தேவையானவை:
தோசைக்கான மாவுக்கு:
இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 1 கப்,
உளுத்தம்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
உருளைக்கிழங்கு மசாலுக்கு:
சின்ன உருளைக்கிழங்கு - கால் கிலோ,
தக்காளி - 1,
வெங்காயத் தாள் - 1 செடி,
பெரிய வெங்காயம் - 1,
வெந்தயக்கீரை - 1 கட்டு,
மிளகாய்தூள் - கால் டீஸ்பூன்,
தூள் உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 6 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 பாக்கெட்.
செய்முறை:
இட்லி அரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித்தனியே ஊற வைத்து (2 மணி நேரம்), பின் நன்றாக ஆட்டவும். உப்பு சேர்த்து முதல் நாள் மாலையே கலக்கிவைக்கவும் (12 மணி நேரமாவது புளிக்க வேண்டும்).
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நான்காகவோ அல்லது எட்டாகவோ நறுக்கவும். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியையும் வெங்காயத் தாளையும் பொடியாக நறுக்கவும். வெந்தயக் கீரையில் இலைகளை எடுத்து அலசி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயத்தாள், கீரை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதோடு தூள் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வெந்ததும், சற்று சேர்ந்தாற்போல் இருக்கும்போது (வறண்ட பொரியல் மாதிரி இல்லாமல்) இறக்கவும். இதுதான் ஆலு மசாலா.
பின்னர் தோசைக்கல்லை காயவைத்து அதில் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி மூடி, வெந்ததும் அதன் மேல் சிறிது வெண்ணெயை எடுத்து ஸ்பூனால் தடவி, ஆலு மசாலாவை ஒரு பாதியில் வைத்து மறு பாதி தோசையை அதன்மேல் மடக்கி இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
வெந்தயக்கீரையும் வெங்காயத்தாளும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்குமான சத்தான உணவு இது.
0 comments: