.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 28 November 2013

வாழக்கற்றுக்கொள்ளுங்கள்...?

தண்ணீர் ஏன் அழுக்கடைவதில்லை? ஏனென்றால் அது ஓடிக்கொண்டே இருப்பதால். தன்ணீர் ஏன் அழுகிப் போவதில்லை? ஏனென்றால் அது ஓடிக் கொண்டிருப்பதால் நீர் ஆறாக ஒடி, நதியாகி, கடலாகி பிறகு பெரிய சமுத்திரமாக எப்படி மாறுகிறது? அது ஓடிக் கொண்டே இருப்பதால். அதனால் மனிதனே நீ தேங்கி நிற்காதே. ஓடிக்கொண்டே இரு. முன்னேறிக் கொண்டே இரு.

பொதுவாக இன்றைய இளைஞர்களிடம் காணப்படும் மிக மோசமான குணம் என்ன வென்றால் சீக்கிரம் மனத்தளர்ச்சியடைந்துவிடுவது தான். தன்னம்பிக்கையுடன் போராடுவதில் சில சமயம் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது.. வாழ்வு என்பது ஏதோ வந்ததைப் பெற்றுக் கொள்வதல்ல. வாழ்வு நீரோட்டமல்ல வாழ்வு எதிர்நீச்சல். அது ஒரு போராட்டம். வாழ்வு ஒரு துடிப்பு. அடங்கி ஒடுங்கி அமிழ்ந்து போவதல்ல தாங்கள் செய்யும் வேலையில் தான் வேலைபளு, மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்று கூறிக் கொள்ளும் இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டியது நிறைய உள்ளது. எதில் தான் இல்லை கஷ்டம். துப்புரவு தொழிலாளி முதல் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறையில் வேலை செய்யும் பெரிய அதிகாரி வரை அவரவர் தொழிலில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. அதை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உளளது.

உண்மையான மகிழ்ச்சி என்பது வெற்றியில் இல்லை. அதைப் பெறுவதற்காக நாம் மேற்கொள்ளு கின்ற கடின உழைப்பிலேயே உள்ளது என்கிறார் பெர்னாட்ஷா. சிரத்தை இல்லாமல் எதையும் அடைய முடியாது. ஓர் இந்தியன் இரண்டு ஜப்பானியனின் மூளைபலம் கொண்டவன். ஆனால் இரண்டு இந்தியர்களின் வேலையை ஒரு ஜப்பானியன் செய்து வருகிறான் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார். காரணம் என்னவென்றால் இந்தியர்களிடம் சிரத்தையோடு வேலை செய்யும் மனப்பக்குவம் இல்லாமலிருப்பதே என்றும் கண்டறிந்தார். தன்மீது நம்பிக்கையும் தான் செய்யப் போகிறகாரியத்தின் மீது உண்மையான ஆர்வமும் இல்லாததுதான் சிரத்தை இல்லாமல் போவதன் காரணம் ஆகும். வெளியில் இருந்து உனக்குள் திணிக்கப்படும் எந்த உந்துதலும் உண்மையான ஆர்வமாக மாறமுடியாது. உன் ஆர்வமும் நம்பிக்கையும் உனக்குள்ளே இருந்து வர வேண்டும்.

வாழ்க்கையில் நமக்கு துன்பங்கள் வருவது அவற்றைநாம் அனுபவிப்பதற்காக அல்ல. அரிசிக்குப் பாதுகாப்பாக உமி இருப்பது போல, பலாப்பழத்துக்குப் பாதுகாப்பாக அதன் தோல் இருப்பது போல, ரோஜா பூவுக்குப் பாதுகாப்பாக முள் இருப்பது போல நாம் அடையக் கூடிய இன்பங்களுக்கு பாதுகாப்பாக இறைவன் துன்பங்களை அமைத்து வைத்திருக்கிறான். இன்று, தற்கொலைகள் அதிகமாகி வருவதற்கு காரணம் தனக்கு வரும் துன்பம்தான் உலகிலேயே பெரியது என்று தாங்களாகவே முடிவு செய்து கொண்டு அவசர அவசரமாக உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். “தம்மிலும் கீழோரை நோக்குக” என்றவரிகளை ஏனோ மறந்து விடுகிறார்கள்.

தேர்வில் தோல்வி என்றால் தற்கொலை. காதலில் தோல்வி-அது வெறும் இனக்கவர்ச்சி யாக கூட இருக்கலாம். இவர்களாகவே அதை தெய்வீகக் காதலாக நினைத்துக் கொண்டு அந்த மாயையிலிருந்து விடுபடாமல் இறைவன் கொடுத்த அற்புதமான மானிடப் பிறவியை அற்பக் காரணங்களுக்காக மாய்த்துக் கொள்கிறார்கள். என்னே! இவர்களின் பரிதாப நிலை! மகிழ்ச்சியைத் தேடி அலையக்கூடாது. துன்பத்தைக் கண்டு ஓடக் கூடாது. இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டாலே நிம்மதியான வாழ்வு நிலைத்து நிற்கும்.

தள்ளி நின்று பார்க்கும் வரை எல்லாமே பிரச்சனைதான். துணிந்து நெருங்கினால் அது உன் நண்பனாகக் கூட மாறிவிடும். “நான் எதை மேற்கொண்டேனோ அதில் வெற்றி பெற்றேன்”, காரணம் அதை நான் மனப்பூர்வமாக விரும்பினேன், என்றான் மாவீரன் நெப்போலியன். அவனது வளர்ச்சிக்கு அவனது ஈடுபாடே காரணமாக அமைந்திருந்தது. இது வரைதான் என்னால் முடியும். இதற்கு மேல் என்னால் முடியாது என்று மனதை மட்டப்படுத்தி வைத்திருப்பதை விட்டுவிடுங்கள். “வானமே எல்லை” என்று யாராவது சொன்னால், “வானந்தானா எல்லை? என்றகேள்வி கேளுங்கள்.

ஒரே சிந்தையில் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அந்த வேலையின் தரம் சற்றுக் குறைய நேரிடலாம். அதனால் உங்கள் மனதை கொஞ்சம் வேறு மகிழ்ச்சியான நிலைக்கு மாற்றுங்கள். அதாவது நல்ல இசையைக் கேட்பது, நல்ல புத்தகங்களைப் படிப்பது, கொஞ்சம் காலாற எங்கேனும் நடந்துவிட்டு வருவது போன்றவை. “Learn to Combine relaxation with activity” என்று கூறுகிறார் ஆல்டஸ் என்ற அறிஞர்.

வாழ்க்கை என்பது வாழ்ந்து தீர வேண்டிய ஒரு வி‘யம். அதை இப்படித்தான் வாழணும் என்று மனதில் ஒரு வரைமுறையை, நியதியை, சில கொள்கைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு வாழ வேண்டுமே தவிர கற்பனையாக மனதில் சஞ்சாரம் செய்வதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. அந்த கற்பனை நடைமுறைக்கு வராதபோது, மனம் ஏமாற்றம் அடைந்து, அதை தோல்வியாக எடுத்துக் கொள்கிறது.

தன் மீது எறியப்படும் கற்களை தான் கட்டும் வீட்டுக்கு அடிக்கல்லாகப் பயன்படுத்திக் கொள்கிறவன் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருப்பான். வாழ்க்கை சிலருக்கு இனிமையாக இருப்பதற்கு காரணம் அவர்களது அணுகுமுறையும் சூழ்நிலைகளும் தான். சூழ்நிலைகளை நாம் குறைகூறமுடியாது. அணுகுமுறை தவறாக இருக்கலாம்.

நாம் வாழ்க்கையை நேசிக்கப் பழக வேண்டும். அதற்கு முதலில் உங்களையே நீங்கள் நேசிக்கப் பழக வேண்டும். உங்களை நீங்கள் நேசிக்கப் பழகினால் உலகம் உங்களுக்கு இனிமையானதாக காட்சியளிக்கும். அப்பொழுது நீங்கள் எல்லாவற்றையும் ரசிக்க ஆரம்பிப்பீர்கள். உங்களைச் சுற்றி இருக்கும் எல்லாமே உங்களுக்கு ஒரு கவிதையாக தோன்றும்.

துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்
 

துணிவால் துன்பங்களை தூளாக்க வேண்டும்
 

உபத்திரவங்கள் வந்து கொண்டே இருக்கும்
 

உழைப்பால் அவைகளை உதைத்து தள்ள வேண்டும்
 

மனக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்
 

மதி நுட்பத்தால் அவைகளை மடக்கித்தள்ள வேண்டும்
 

பணக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்
 

படாதபாடு பட்டு பணக்கஷ்டத்தை துரத்தி அடிக்க வேண்டும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top