.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 13 November 2013

இறந்தார்… ஆனால் இறக்கவில்லை!

இறந்தார்… ஆனால் இறக்கவில்லை! உலகம் முழுதும் நடந்த உண்மைச் சம்பவங்கள்!!!

நேற்றைக்கு நடிகை கனகாவை இறந்ததாக செய்தி வாசித்தார்கள் இல்லையா? இப்படி உலகம் முழுக்க யாருக்கெல்லாம் செய்தி வாசித்து இருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

* குத்தூசி ஒரு சிலை சிதிலமடைந்து கடந்ததைப்பற்றி எழுதுகிறபொழுது காலஞ்சென்ற மாணிக்கவேல் நாயக்கர் என்று எழுதி விட்டார். அவருக்கு இதழ் வெளியான காலையில் ஒரு அழைப்பு, “நான்தான் காலஞ்சென்ற மாணிக்கவேல் நாயக்கர் பேசுகிறேன்” என்று.

* அமெரிக்காவின் எழுத்துலக பிதாமகர் என புகழப்படும் மார்க் ட்வைன் உயிரோடு இருக்கும் பொழுதே அவர் இறந்து விட்டதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட, “கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட இறுதி அஞ்சலி” என நையாண்டி செய்தார் அவர்.

* உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரசல் ஜப்பானிய பத்திரிகைக்கு பேட்டி தரமாட்டேன் என்று மறுக்க, மனிதருக்கு இரங்கல் அஞ்சலி எழுதிவிட்டார்கள்.

* பாடகி மடோனா இறந்துவிட்டதாக பிபிசி யூட்யூப் தளத்தில் ஒரு வீடியோ வெளியானது. பின்னர் பார்த்தால் அது அவர்களின் சேகரிப்பில் இருந்தது என்பது தெரிந்தது. ஒருவர் சாவதற்கு முன்னமே முன்யோசனையாக வீடியோ தயார் பண்ணி வைத்து இருக்கிறார்கள். இதைப்பற்றி எதுவுமே வாயை திறக்கவில்லை பிபிசி.

* ரூட்யார்ட் கிப்ளிங் உயிரோடு இருக்கும்பொழுதே இறந்து விட்டதாக ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட… அவர், “நான் இறந்து விட்டேன்; உங்களின் சந்தாதாரர் பட்டியலில் இருந்து என்னை நீக்கி விடுங்கள்!” என்று கடிதம் எழுதினார்.

* பிடல் கேஸ்ட்ரோ, போப் ஜான் பால் இருவரும் உயிரோடு இருக்கும்பொழுதே இறந்ததாக சிஎன்என் அறிவித்தது. அதிலும் பிடல் கேஸ்ட்ரோவின் மரணத்தை ரீகனின் மரணத்தோடு சேர்த்து வெளியிட்டது. உண்மையில் இருவரும் இறக்கவில்லை. கேஸ்ட்ரோவை தடகள வீரர், சினிமா நட்சத்திரம் என்று வேறு எழுதிவிட்டார்கள்.

* ஜெயப்ரகாஷ் நாராயண் இறந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவித்து, பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டன. உளவுத்துறை தலைவர் மருத்துவமனையில் ஜெபியைப் போல இருந்த இன்னொருவரை பார்த்துவிட்டு வந்து கொடுத்த தகவலால் வந்த வினை!

* கொலரிட்ஜ் எனும் கவிஞர் இறந்துவிட்டதாக வந்த செய்தியை ஒருவர் வாசித்துக்கொண்டு இருந்தார். “அவர் ஒரு மாபெரும் கவிஞர்; சிறப்பாக அவரின் ரீமொர்ஸ் நாடகம் வெற்றி பெற்ற பின் அவர் தூக்கில் தொங்கியது விந்தையானது!” என்று அவர் வாசிக்க, கொலரிட்ஜ், “அதை விட விந்தையானது, அவர் உங்கள் முன் நிற்பது!” என்றார். இவரின் டி ஷர்ட்டை திருடிப்போன திருடன் அதை அணிந்து கொண்டு தூக்கில் தொங்கி விட்டான். அந்த சட்டையில் இவரின் பெயர் பொறித்திருந்ததில் வந்த சிக்கல் அது.

ஆல்பிரெட் நோபலின் தம்பி லுடிவிக் வெடிவிபத்தில் இறந்துபோக, ‘மரணத்தின் வியாபாரி மரணம்!’ என்று பிரெஞ்சு இதழ்கள் தலைப்பு செய்தி வாசிக்க, அப்பொழுது மனம் வருந்தி நோபல் பரிசை உருவாக்கினார் ஆல்பிரெட் நோபல்!

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top