.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 25 November 2013

உழைக்காமல் இருப் பவர்களால் உயர முடியாது - குட்டிக்கதைகள்!

மகிழ்ச்சி என்பது விளைவு என நினைப்பதால்தான், நாம் திரும்பிப் பார்க்கும்போது அதிக நாட்கள் இன்பமாக இருந் ததுபோலத் தோன்றுவதில்லை. மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நிகழ்விலும் அடங்கியிருக்கிறது!

அதிக மதிப்பெண்ணுக்காக இல்லாமல், படிப்பதே மகிழ்ச்சி தருவதாக ஆக வேண்டும்; சம்பளம் மட்டுமின்றி, பணிபுரிவதே ஆனந்தம் தருவதாக அமைய வேண்டும்! இரவு என்பது இல்லையெனில், விடியலில் பறவைகளின் இசை காதுகளில் விழ வாய்ப்பில்லை. நுணுக்கமான பணியைச் செய்து முடித்து, காலாற நடந்து, குளிர்ந்த காற்றைச் சுவாசித்து மகிழ... அதில் கிடைக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இப்படிச் சின்னச் சின்ன நிகழ்வுகளிலும் அடங்கியிருக்கும் மகிழ்ச்சியைத் தவறவிடுபவர்கள், பெரிய இன்பம் வந்தாலும் அதை நுகரமுடியாமல் நுரைதள்ளிவிடுவார்கள். பசிக்காமல் சாப்பிட்டு, உழைக்காமல் ஓய்வெ டுத்து, கீழே விழ பயந்து, முயற்சி எடுக்க மறந்து, பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து, த்ரில் ஏற்படுத்தும் தருணங்களை இழந்தவர் கள், கடைசி கட்டத்தில் வருத்தப்படுவார்கள். 

அடுத்தவர்களது அளவுகோல்களில் நமது மகிழ்ச்சியை அளப்பது அவசியமில்லை; அடுத்தவர்களுக்கு நிரூபிப்பதற்காக நாம் இன்புற்றிருக்க வேண்டிய தேவையும் இல்லை. மகிழ்ச்சியை மின்னலாக எண்ணி, அதை அசைபோட்டுத் திருப்தியடைவார்கள் சிலர். கடந்த காலம் மட்டுமே நிம்மதியானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருந்ததாக எண்ணிப் பழங்கதைகள் பேசித் திரிவார்கள் சிலர். மகிழ்ச்சி என்பது இறந்தகால ஏக்கமும் அல்ல; எதிர்காலக் கனவும் அல்ல. அது, நிகழ்கால நிதர்சனம்!

மகிழ்ச்சி ஓர் உணர்வு! அதை நேர்வழியில் அடையும்போதுதான் நீடித்து நிற்கும். உழைக்காமல் கிடைக்கும் பணமும், தகுதியின்றிக் கிடைக்கும் புகழும் சிறு காற்றின் சலனத்துக்கே தாக்குப்பிடிக்காமல் தடுமாறி விழுந்துவிடும். 'எனில், குறுக்கு வழிகளே வாழ்வில் தேவையில்லையா?' என்று சிலர் கேட்கலாம். ஒரே யரு விதிவிலக்கு உண்டு. நம்மை வீழ்த்த எவரேனும் குறுக்கு வழியைக் கையாண்டால், அந்த வியூகத்தைத் தவிர்க்க, வேறு வழி இல்லாத பட்சத்தில் சில குறுக்குவழிகளையும் தந்திரங்களையும் கையாளலாம். அதனால்தான் மகா பாரதத்தில், சில சந்தர்ப்பங்களில் ஸ்ரீகிருஷ்ணரும் தந்திரங்களைக் கையாண்டார்.

ஆனால், அவை அனைத்தும் போர் நியதிகளுக்கு உட்பட்டவையே! ரதத்தைப் பெருவிரலால் அழுத்தியதும், மெழுகாலான பீமனின் சிலையைச் செய்து திருதராஷ்டிரன் முன் நிறுத்தி யதும் அதனால்தான்!

கிழக்கு நாடுகளில், குறுக்குவழியைக் குயுக்தியாக முறியடிப்பது குறித்து ஒரு கதை உண்டு. 

படைபலம் மிகுந்த ஜாதுகார் எனும் மன்னனை வீழ்த்த விரும் பினான் ரத்னபுரியில் இருந்த சமத்கார் என்ற தந்திரசாலி. ஆனால், ரத்னபுரியின் படைத் தளபதியோ, ஒரு சாதாரண ஆசாமியான சமத்காரின் உதவி பெற்று ஜாதுகாரை வீழ்த்துவதா என நினைத்து வாளாவிருந்தான். சமத்கார் பலமுறை முயற்சித்தும், தன்னைச் சந்தித்துப் பேசக்கூட அனுமதி வழங்கவில்லை தளபதி.  இதனால் சமத்கார் எரிச்சலுற்றான்.

அவன், தளபதியின் வலக்கரமாக திகழும் விமல்கீர்த்தி எனும் வீரனைச் சந்தித்து, ''உன் தளபதி புத்திசாலியாக இருக்கலாம். ஆனால், அவரால் ஜாது காரை ஒருபோதும் வீழ்த்தமுடியாது' என்றான். நிச்சயம் இந்தத் தகவல் தளபதியின் காதுக்குப் போகும் என்று சமத்காருக்குத் தெரியும். அதன்படியே நடந்தது. விமல்கீர்த்தி சொன்ன தகவலைக் கேட்டுக் கொதித்துப் போன தளபதி, சமத்காரை அவமானப்படுத்த வேண்டுமென முடிவு செய்தான்.

மறுநாள், படைத்தலைவர்களைக் கொண்டு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தான். சமத்காரையும் வரவழைத் தான். அவனிடம், 'கடற்போரில் சக்தி வாய்ந்த படை ஆயுதம் எது?' என்று தளபதி கேட்க, ''அம்புகள்'' என்றான் சமத்கார்.

''உண்மைதான்! எங்களிடம் அம்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஜாதுகாருடன் மோத பத்தாயிரம் அம்புகளாவது தேவை. பத்து நாட்களுக்குள் அவற்றைச் செய்து தர உன்னால் முடியுமா?'' என்று கேட்டான் தளபதி.

உடனே, ''பத்து நாட்கள் அதிகம்! மூன்றே நாட்களில் முடித்துத் தருகிறேன்'' என்றான் சமத்கார்.

இதைக் கேட்ட தளபதி, ''நகைச்சுவையான உறுதிமொழிகளுக்குப் படைக்களத்தில் இடம் இல்லை'' என்று கோபமும் கேலியுமாகச் சொல்ல, ''உங்களிடம் விதூஷகம் செய்ய முடியுமா? மூன்றே நாட்களில் அம்புகளைத் தயார் செய்து தரவில்லையெனில், என்ன தண்டனை தந்தாலும் ஏற்கிறேன்'' என்றான் சமத்கார்.

அதையடுத்து, 'சமத்காருக்கு அம்பு தயாரிக்கும் மூலப் பொருட்களைப் போதிய அளவுக்குத் தரவேண்டாம்; அம்பு செய்பவர்கள் தொழிலில் வேகம் காட்டவேண்டாம்' என்று ரகசிய ஆணையிட்டான் தளபதி.

சமத்கார் கலங்கவில்லை. விமல்கீர்த் தியை அழைத்து, ''20 படகுகள் வேண்டும். அவற்றில் வைக்கோல் அடைத்து, கறுப்புத் துணியால் தைக்கப்பட்ட 50 மனித உரு வங்களைச் செய்து வைக்கவேண்டும். தவிர, ஒவ்வொரு படகுக்கும் 30 பேர் தேவை. இந்தத் திட்டம் தளபதிக்குத் தெரி யக்கூடாது'' என்று கேட்டுக்கொண்டான்.

மூன்றாம் நாள், 20 படகுகளும் வலு வான கயிற்றால் கட்டப்பட்டு, ஜாதுகாரின் படை முகாமுக்குப் பக்கத்திலிருந்த நதிக் கரையின் உட்பகுதியில் வரிசையாக நிறுத் தப்பட்டன. கடுமையான மூடுபனியில், அவற்றில் என்ன இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்தப் படகுகள் மெள்ள நகர்ந்து, படைமுகாமுக்குத் தெரிகிற தூரத்தில் வந்ததும், ஒவ்வொரு படகிலுமிருந்த 30 பேரையும், போர்முரசு கொட்ட உத்தரவிட்டான் சமத்கார். உடனே அவர்கள், 'எதிரிகள் தங்கள் கப்பல்களில் வந்து தாக்கினால் என்ன செய் வது?'' என்று பதைபதைக்க, 'இந்த மூடு பனியில் அப்படியரு முட்டாள்தனத்தை ஜாதுகார் செய்ய முற்படமாட்டான்' என்றான் சமத்கார் உறுதியாக.

போர்முழக்கத்தைக் கேட்டதும், தங்கள் முகாம் மீது பயங்கர தாக்குதலை எதிர் பார்த்த ஜாதுகார், கரையில் இருந்தபடியே படகுகளை நோக்கி அம்புகள் எய்து தாக்குதல் நடத்துமாறு தன் சிப்பாய்களுக்குக் கட்டளை இட்டான். அதேநேரம், தனது படகுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக முகாமை நோக்கி முன்னேறும்படி பணித் தான் சமத்கார். போர் முழக்கத்துடன் மெள்ள அவனது படகுகள் முன்னேற, எதிர்த்திசையில் இருந்து அம்புமாரிப் பொழிந்துகொண்டு இருந்தது.

நள்ளிரவில் பனி விலகத் தொடங்கியதும், கரைக்குத் திரும்பும்படி படகுகளுக்கு ஆணையிட்டான் சமத்கார். அவனது திட்டம் நிறைவேறியது. ஒவ்வொரு படகிலும் இருந்த வைக்கோல் மனிதர்களின் உடம்பில் ஆயிரக் கணக்கான அம்புகள்! மறுநாள், 20,000-க்கும் மேற்பட்ட அம்புகளைத் தளபதியிடம் கொடுத்தான் சமத்கார்.

பின்னர் விமல்கீர்த்தி சமத்காரிடம், ''நேற்று கடுமை யான மூடுபனி இருக்கும் என்பதை எப்படி கணித்தாய்?'' என வியப்புடன் கேட்டான். ''பூகோளத்தையும் வானியலையும் அறியாதவன் தளபதியாக இருக்க முடியாது. நேற்று மூடுபனி கடுமையாக இருக்கும் என்பதை மூன்று நாட்களுக்கு முன்பே கணித்துவிட்டேன். உங்கள் தளபதி போதுமான ஒத்துழைப்பு தர மாட்டார் என்று எனக்குத் தெரியும். எனது முயற்சியில் நான் தோற்று அவமானப்படவேண்டும் என்பதே அவரது நோக்கம். எனவே, அவரது தந்திரத்தை வெல்ல, நானும் தந்திர முயற்சியைக் கையாண்டேன். போட்டி என்று வந்துவிட்டால், அடுத்தவர்களது தந்திரத்தைவிட, நமது தந்திரத்தைத் தூக்கிப்பிடிப்பது அவசியம்!'' என்றான் சமத்கார்.

கடைசியில், தளபதி தனது முக்கிய ஆலோசகராக சமத்காரை நியமித்து, ஜாதுகாரை வீழ்த்தினான்.

வேறு வழியில்லாத நிலையில் பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதமே தந்திரம். ஆனால், அதையே நம்பிக்கொண்டு, 'வினாத்தாள் வெளியாகிவிடும்' என்று எதிர்பார்க்கும் மாணவனைப்போல உழைக்காமல் இருப் பவர்களால் உயர முடியாது. சின்ன வயதிலிருந்தே உழைப் பின் இனிமையை நாம் சொல்லிக் கொடுக்க மறந்துவிட் டோம். நமது பாடத் திட்டத்தில் வியர்வைக்கு வெகு மதி இல்லாமல் போய்விட்டது. 'உடலுழைப்பு முக்கி யம் என்பதால், அது வகுப்பறையில் சொல்லித் தரப் படவேண்டும்' என மகாத்மா காந்தி வலியுறுத்திய உயர்நெறியை நாம் காற்றில் பறக்க விட்டுவிட்டோம்.

மனனம் செய்வது மட்டுமே கல்வி என மாணவர்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர். மரம் நட்டு வளர்க்கவோ, நீரூற்றி மகிழவோ, பாதை அமைத்துப் பழகவோ மாண வர்களுக்குச் சற்றும் இடம் தராத கல்வி முறையே இன்று அனுசரிக்கப்படுகிறது. கான்கிரீட் காடுகளாக வளர்ந்த பள்ளிக்கூடங்களின் இடுப்பில், இவற்றுக்கெல்லாம் இடமும் இல்லை. பல பள்ளிகளில் ஓடி விளையாடவே இடம் இல்லையே!

தனித்து இயங்கும் வகையில் சுயச் சார்புடன் வளர் கிற குழந்தைகளே எதிர்காலத்தில் தாக்குப் பிடிக்க முடியும். எவர் தயவுமின்றி, தங்கள் வாழ்வை தாங் களே நிர்வகிக்கும் திறன் பெற்றவர்களால் மட்டுமே வாழ்வில் எப்போதும் இன்புற்றிருக்க முடியும். 

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top