கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியும் அம்பிகாபதியும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இஃது அரசியல் சிக்கலாக உருவெடுத்தது. எனவே, குலோத்துங்கனுக்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் நடுவே இடைவெளியைத் தோற்றுவித்தது.
“எப்பொழுதும் தன் மகளின் மேல் நினைவாக இருக்கும் அம்பிகாபதி, சிற்றின்பச் சாயல் ஒரு துளியும் கலங்காமல் இறைவன் மீது நுாறு பாடல்கள் ஒரே முறையில் தொடர்ந்து பாடி முடிக்கவேண்டும். இந்தச் சோதனையில் வெற்றி பெற்றால் அம்பிகாபதிக்கு அமராவதியை மணமுடிப்பது பற்றிச் சிந்திக்கலாம்” என்று குலோத்துங்கன் அம்பிகாபதிக்கு சோதனை வைத்தான்.
குறித்த நாளில் அனைவரும் கூடினர். அம்பிகாபதி சிற்றின்பம் கலங்காமல் பாடல்கள் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தான். மறைவில் இருந்த அமராவதி அம்பிகாபதி ஒவ்வொரு பாடல் பாடி முடித்ததும் எண்ணி வைக்கப்பட்டிருந்த நுாறு மலர்களில் ஒவ்வொரு மலராக எடுத்து வேறுபடுத்தி வைத்தாள். கலத்தில் இருந்த நுாறாவது மலரும் தீர்ந்தது. அம்பிகாபதி நுாறு பாடல்களை வெற்றிகரமாக பாடி முடித்தாயிற்று என்னும் மகிழ்ச்சியில் மறைவில் இருந்த அமராவதி எட்டிப் பார்த்து விடுகிறாள். அவள் முகத்தைப் பார்த்தவுடன் தன்னை மறந்த அம்பிகாபதி,
சற்றே பருத்த தனமே குலங்கத் தரளவடம்
துற்றே அசையக் குழல்ஊச லாடத்துவர் கொள்செவ்வாய்
நல்தேன் ஒழுக நடனசிங்கார நடையழகின்
பொன்தோ் இருக்கத் தலையலங் காரம் பறப்பட்டதே.
என அமராவதியை வருணித்துப் பாடி விடுகின்றான். சோழன் வைத்த சோதனையில் அம்பிகாபதி கடைசியில் மயிரிழையில் தோற்றுப் போனான். ஆம்! அம்பிகாபதி பாடிய காப்புச் செய்யுளையும் போட்டிச் செய்யுளுள் ஒன்றாகக் கொண்டு எண்ணிய அமராவதி 99 வது போட்டிச் செய்யுள் முடிந்தவுடனே 100-வது செய்யுள் முடிந்தது என நினைத்து எட்டிப் பார்த்தாள்.
உண்மையில் சி்ற்றின்பம் கலக்காமல் 99 செய்யுள் பாடி இன்னும் ஒரு செய்யுள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில் அம்பிகாபதி அமராவதியைப் பார்த்துப் பாடிய பாடல் மிகப்பெரிய தலைக்குனிவை கம்பருக்கு ஏற்படுத்தியது. தக்க வாய்ப்பை எதிர்பார்த்திருந்த மன்னனுக்குப பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. சோதனையில் தோற்ற அம்பிகாபதியும், கம்பரையும் சோழ நாட்டிலேயே இருக்கக்கூடாது என்று கூறி நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடுகின்றான்.
0 comments: