மேலே சென்றால் சிற்றருவி. பெயருக்கு ஏற்றாற்போல சிறிய அருவிதான். பேரருவியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அருவி உள்ளது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் இருக்கிறது. சித்ரா பவுர்ணமி நாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் தேனருவி உள்ளது. இங்கு ஏராளமான தேன்கூடுகள் உள்ளதால் தேனருவி என்று பெயர் பெற்றதாக கூறுகின்றனர். தேனருவி அருகே பாலருவி உள்ளது.

 குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் ஐந்தருவி அமைந்துள்ளது. இங்கு ஐந்து கிளைகளாக பிரிந்து அருவி கொட்டுவதால் ஐந்தருவி எனப் பெயர்பெற்றது. ஐந்தருவிக்கு அருகே பழத்தோட்ட அருவி என்றழைக்கப்படும் வி.ஐ.பி அருவி உள்ளது. இங்கு முன் அனுமதி பெற்ற முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே குளிக்க அனுமதி. குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் புலியருவியும், சுமார் 15 கி.மீ தொலைவில் பழைய குற்றாலம் அருவியும் உள்ளது.

 தென்மேற்கு பருவ காலம் தொடங்கியவுடன் ஜூன் மாதத்தில் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து விழத் தொடங்கி விடும். ஆகஸ்ட், செப்டம்பர் வரை இங்கு சீசன் காலம்தான். தமிழக அரசு சார்பில் கலைநிகழ்ச்சிகளுடன் சாரல் விழாவும் குற்றாலத்தில் நடத்தப்படுகிறது. குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) கோவில் உள்ளது. திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியின் நாயகர் இந்த குற்றால நாதர்தான்.

 அருவிகள் ஆர்ப்பரிக்கும் குற்றாலம், மதுரையில் இருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் தென்காசியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. தங்குவதற்கு தனியார் விடுதிகளும், பேரூராட்சி விடுதிகளும் உள்ளன. குற்றாலக் குளியல் உற்சாகத்தின் புதையல் என்பது அதனை அனுபவித்தவர்களின் கருத்தாகும். 
 

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top