வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ்மொழி பரவிட வகைசெய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இவ்விருது தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும். விருது பெறுபவருக்கு விருதுத் தொகை ரூ.1 லட்சத்துடன் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். 2013ஆம் ஆண்டிற்கான விருது எதிர்வரும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு அன்று (14.4.2014) வழங்கப்படவுள்ளது.
போட்டிக்குரிய மென்பொருள்கள் 2010, 2011, 2012ஆம் ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள், ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’- 2013-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.org) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வரும் 31-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
0 comments: