.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 December 2013

உறவு - அப்பா ?



மலர் என்று சொல்லுவதை விட ‘பூ’ என்று சொல்லும்பொழுது
அதன் அருகாமை அதிகமாகிறதா? அது போலத்தான் தந்தை
என்ற சொல்லை விட அப்பா என்ற சொல்லில் பாசம் அதிகம்.

அப்பா...

படைப்பதனால் பிரம்மதேவன்.

மூன்று நான்கு வயதுகளில் இருந்து அப்பாவின் தோள் ஏறி
விரல் பிடித்து நடைபழகி என நினைவில் இருந்தும் இல்லா
பருவங்கள்.அதற்கு அப்புறம் தான் அப்பா என்ற ஆளுமையின்
அடர்த்தியை உணரத்தொடங்குகிறோம்.

சக மாணவர்களிடம் எங்க அப்பா பெரிசு..உங்க அப்பா பெரிசா
என்று கைகளை அகல விரித்து அளவுகோல் காட்டி, அப்படியும்
திருப்தி ஏற்படாமல் அழுதுகொண்டே அப்பாவிடம் வந்து
‘நீ தானேப்பா பெரிசு’ என்று கேட்கும் பொழுது பதிலேதும்
சொல்லாமல் சிரிப்பினூடே கன்னத்தைத் தட்டி விட்டுப் போனது
இன்னமும் நினைவில் இருக்கிறது.

அந்தந்த வயதுகளில் நடந்தேறும் பருவ மாற்றங்களை கண்டும்
காணாமல் ஆனால் அக்கறை மட்டும் தொலைக்காமல் கண்கானிப்பது அம்மாக்களை விட அப்பாக்காளே அதிகம்.அம்மாவிற்கு பிள்ளைகள்
மேல் நம்பிக்கை.அப்பாவிற்கு சமூகம் மீது இருக்கும் அவநம்பிக்கை.

ஏதாவது ஒரு தவறு செய்து விட்டு பம்மிப் பதுங்கி அம்மாவின்
பின் நின்ற நாட்கள் ஏராளம்.அப்பொழுதெல்லாம் கண்டிப்பாய்
இருப்பது போலவே கண்களை வைத்துக்கொண்டு கடந்து
போய்விடும் அப்பா,ஏதாவது தவறு செய்து அதனால் மிகுந்த
பிரச்சனை ஏற்படுமோ அல்லது அவ்வளவுதானா என்று வயிற்றில்
புளியைக் கரைக்கும் பொழுது... மிக நிதானமாய், கைகளை தோளில்
போட்டு அறிவுரை கூறிவிட்டுப் போகும் பொழுதுகள்...தண்டனையின் உச்சங்கள்.

என்னதான் அளப்பறிய சாதனைகள் படிப்பிலும் விளையாட்டிலும் வாழ்க்கையிலும் செய்தாலும் ‘ம்’என்ற ஒற்றை வார்த்தையை
கண்முன்னே உதிர்த்துவிட்டு, நாம் இல்லாத தருணங்களில் அக்குவேறு ஆணிவேறாக அந்த சாதனையையோ,செயலையோ பிறரிடம் அலசி
பெருமைப் பட்டுக்கொள்வதில் அப்பாக்களுக்கு ஒரு திருப்தி.

அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் இடைவெளியை புரிந்து கொள்வது மிகக் கடினமான ஒன்று. எரிமலையை விட அதிக உக்கிரமும் இருக்கும்.அதில் படும் பனித்துளி போல உருக்கமும் இருக்கும்.


ஏதாவது கேட்கமாட்டாரா என்று ஏங்கும் மனது பிள்ளைக்கு,ஏதாவது வேண்டுமா என்று கேட்கப்படாதா என்று உருகும் நிலை தந்தைக்கு.
என்றாலும் இது ஒரு புள்ளியில் ஒருபோதும் இணைவதில்லை
இடைவெளியையும் தாண்டி பாசத்தை காட்டத் தயங்கித் தயங்கியே
நாட்கள் தின்று விடுகின்றன பாசத்தை.

பேசிய வார்த்தைகளை விட அப்பாவுடனான மெளனத்தில்
உரையாடியதே அதிகம்.

அதனால்தான் மனதின் ஓரத்தில் எப்பொழுதும் அப்பாவின்
பிம்பம் மட்டும் அகலுவதேயில்லை. உங்களுக்கும் அப்படித்தானா ?

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top