.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 6 January 2014

கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?




மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்துவகையான கொட்டைகளையும், பருப்புகளையும் சாப்பிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒவ்வாமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதர்களில் சிலருக்கு இந்தமாதிரியான கொட்டைகளையும் பருப்புகளையும் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

 சிலருக்கு அது தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற சிறு சிறு உபாதைகளை ஏற்படுத்தினாலும் சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய தொண்டை அடைப்பு வரை செல்லக்கூடியதாக இருக்கிறது. ஒரு முறை இந்த ஒவ்வாமை வந்துவிட்டால், இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தொடர் பிரச்சனையாக நீடிக்கிறது. இப்படியான கொட்டைகள், பருப்புகள் ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் இந்தமாதிரியான கொட்டைகளையும், பருப்புகளையும் வாழ்நாள் முழுவதும் சாப்பிடாமல் தவிர்ப்பது மட்டுமே அவர்கள் இந்த ஒவ்வாமை உபாதைகளில் இருந்து விடுபட இருக்கும் ஒரே வழி.
இந்த பின்னணியில் இந்தமாதிரியான ஒவ்வாமை ஒரு சிலருக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும், அதை ஆரம்பகட்டத்திலேயே தடுக்க முடியுமா என்பது குறித்தும் மருத்துவ உலகில் நீண்டநாட்களாகவே தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
சுமார் எட்டாயிரம் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களிடம் ஆய்வு செய்யப்பட்ட மருத்துவர்களின் முடிவுகள், ஜமா குழந்தைநல மருத்து இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் ஆய்வின் முடிவுகளின்படி, கர்பகாலத்தில் தாய்மார்கள் எல்லாவிதமான கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம், கருவிலேயே அந்த குழந்தைகளுக்கு இந்த பருப்புக்கள் மற்றும் கொட்டைகள் பழகிவிடுவதால், அவர்கள் பிறந்து பெரியவர்களாகும்போது அவர்களுக்கு இந்த பருப்புகள் மற்றும் கொட்டைகளினால் ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரியவந்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
அதேசமயம், இந்த ஆய்வின் முடிவுகள் முடிந்த முடிவல்ல என்று ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். காரணம், இது தொடர்பாக ஐக்கிய ராஜ்ஜியம் உட்பட வேறு நாடுகளில் செய்யப்பட்ட வேறுபல ஆய்வுகள், கர்பகால உணவுக்கும் குழந்தைகளின் எதிர்கால ஒவ்வாமைக்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை என்பதை காட்டியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
 
இப்போதைக்கு இப்படியான மாறுபட்ட ஆய்வின் முடிவுகள் தெரிய வந்திருப்பதால், கர்பகால பெண்கள் கொட்டைகள் மற்றும் பருப்புகள் சாப்பிடுவதாலேயே அவர்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இது தொடர்பான ஒவ்வாமை ஏற்படாது என்று உறுதியாக கூறமுடியாது என்றும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த இருவேறுபட்ட ஆய்வின் முடிவுகளுமே அந்தந்த இனக்குழுக்களுக்கு சரியாக இருந்தாலும், உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய பொதுவானதொரு அளவுகோளை இந்த விஷயத்தில் எட்டுவது கடினம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top